மேற்கு வங்க மாநிலம், சாகர்திகி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பைரோன் பிஸ்வால் 22,986 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குப் பேரதிர்ச்சி கொடுத்து, காங்கிரஸ் பெற்ற வெற்றியால், சட்டப்பேரவையில் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ நுழைந்திருக்கிறார். இதனால் கடும் அப்செட் ஆகிப்போன மம்தா பானர்ஜி, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களோடு மட்டும்தான் கூட்டணி வைத்திருக்கிறது” என்றார். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிப்பது பாஜக-வுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்றும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் மம்தா பானர்ஜி. ஆனால் தற்போது அங்கு பாஜக-தான் எதிர்க்கட்சியாக இருக்கிறது. எனினும், கம்யூனிஸ்ட் கட்சிகளிடமோ, காங்கிரஸ் கட்சியிடமோ சீறும் அளவுக்கு மம்தா பானர்ஜி, பாஜக-விடம் எப்போதும் சீறுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் அல்லாத மூன்றாவது அணி அமைப்பதில் தீவிரம்காட்டிய மம்தா, இப்போது எந்த அணியும் இல்லை, தனித்துத்தான் போட்டி என்று சொல்லியிருக்கிறார். பாஜக-வின் அழுத்தத்தின் காரணமாகவே அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.

மம்தா பானர்ஜியின் குடும்பத்தில் அரசியலில் இறங்கியிருக்கும் ஒரே நபர் அபிஷேக் பானர்ஜி மட்டும்தான். மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனான அபிஷேக் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார். நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் அபிஷேக் பானர்ஜியிடம், அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தியிருக்கிறது. `மம்தா பானர்ஜி மக்களுக்காகக் கட்சி நடத்தவில்லை, சகோதரர் மகனுக்காக மட்டுமே கட்சி நடத்துகிறார்’ என உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக-வினர் பலர் கடுமையாக விமர்சித்தும்வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக-வில் இணைந்தவர்களை வைத்தும் அபிஷேக் பானர்ஜி கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், அமைச்சர்கள் சிலரும் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளாகியிருக்கின்றனர். “சிபிஐ, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, மம்தா பானர்ஜியை பாஜக வளைத்துவிட்டது, அவர் ஒருபோதும் பாஜக-வை நேரடியாக எதிர்க்க மாட்டார், காங்கிரஸை எதிர்த்து பாஜக-வுக்கு பாதை போட்டுக் கொடுப்பார். அதுதான் பாஜக அவருக்குக் கொடுத்திருக்கும் அசைன்மென்ட். அதைத்தான் தற்போது நேரடியாக வெளிப்படுத்தியிருக்கிறார்” என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர், ``மேற்கு வங்கத்தைத் தாண்டி வேறு எந்த மாநிலத்திலும் வாக்குவங்கி இல்லாத மம்தா பானர்ஜிக்கு, மேற்கு வங்கத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றால்கூட பிரதமர் ஆக முடியாது என்பது தெளிவாகத் தெரியும். காங்கிரஸ் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதுதான் அவர் எண்ணம். அவர் பாஜக-வை ஆதரிக்கிறார் என்பது இதிலிருந்தே நன்கு தெரிகிறது” என்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் சமயத்திலிருந்தே மோடி எதிர்ப்பை மம்தா பானர்ஜி கைவிட்டுவிட்டார் என்ற விமர்சனங்களும் தேசிய அரசியலில் எழுந்திருக்கின்றன. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்குப் பெரும் தொல்லையாக இருந்துவந்த ஆளுநர் ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டதும் இந்த சமரசத்தின் பின்னணியில்தான் என்ற பேச்சுகளும் அப்போதே எழுந்தன. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை மம்தா பானர்ஜி ஒரு வார்த்தைகூடப் பாராட்டாததிலிருந்தே அவர் பாஜக-விடம் சரணடைந்துவிட்டார் என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
``மூன்றாவது அணியோ, தனித்துப்போட்டியோ அது பாஜக-வுக்கு மறைமுக ஆதரவு இல்லை, நேரடி ஆதரவு’’ என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஷாநவாஸ். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “பாஜக-வின் வாக்குவங்கியை அறுவடை செய்வதற்காக, அதனோடு ஒத்த கொள்கையுடைய எந்தக் கட்சியும் போட்டிக்கு வருவதில்லை. அதேசமயம் பாஜக-வுக்கு எதிரான ஒத்த கொள்கையுடைய கட்சிகள், தமிழ்நாட்டில் ஒன்றிணைந்திருப்பதைப்போல தேசிய அளவில் இன்னும் ஒன்றுபடவில்லை.
காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இருப்பது பாஜக-வுக்கு எதிரான வாக்குகள். எனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகளை எதிர்க்கும் மம்தாவின் அரசியல் பாஜக-வுக்கே வலு சேர்க்கும். கொள்கைப்பூர்வமாக பாஜக-வை மம்தா எதிர்க்கவில்லை. பல விஷயங்களில் பாஜக-வுடன் பணிந்துதான் போகிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்கும் காங்கிரஸுக்கும் கேரளாவில் எதிரெதிர் அரசியல்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் தேசிய அளவில் ஒன்றாக நிற்கிறார்கள். அது போன்றதொரு நிலைப்பாட்டுக்கு மம்தாவும் வர வேண்டும்” என்றார்.

மம்தா பானர்ஜி, தனது முடிவை பரிசீலித்து தனித்துப்போட்டி என்ற திட்டத்தைக் கைவிட வேண்டுமென்பது எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் தன்னை பாஜக-வின் 'பி' டீம்போல சித்தரிப்பதையே அவர் மிகக் கடுமையாக எதிர்க்கிறார். அதேபோல காங்கிரஸ் எதிர்ப்பிலும் அவர் மிக உறுதியாக இருப்பதால், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் அவர் இணைவதற்குச் சாத்தியமே இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.