Published:Updated:

குறிவைக்கப்படும் ஆம் ஆத்மியின் மணீஷ் சிசோடியா... அரசியல் பின்னணி என்ன?!

மணீஷ் சிசோடியா

‘உலகின் சிறந்த கல்வியமைச்சர்’ என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு மணீஷ் சிசோடியாவைப் புகழ்ந்து செய்தி வெளியிட்ட அதேநாளில், அவரின் வீட்டில் அதிரடி சோதனையை சி.பி.ஐ நடத்தியது.

குறிவைக்கப்படும் ஆம் ஆத்மியின் மணீஷ் சிசோடியா... அரசியல் பின்னணி என்ன?!

‘உலகின் சிறந்த கல்வியமைச்சர்’ என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு மணீஷ் சிசோடியாவைப் புகழ்ந்து செய்தி வெளியிட்ட அதேநாளில், அவரின் வீட்டில் அதிரடி சோதனையை சி.பி.ஐ நடத்தியது.

Published:Updated:
மணீஷ் சிசோடியா

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, துணை முதல்வராக இருந்துவரும் மணீஷ் சிசோடியா, கல்வி மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்துவருகிறார். அவரின் வீட்டில் ஆகஸ்ட் 19-ம் தேதி சி.பி.ஐ மேற்கொண்ட அதிரடி சோதனை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

கடந்த ஆண்டு நவம்பரில் மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுக்கப்பட்டதிலும், அதை அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்தது. மதுபான உரிமங்கள் பெற்றவர்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் அளிக்கப்பட்டதாகவும், டெல்லி ஆயத்தீர்வை சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, சி.பி.ஐ விசாரணை நடத்த கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவின் வீடு, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபிகிருஷ்ணாவின் வீடு உட்பட 31 இடங்களில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியது. டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, உத்தரபிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் மொத்தம் 31 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. அதில், முக்கிய ஆவணங்கள், மின்னணுப் பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

``மதுபான உரிமம் பெறுபவர்களுக்கு ஆதாயம் அளிக்கும் நோக்கத்தில் உரிய ஒப்புதல் இல்லாமல், மணீஷ் சிசோடியாவும் அரசு அதிகாரிகளும் முடிவெடுத்தனர். மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தினேஷ் அரோரா உள்ளிட்டோர், மதுபான உரிமம் பெற்றவர்களிடம் லஞ்சம் வசூலிக்கும் பணியை கவனித்தனர். மதுபான உரிமம் பெற்ற சமீர் மகேந்துரு என்ற தொழிலதிபரிடமிருந்து தினேஷ் அரோரா ரூ.1 கோடி லஞ்சம் பெற்றார். மதுவிலக்கு விதிகளில் திருத்தம் செய்தல், உரிமைக் கட்டணத்தைக் குறைத்தல் போன்றவை மூலம் முறைகேடு நடந்தது” என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.ஐ சோதனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மணீஷ் சிசோடியா கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், “சி.பி.ஐ-யை வரவேற்கிறோம். சி.பி.ஐ-க்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். அதன் மூலம் உண்மை விரைவில் வெளிவரும். கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் டெல்லி அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. அதனால், மத்திய ஆட்சியாளர்கள் பதற்றமடைந்துள்ளனர். ஆகவேதான், கல்வித்துறையை கவனிக்கும் என்னையும், சுகாதாரத்துறையை கவனிக்கும் சத்யேந்தர் ஜெயினையும் முடக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “உலகின் மிக வலிமையான நாடான அமெரிக்காவில், மிகப்பெரிய நாளேடான 'நியூயார்க் டைம்ஸ்', மணீஷ் சிசோடியாவின் புகைப்படத்தை தனது முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. 'உலகின் சிறந்த கல்வியமைச்சர்' என்று அந்த ஏடு புகழ்ந்திருக்கிறது. அதே நாளில், சி.பி.ஐ சோதனை நடத்துகிறது. இந்தச் சோதனை குறித்து நாங்கள் பயப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பவர் மணீஷ் சிசோடியா. கல்வித்துறையில் வரவேற்கத்தக்க பல மாற்றங்களை இவர் கொண்டுவந்திருக்கிறார். நான்கு மாதங்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆச்சர்யமடைந்தார். அதே போன்ற பள்ளிகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என்று ஸ்டாலின் அப்போது கூறினார்.

டெல்லி அரசுப்பள்ளியில், ஸ்டாலின், கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா
டெல்லி அரசுப்பள்ளியில், ஸ்டாலின், கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா

பா.ஜ.க-வையும் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் எந்த அளவுக்கு விமர்சிப்பாரோ, அதே அளவுக்கு மணீஷ் சிசோடியாவும் பா.ஜ.க-வினரை விமர்சிப்பவராக இருக்கிறார். அதன் மூலம், பா.ஜ.க-வின் கோபத்துக்கு அவர் ஆளானதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தற்போது, ‘தேர்தல் இலவசங்கள்’ குறித்து சர்ச்சை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தேர்தல் இலவசங்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசிவருகிறார். அந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்த மணீஷ் சிசோடியா, “கடன் தள்ளுபடி, வரிச் சலுகை என்ற பெயர்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தனது நண்பர்களுக்கு (பெரு நிறுவனங்கள்) மத்திய அரசு வழங்குகிறது” என்றார்.

மேலும், “பெரும் பணக்காரர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி வரிச் சலுகையும் ரூ.14 லட்சம் கோடி கடன் தள்ளுபடியையும் வழங்குவது நாட்டை வளர்ச்சியடையச் செய்யும். ஆனால், ஏழைகளுக்கு கல்வியையும் சுகாதாரத்தையும் இலவசமாக வழங்கினால், அது நாட்டை அழித்துவிடுமென மத்திய அரசு நினைக்கிறது” என்று சிசோடியா சாடினார்.

தேர்தல் இலவசங்கள் தொடர்பான விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கடுமையான வார்த்தைப்போர் நிலவிவந்த நேரத்தில், குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா
Facebook

இந்த மோதல்களின் தொடர்ச்சியாகத்தான் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ சோதனை நடைபெற்றதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகிறார்கள். ஆம் அத்மியிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் சேர்ந்தால் தன் மீதான சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுவதாக பா.ஜ.க-வினர் அழைத்தனர் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்திருக்கிறார். இதை மறுக்கும் பா.ஜ.க-வினர் சிசோடியாவுக்கு பதிலடி கொடுத்துவருகிறார்கள். பா.ஜ.க-வுக்கு எதிராக கடினமான விமர்சனங்களை முன்வைத்து வருவதாலேயே, அவர்மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குகள் பாய்வதாக ஆம் ஆத்மி தரப்பு குற்றம்சாட்டுகிறது. இரு தரப்புக்குமான மோதல் தொடர்கிறது.