Published:Updated:

``ஒரு நடிகரை தலைவராக ஏற்க மாட்டேன்... ஆனால், ரஜினி?!''- தமிழருவி மணியனின் விளக்கம்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

`` `ஒரு நடிகரை, தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது' என்று கூறி அரசியலில், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் என இருபெரும் ஆளுமைகளின் கீழ் பணியாற்றும் வாய்ப்பை மறுத்த நான், ரஜினிகாந்தை ஆதரிக்கிறேன் என்றால், அதற்கும் காரணம் இருக்கிறது'' என்கிறார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலாக, ``எம்.ஜி.ஆருக்கு ஒரு நீதி; ரஜினிகாந்துக்கு ஒரு நீதியா?'' என்று எதிர்க்கேள்வி எழுப்பியிருந்தார் தமிழருவி மணியன். இதையடுத்து தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் அரசியல் பற்றிய விவாத அலைகள் மறுபடியும் வீறுகொண்டு எழுந்திருக்கின்றன.

இந்நிலையில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனைச் சந்தித்துப் பேசினோம்...

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்
சு.குமரேசன்

``2014-ல் நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்காக நம்பிக்கையாக உழைத்தவர் நீங்கள்... அந்த நம்பிக்கை இப்போது என்னவாயிற்று?''

``2014-ல் என்னுடைய தாரக மந்திரம் `மாற்று அரசியல்'. தமிழ்நாட்டில், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் இல்லாத ஒரு மாற்று அரசியலுக்கான வித்து ஊன்றப்பட வேண்டும் என்று நினைத்தேன். அந்த வித்தைப் போடுவதற்கான வேலையைத்தான் செய்தேன். மக்களும்கூட என்றுமில்லாத ஆதரவை அந்தக் கூட்டணிக்குக் கொடுத்தார்கள்.

1967-லிருந்தே தமிழக அரசியலில், மூன்றாவது அணி என்பது 10 விழுக்காடுக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றதாக வரலாறு இல்லை. ஆனால் 19 விழுக்காடுக்கும் மேலாக, 75 லட்சம் பேர் அன்றைக்கு பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களித்திருந்தார்கள்.

மோடி
மோடி

எனவே, 2014-ல் நாங்கள் அமைத்த அந்தக் கூட்டணியின் நோக்கமே, `நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மோடி பிரதமர் ஆகவேண்டும்' என்பது அல்ல. இமயத்தின் உச்சியில் நின்றுகொண்டுகூட, திரும்பத் திரும்ப இதை நான் சொல்லத் தயார். 2016-ல் வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே இப்படியொரு விதையை விதைத்து அதை விருட்சமாக மாற்றுவதற்கான முயற்சி அது. மாற்று அரசியலுக்கான எனது இந்த நோக்கத்தையும் அன்றைக்குக் கூட்டணியில் இருந்த அனைவரிடமும் எடுத்துச் சொன்னேன். ஆனால், அவர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தவறு என்பது அவர்கள் பக்கம்தான்.''

``2016-ல் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட மக்கள்நலக் கூட்டணியில் நீங்கள் சேரவில்லையே ஏன்?''

``மக்கள் நலக்கூட்டணியில் வந்து இணைந்துகொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் என்னைத் திரும்பத் திரும்ப வற்புறுத்தினார். அவரிடம் நான் ஒரேயொரு கேள்விதான் கேட்டேன்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்
சு.குமரேசன்

`தி.மு.க., அ.தி.மு.க-வோடு கூட்டணி இல்லை என்பதுதானே மக்கள் நலக்கூட்டணியின் நோக்கம்! அப்படியென்றால், எந்தக் காலத்திலும் எந்த நிலையிலும் தி.மு.க, அ.தி.மு.க-வோடு தேர்தல் உறவு வைப்பதில்லை என்று முடிவெடுத்து மக்களிடம் பிரகடனம் செய்யுங்கள். நானும் முழுமையாக வந்து வேலை செய்கிறேன்.' என்றேன்.

ஆனால், `அரசியலில் அப்படியெல்லாம் ஒரு முடிவு எடுக்கமுடியாது' என்று சொன்னவர்கள்தான் கம்யூனிஸ்ட்டுகள். இன்னும்கூட ஆழமாகப் பேச ஆரம்பித்தால், ஒவ்வொருவரிடையேயும் கசப்புகள்தான் மிஞ்சும்.''

