Published:Updated:

``இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது! ஏன் தெரியுமா?” - சுமந்த் சி ராமன் விளக்கம்

ஈழத் தமிழர்கள்
ஈழத் தமிழர்கள்

``இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இன்றைய தேதிவரை எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. மேலும், துறைமுகம், அணு நீர்மூழ்கிக் கப்பல் என்று சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துவருகிறது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து'' என்கிறார் சுமந்த் சி ராமன்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இன்று வாக்கெடுப்பு நடத்துகிறது. இதையடுத்து, தமிழக அரசியல் களத்தில் மீண்டும் 'இறுதிப்போர்' குறித்த வாத, பிரதிவாதங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. இது தேர்தல் காலகட்டம் என்பதால், இம்முறை இந்த விவாதக் களத்தில் கூடுதல் அனல்!

இதற்கிடையே, 'ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என பழ.நெடுமாறன், மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் மத்திய பா.ஜ.க அரசை வலியுறுத்திவருகின்றனர்.

பழ நெடுமாறன் - வைகோ - ஸ்டாலின்
பழ நெடுமாறன் - வைகோ - ஸ்டாலின்

2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில், லட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்களை கொன்றொழித்தது சிங்களப் பேரினவாத அரசு! `தீவிரவாதிகள் ஒழிப்பு' என்ற பெயரில், பன்னாட்டுப் படைகளோடு கைகோத்து அன்றைய இலங்கை அரசு செய்து முடித்த இந்தப் படுகொலைக்கு நீதி கேட்டு, உலகத் தமிழர்கள் அனைவரும் குரல் எழுப்பிவருகிறார்கள். ஆனால், மாறிவரும் அரசியல் சதுரங்க விளையாட்டுகள் தமிழ் உணர்வாளர்களின் குரலைத் தொடர்ந்து வலுவிழக்கச் செய்துவருகின்றன.

தமிழ்நாட்டில், 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகிவரும் இந்த வேளையில், ஐ.நா தீர்மானம் கொண்டு வந்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பிவருகிறது. இறுதிப்போரில் அப்பாவி ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்‌ஷே அரசுக்கு தார்மிக ஆதரவு அளித்து, போர்க்கருவிகளையும் வழங்கி உதவிசெய்த நாடு இந்தியா. எனவே, அன்றைக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சி அதனோடு கூட்டணி அமைத்திருந்த தி.மு.க மீது இன்றளவிலும் `ஈழத் துரோகிகள்' முத்திரை குத்தப்பட்டு அரசியல்ரீதியான எதிர்ப்பு பிரசாரம் வலுவாக்கப்பட்டுவருகிறது.

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ராஜ பக்‌ஷேவுடன்...
பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ராஜ பக்‌ஷேவுடன்...

`2009 - காலகட்டத்தில், காங்கிரஸ் அல்லாத வேறு கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்தாலும், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்திருக்கும். இது சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து நடத்திய போர்' என்பது காங்கிரஸ் தரப்பிலான பதிலாக இருந்துவருகிறது. இந்த பதிலை உண்மையாக்கும்விதமாகவே இந்திய அரசியல் சூழ்நிலைகளும் இருந்துவருகின்றன. அதாவது, இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்படும் இந்தத் தீர்மானத்தை மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பா.ஜ.க அரசும் இதுவரை ஆதரிக்கவில்லை. இன்று இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஐ.நா-வில் நிகழவிருக்கிறது. இப்போதும் இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவது இல்லை என்றே செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்தநிலையில், `ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடும் வழக்கறிஞர் குழு'வைச் (Rights Redeemers) சேர்ந்தவரும், தி.மு.க செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் இராஜீவ் காந்தியிடம் பேசியபோது,``ஏற்கெனவே `நாடு கடந்த தமிழீழ அரசு' பல்வேறு மனித உரிமை அமைப்புகளோடு ஒன்றிணைந்து இலங்கை மீதான போர்க்குற்றத்தை, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை நிரூபிக்கப் போராடிவருகிறார்கள். நாங்களும் தனியே குழு அமைத்து இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைதான் என்பதற்கான ஆவணங்களைத் திரட்டிவருகிறோம்.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

ஏனெனில், 2009-ல் இறுதிப்போர் என்ற பெயரில், முழுக்க முழுக்க சிங்கள ராணுவத்தைக்கொண்டு நடத்தப்பட்ட இந்த இன அழிப்பில், இறந்துபோன பொதுமக்களில் ஒருவர்கூட சிங்களவர் இல்லை. இறந்துபோன மக்கள், விதவையாக்கப்பட்ட பெண்கள், நிலத்தைப் பறிகொடுத்தவர்கள் என அத்தனை பாதிப்புகளும் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இலங்கையில் வாழ முடியாமல், லட்சக்கணக்கானவர்கள் இந்தியாவிலேயே அகதிகளாகக் குடியேறியிருக்கிறார்கள். ஆனாலும்கூட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது இன்றைக்கும் `இலங்கைக்கு ஆதரவானதாக'த்தான் இருக்கிறது.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை, மனித உரிமை மீறலை உணர்ந்துள்ள மேற்கத்திய நாடுகள், இந்த அநியாயத்தைச் செய்த இலங்கை சிங்கள அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்று குறைந்தபட்சத் தீர்வாக இப்படியொரு தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் மூலமாகக் கொண்டுவருகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட தமிழர்களை குடிமக்களாகக் கொண்டிருக்கும் இந்திய அரசோ, ஐ.நா தீர்மானத்தை ஆதரித்து இலங்கை அரசைத் தனிமைப்படுத்தாமல், பாசிச சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாகவே இருந்துவருகிறது'' என்றார் ஆதங்கத்துடன்.

ராகுல் காந்தி - சோனியா காந்தி - மன்மோகன் சிங்
ராகுல் காந்தி - சோனியா காந்தி - மன்மோகன் சிங்

ஈழத் தமிழர் விவகாரம் தமிழக அரசியலில் உணர்வுரீதியான பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற்படுத்திவரும் சூழ்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இந்தத் தீர்மானம் குறித்த விவாதங்கள், பரப்புரைகள் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கும் பதிலளித்துப் பேசிய இராஜீவ் காந்தி, ``2009-ல் இறுதிப்போர் நடைபெற்றபோது, இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இடம்தரவில்லை என்ற காரணத்தை அன்றைய மத்தியப் பொறுப்பில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சி சொல்லிவந்தது.

புதுச்சேரி: பாஜக வேட்பாளருக்கு எதிராக 117 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை!

நானும்கூட அன்றைய சூழ்நிலையில், ஒரு தவறான புரிதலோடுதான் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்துவந்தேன். ஆனால், 'இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலைதான்; தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வு' என்பதை இன்றைக்கு தி.மு.க நம்புகிறது. தனித் தமிழீழம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான உலக நாடுகளின் அத்தனை நடவடிக்கைகளையும் தி.மு.க ஆதரிக்கிறது. எனவே, இந்த விவகாரம் தி.மு.க கூட்டணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஆனால், `ஈழத்தமிழர் அழிவுக்கு இவர்கள்தான் காரணம்' என்று அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்தநிலையில், இன்றைக்கு இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரித்து, ஈழத் தமிழர்களுக்கு குறைந்தபட்ச தீர்வையாவது தேடித்தரும் பொறுப்பு மத்திய பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு இருக்கிறது!'' என்கிறார் அழுத்தமாக.

சுமந்த் சி ராமன்
சுமந்த் சி ராமன்

'ஈழத்தமிழர் விவகாரம் தமிழகத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா?' என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், ``இலங்கை விவகாரம் தமிழக தேர்தல் அரசியலில் எப்போதுமே ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை. அப்படி ஏற்படுத்துவதாக இருந்தால், இந்நேரத்துக்கு வைகோ முதல்வராகவே ஆகியிருக்க வேண்டும். ஏனெனில், இலங்கைத் தமிழர்களுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருப்பவர் வைகோ. ஆனால், அவருக்கு அரசியல் செல்வாக்கு என்பது குறைந்துகொண்டுதான் வருகிறது.

2011 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. அதுவும்கூட கடந்த 2006-2011 வரையிலான தி.மு.க ஆட்சியின் மீது மக்களுக்கிருந்த கோபம்தான் அந்தக் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்ததே தவிர, இலங்கைத் தமிழர் பிரச்னை அல்ல! எனவே, இலங்கைப் பிரச்னையை முன்னிறுத்தி பெருமளவிலான வாக்குகளைப் பெற்ற கட்சி என்று தமிழக அரசியலில் யாருமே இல்லை என்பதைத்தான் கடந்தகாலத் தேர்தல் முடிவுகளுமே சொல்கின்றன.

'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - 24 மணி நேரத்துக்குள் முடிவை மாற்றிய மன்சூர் அலிகான்

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இன்றைய தேதிவரை எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. மேலும், துறைமுகம், அணு நீர்மூழ்கிக் கப்பல் என்று சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துவருகிறது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து.

இறுதிப் போரின்போது ஈழத் தமிழர்கள்
இறுதிப் போரின்போது ஈழத் தமிழர்கள்

எனவே, மத்திய பா.ஜ.க அரசு இந்தியப் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில்தான் கவனம் செலுத்தும். மாறாக, இலங்கைக்கு எதிராக ஐ.நா மன்றத்தில் வாக்களித்து இலங்கை மேலும் சீனாவின் பக்கம் செல்வதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்காது!'' என்கிறார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு