Published:Updated:

டெல்லி கலவரம்: 2 சேனல்களுக்கு 48 மணி நேர தடை விதிப்பு... உடனடியாக நீக்கப்பட்டது ஏன்?

சேனலுக்கு தடை விதித்த போது...
சேனலுக்கு தடை விதித்த போது...

2016-ம் ஆண்டு பதான்கோட் தாக்குதலை `லைவ்' வாக ஒளிபரப்பிய என்.டி.டி.வி மீது இதே போன்ற தடையுத்தரவு பாய்ந்தது. அதற்கடுத்து இப்போதுதான் இப்படி இரண்டு சேனல்கள் மீது 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், டெல்லியில் பெரும் கலவரம் வெடித்து 53 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கிய கலவரம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவில் இருந்தபோது, பூதாகரமாக வெடித்தது. கலவரம் தொடர்பான செய்திகளை அனைத்து மீடியாக்களும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பின. இதனால், பி.ஜே.பி அரசு குறிப்பிட்ட சில மீடியாக்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்தது. இதற்கிடையே, கலவரச் செய்திகளை ஒருதலைபட்சமாக வெளியிட்டதாக மலையாளச் சேனல்களான `ஏசியாநெட்' மற்றும் `மீடியா ஒன்' நிறுவனங்களுக்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்
AP

இதுதொடர்பாக, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்து அனுப்பியுள்ள உத்தரவில், ``ஏசியாநெட், மீடியா ஒன் நிறுவனங்கள் மக்களிடையே வெறுப்பை விதைக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட சாராரை குற்றம் சுமத்தும் வகையில், செய்திகளை ஒருதலைப்பட்சமாக வெளியிட்டுள்ளன. குறிப்பிட்ட சமூக மக்களின் வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவது போன்ற காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்பி மிகைப்படுத்திக் காட்டி ஒரு சாராருக்கு ஆதரவாகச் செயல்பட்டதுபோல தோன்றுகிறது. மீடியா ஒன் சேனல் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையின் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்துவதுபோல தெரிகிறது. செய்தியாளர்கள் செய்தியைத் தொகுத்து வழங்கியபோது, இரு சமூகத்து மக்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 6-ம் தேதி காலை 7.30 மணி முதல் மார்ச் 8-ம் தேதி காலை 7.30 வரை இந்தச் சேனல்களுக்குத் தடை விதிப்பதாக மத்திய செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. தடையுத்தரவால் நேற்று இரவு இரு சேனல்களும் தெரியவில்லை. 2016-ம் ஆண்டு பதான்கோட் தாக்குதலை `லைவ்' வாக ஒளிபரப்பிய என்.டி.டி.வி மீது இதே போன்ற தடையுத்தரவு பாய்ந்தது. அதற்கடுத்து இப்போதுதான் இப்படி இரண்டு சேனல்கள் மீது 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்

இந்தத் தடைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மீடியா ஒன் எடிட்டர் தாமஸ் கூறுகையில், ``எமர்ஜென்சி காலத்தில்தான் மீடியாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது எமர்ஜென்சியா நடந்துகொண்டிருக்கிறது... அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டால், மீடியா நிறுவனங்கள் மீது தடை விதிப்பது எந்த விதத்தில் நியாயம்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஏசியாநெட் ஆசிரியர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தடையுத்தரவு குறித்து உடனடியாகக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

மீடியா ஒன் தொலைக்காட்சி மாத்திமம் பிராட்காஸ்டிங் நிறுவனத்துக்குச் சொந்தமானது. ஜமாத் இ இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்பு இந்த மாத்திமம் குழுமத்துக்கு நிதியுதவி செய்வதாகச் சொல்லப்படுகிறது. அதேவேளையில், ஏசியாநெட் தொலைக்காட்சியின் பின்னணியில், பாரதிய ஜனதா கட்சி எம்.பி ராஜீவ் சந்திரசேகர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு மலையாள சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஊடகத்துறையில் கடும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. தேசிய ஊடகங்களும் தடையுத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