``தமிழக அரசியல் சூழலை தமிழர்கள் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?''

``சங்க இலக்கியத்தைப் படித்தால்கூட, `பொதி சுமக்கின்ற கழுதைக்குப் போர்வை போர்த்தினான் பேகன்' என்று கூறப்படவில்லை. `தோகை விரித்தாடுகிற மயிலுக்குத்தான் போர்வை போர்த்தினான் பேகன்' என்றுதான் கடைஏழு வள்ளல்களில் பார்க்கிறோம். ஆக அந்த நாள் தொட்டே, கவர்ச்சியை மட்டுமே நம்பி ஏமாந்துபோனவன்தான் தமிழன்.

பெருந்தலைவர் காமராஜர்கூட 9 ஆண்டுகள்தான் முதல்வராக இருந்தார். ஆனால், அவரையும் மீறி 10 ஆண்டுகள் கடந்தும் முதல்வர் பொறுப்பில் இருந்தவர் எம்.ஜி.ஆர். காமராஜரைவிடவும் பெரியவரா எம்.ஜி.ஆர்... ஆனால், மக்களுக்கு காமராஜரை விடவும் பெரியவராக எம்.ஜி.ஆர்-தான் தெரிந்தார்... புரிகிறதா?ஜெயலலிதா, திரும்பத் திரும்ப ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாரே... கருணாநிதியை விடவும் திறமைசாலியா ஜெயலலிதா?

கருணாநிதி - ஜெயலலிதா
கருணாநிதி - ஜெயலலிதா

கலைஞர் என்ற தராசை நீங்கள் தூக்கிப்பிடித்தீர்களேயானால், ஒரு தட்டில், அவரால் இந்தத் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட தீமைகள் இருக்கும். மற்றொரு தட்டில், அவரால் இந்தத் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த நன்மைகளும் இருக்கும்.

சமூகத்தின் அடித்தட்டிலிருந்து அவர் வந்திருந்ததால், சமூகம், மொழி, இனம் குறித்த சிந்தனைகள் எல்லாம் அவரிடம் இருந்தன. இவற்றில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அவரோடு நான் இணைந்திருந்த காலங்களில் எல்லாம் இந்தப் பெருமைகளை மட்டுமே பேசியிருக்கிறேன். ஆனால், அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் சார்ந்து செயல்பட்டதன் விளைவு, அவரது நல்ல நோக்கங்களையெல்லாம் சிதறடித்துவிட்டது. அந்த நிலையிலும்கூட ஜெயலலிதாவோடு கருணாநிதியை ஒப்பிட்டுப் பார்த்தீர்களேயானால், ஜெயலலிதாவை விடவும் உயரமான மனிதர் கருணாநிதி. ஆனாலும் என்ன... ஜெயலலிதாவைத்தானே தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆக, இங்கே எப்போதுமே கவர்ச்சிகரமான அரசியல்தான் வெற்றி கொள்கிறது.''

``அதனால்தான் நீங்களும் ரஜினிகாந்த் பக்கம் நிற்கிறீர்களா?''

``பள்ளி, கல்லூரியில் படிக்கின்ற காலத்தில், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் வெறிபிடித்த ரசிகன் நான். அந்த சிவாஜி கணேசன், டெல்லி சென்று ஜார்ஜ் ஃபெர்ணான்டஸை சந்தித்து, ஜனதா தளத்தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டு தமிழ்நாடு திரும்பினார். அப்போது நான் இங்கே ஜனதா தளப் பொதுச்செயலாளராகப் பதவியில் இருந்து வருகிறேன். ஆனால், சிவாஜி கணேசன் தலைவர் பதவியோடு தமிழ்நாடு வந்த அன்றே நான் என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். காரணம்... பெருந்தலைவர் காமராஜரிடம் வளர்ந்த நான், ஒரு நடிகரை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனால்தான்.

சிவாஜி
சிவாஜி

`உலகத்திலேயே சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்தான்' என்று என்னைப் பேசச் சொல்லுங்கள். தொடர்ந்து மூன்று மணி நேரம் பேச நான் தயார். ஒரு நடிகராக சிவாஜிக்கு இணை என்பதே கிடையாது. ஆனால், சிவாஜியை தலைவராக என்னால் பார்க்கமுடியாது. தலைமை என்பதற்கான ஆளுமையே வேறு.

1980-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், ஜனதா கட்சியும் அ.தி.மு.க-வும் கூட்டணி. அந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது, `கருணாநிதி, மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வந்திருக்கிறார்' என்பதை புள்ளிவிவரமாகப் பட்டியலிட்டுப் பேசினேன். கேட்டுக்கொண்டிருந்த அ.தி.மு.க பேச்சாளர் கோடையிடி குமார், என்னைப் பாராட்டினார். எம்.ஜி.ஆரிடமும் என் பேச்சுப் பதிவுகளைக் கொடுத்திருக்கிறார். 3 நாள்கள் கழித்து, எம்.ஜி.ஆர்., என்னை சந்திக்க விரும்புவதாகவும் ராமாவரம் தோட்டத்துக்கு வருமாறும் அழைத்தார். ஆனால், `நான் காமராஜரின் தொண்டன். உங்கள் கட்சிக்காக நான் பேசவில்லை. ஜனதா கட்சி வேட்பாளருக்காக, கூட்டணி மேடையில்தான் நான் பேசினேன். என்னால் ஒருபோதும் நடிகர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளவே முடியாது' என்று கூறி, போக மறுத்துவிட்டேன். இதையெல்லாம் ரஜினியிடமும் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன்.

தமிழ்நாடு முழுக்கத் தெரிந்த, பாராட்டப்படுகிற ரஜினிகாந்த்தை வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே நான் ஆதரிக்கவில்லை. அவரை நான் முதன் முதலில் சந்தித்து, 2 மணி நேரம் பேசியபிறகு, அங்கே நான் நடிகர் ரஜினிகாந்தைப் பார்க்கவில்லை; உண்மையிலேயே சமூக நலனில் நாட்டம் கொண்ட, காமராஜர் வழியில் நல்லதொரு ஆட்சியைத் தருவதற்காக மனதளவில் ஏங்கிக்கொண்டிருக்கிற ஒரு மனிதரைத்தான் பார்த்தேன். அதனால்தான் சிவாஜியை ஏற்க மறுத்த, எம்.ஜி.ஆரை புறக்கணித்த தமிழருவி மணியனாகிய நான், ரஜினியை ஏற்றுக்கொண்டேன்!''

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

``திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசப்பட்டிருப்பதன் பின்னணி என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''

``எந்தச் சார்புத் தன்மையும் இல்லாமல், தன்னுடைய சிந்தனைகளை ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பொதுவாக வைத்திருக்கக்கூடிய மிகச்சிறந்த சான்றாண்மை மிக்க பெரியோர்களை எப்படியாவது தங்களுடைய வண்ண மயமாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற நினைப்பும் முனைப்பும் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறது. அதுதான் இப்போது வள்ளுவர் விஷயத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் வள்ளுவர் எந்த மதத்துக்கும் சாதிக்கும் உரியவரில்லை. வள்ளுவர் தமிழனுக்கு உரியவர்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்
சு.குமரேசன்

`இப்படியெல்லாம் ஒரு மனிதன் சிந்தித்திருக்கிறானா...' என்று உலக மக்கள் அனைவரையும் வியப்புக் கடலில் ஆழ்த்தக்கூடிய அறிவாசானாகத்தான் அவர் இருப்பார். வள்ளுவர் சிலை மீது இப்போது சாணிகூட பூசப்பட்டதுதான்... ஆனாலும் அடுத்த சில கணத்திலேயே தண்ணீர் ஊற்றியதும் அந்தச் சாயம் போய்விட்டதுபோல, நீங்கள் என்னதான் பச்சை, மஞ்சள், சிவப்பு என்று எந்தச் சாயத்தைப் பூசினாலும் திருவள்ளுவரின் நிறத்தை யாராலும் மாற்றமுடியாது. ஏனெனில் திருவள்ளுவரின் நிறம், குணம், மணம் என அனைத்துமே 'பொதுமை' என்ற ஒன்று மட்டும்தான்!''

சுவாரஸ்யமான இந்தப் பேட்டியின் தொடர்ச்சியை வருகிற 20-11-2019 தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் படியுங்கள்..!

அடுத்த கட்டுரைக்கு