தடையைச் சந்தித்த மீடியாக்கள்
தடையைச் சந்தித்த மீடியாக்கள்

தடையுத்தரவு குறித்த தகவல் வெளியானதுமே கேரளாவில் பல்வேறு இடங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். Kerala Union of Working Journalists (KUWJ) அமைப்பு `இது அறிவிக்கப்பட்டாத எமர்ஜென்சி' என்று கண்டனம் தெரிவித்துள்ளது. `தடையை நீக்கவில்லையென்றால் மார்ச் 7-ம் தேதி சனிக்கிழமை மாநிலம் முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்' என்றும் அறிவித்தது. தடைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இரு சேனல்களுக்கும் விதிக்கப்பட்ட தடை 24 மணி நேரத்தில் நீக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி-யும் ஏசியாநெட்டின் மறைமுக உரிமையாளராகக் கருதப்படும் ராஜீவ் சந்திரசேகர் எடுத்த சமாதான முயற்சி காரணமாகவும் மத்திய அரசு தடையை நீக்கிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தி எதிர்ப்புப் போராளி, துணைப் பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர்... க.அன்பழகனின் வாழ்க்கைக் குறிப்பு!

இவற்றில் ஏசியாநெட் தொலைக்காட்சி 7-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவிலும் மீடியா ஒன் 7-ம் தேதி காலை 9. 40 மணியளவிலும் மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்கின. பொதுவாகவே, மீடியாக்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதாகவே மோடி அரசு நினைக்கிறதாம். அதனால், மீடியாக்களுக்கு கடிவாளம் போடுவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த விவகாரம் குறித்து ஃப்ரன்ட் லைன் இதழின் ஆசிரியர் விஜய் சங்கரிடத்தில் பேசியபோது, ``இந்தக் காலத்தில் தொலைக்காட்சிகள் அதிகப்படியான மக்களைச் சென்றடைகின்றன. கிட்டத்தட்ட இந்தியாவில் 800 சேனல்கள் செயல்படுகின்றன. தொலைக்காட்சியில் உண்மையை மட்டுமே காண்பிக்க முடியும். தொலைக்காட்சிகளை தடை செய்வது பயமுறுத்துவதற்கான விஷயம்தான். பல விஷயங்களுக்கு சேனல்கள் அரசை சார்ந்துதான் உள்ளன. `பிரதமரே வருத்தப்பட்டுள்ளார்' என்று பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகிறார். தற்போது, சர்வதேச அளவில் டெல்லி கலவரம் பிரச்னையாக மாறிவிட்டது. இது ஆளும்கட்சிக்கு தர்மசங்டமாகவும் அவமானமாகவும் அமைந்துவிட்டது. மனித உரிமைகள் மீறப்படும்போது, உலக நாடுகளின் கவனம் திரும்பத்தான் செய்யும். வன்முறைக்கான சூழலை உருவாக்குவதும் தவறுதானே. இரு சமூகங்களுக்குள் பகை உணர்வு இருக்கும்போது சின்ன விஷயம் பெரிதாக வெடித்துவிடும்.

மீடியாக்கள் வன்முறை காட்சிகளை ஒளிபரப்பும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும்.
விஜய்சங்கர் , ஆசிரியர் ஃப்ரன்ட் லைன்

வன்முறையை, வெறுப்புணர்வை வளர்த்து ஒரு பிரச்னையைப் பெரிதாக மாற்றுவதற்கு என்றே தனியாக அமைப்புகளும் செயல்படுகின்றன. ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில் ஒரு வன்முறை காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானால், அது சமூகவலைதளங்கள் வழியாகப் பல கோடி பேரை சென்றடைந்து விடும். அவற்றை அழிக்கவும் முடியாது. அதனால், மீடியாக்களும் கலரவச் சூழலில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது நல்லது. தொலைக்காட்சி மீடியா ஏற்படுத்தும் தாக்கமும் மிக அதிகம். வன்முறையான காட்சிகளை ஒளிபரப்புவதில் அதிக கவனம் வேண்டும். அதே சமயம் உண்மையையும் காட்ட வேண்டும். அதற்காகத்தான் `எடிட்டிங்' என்ற ஒரு விஷயம் உள்ளது. அதே வேளையில், நமது நாட்டில் நடக்கும் விஷயங்களை வெளியே தெரியக் கூடாது என்று நினைக்கும் அரசு, இது போன்ற வன்முறைச் சூழலை உருவாக்குவதும் தவறுதானே?'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு