Published:Updated:

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு... தீவிரம் காட்டும் அன்புமணி - பின்னணி என்ன?!

பரந்தூர் கருத்துக்கேட்பு கூட்டம்

``விவசாயத்தை அழித்து கட்டுமானத்தைக் கொண்டுவருவதுதான் வளர்ச்சி என அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வளர்ச்சியில்லை. வளர்ச்சி என்பது கட்டுமானங்களும் வளர வேண்டும். அதேசமயம் விவசாயமும் வளர வேண்டும்.” - அன்புமணி ராமதாஸ்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு... தீவிரம் காட்டும் அன்புமணி - பின்னணி என்ன?!

``விவசாயத்தை அழித்து கட்டுமானத்தைக் கொண்டுவருவதுதான் வளர்ச்சி என அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வளர்ச்சியில்லை. வளர்ச்சி என்பது கட்டுமானங்களும் வளர வேண்டும். அதேசமயம் விவசாயமும் வளர வேண்டும்.” - அன்புமணி ராமதாஸ்

Published:Updated:
பரந்தூர் கருத்துக்கேட்பு கூட்டம்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 12 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அந்தப் பகுதி மக்களை நேரில் சந்தித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியிருப்பது அரசியலில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

பரந்தூரில் விமான நிலையம்:

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் தேர்வாகியிருக்கின்றன. இந்தப் புதிய விமான நிலையம் சுமார் 4,751 ஏக்கர் பரப்பளவில், இரண்டு ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்புப் பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்குகளைக் கையாளும் முனையம், விமான பராமரிப்பு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுமார் 10 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்படவிருக்கிறது. சுமார் 20,000 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீட்டில் தொடங்கப்படவிருக்கும் `இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான படிகட்டு, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற குறிக்கோளை எட்டுவதற்கான மற்றொரு மைல் கல்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எதிர்ப்பு தெரிவிக்கும் 12 கிராம மக்கள்:

இந்த நிலையில், `விவசாய நிலங்களையும், குடியிருக்கும் வீடுகளையும் அழித்துவிட்டு விமான நிலையம் கட்டுவதுதான் வளர்ச்சியா?" எனக் கேட்டு திட்டத்துக்கு எதிராக பாதிக்கப்படவிருக்கும் 12 கிராம மக்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தும், கறுப்புக்கொடி போராட்டம், பேரணிகளை நடத்திவருகின்றனர். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். மேலும், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தையும் கிராம மக்கள் புறக்கணித்திருக்கின்றனர்.

பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர் விமான நிலையம்

அதைத் தொடர்ந்து, ஶ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு,``சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுகிறது. விமான நிலையம் அமையவிருக்கும் இடத்தில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும்" என உறுதி தெரிவித்திருக்கிறார். அதேபோல, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ``தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத இந்தப் புதிய விமான நிலையம் அமைக்க, மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் மக்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றத்துக்கும், கையகப்படுத்தப்படவிருக்கும் நிலங்களுக்கும் சந்தை விலையைவிடக் கூடுதலாக, மிகவும் திருப்திகரமான இழப்பீட்டை வழங்குவோம்" எனத் தெரிவித்தார்.

விவகாரத்தைக் கையிலெடுத்த அன்புமணி ராமதாஸ்:

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக கையிலெடுத்திருக்கிறார். குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி காஞ்சிபுரத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை பா.ம.க சார்பில் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், அக்கம்மாபுரம், வளத்தூர், மேல் பொடவூர், தண்டலம், மடப்புரம், இடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், சிங்கிலி பாடி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள், தங்களின் கோரிக்கைகள் குறித்த கருத்துகளை அன்புமணியிடம் தெரிவித்தனர்.

பரந்தூர் கருத்துக்கேட்பு கூட்டம்
பரந்தூர் கருத்துக்கேட்பு கூட்டம்

எந்த அடிப்படையில் பரந்தூரைத் தேர்வு செய்தார்கள்..?

இதைத் தொடர்ந்து பேசிய அன்புமணி, ``சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய எந்த அடிப்படையில் இந்த இடத்தைத் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை. தமிழக அரசின் அறிவிப்பு தற்போது வரை அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. இந்தத் திட்டத்தை எப்படிச் செய்யப்போகிறார்கள்.... அரசு செய்யப் போகிறதா அல்லது தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து செய்ய போகிறார்களா... இங்கே நிலத்தை எடுத்தால், இங்கே வசிக்கும் மக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரம் என்ன... வேலைவாய்ப்பு என்ன... அவர்களுக்கான மாற்று இருப்பிடம் எங்கே போன்ற பல கேள்விகள் எழுகின்றன. ஆனால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தெரிந்துகொள்ள நாம் அரசிடம் சென்று பேசவேண்டிய அவசியம் இருக்கிறது.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள்
கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள்

விவசாயத்தை அழித்துத்தான் வளர்ச்சியா?

வளர்ச்சி அவசியமானது, வளர்ச்சி நமக்குத் தேவைதான் ஆனால் விவசாயத்தையும் நீர்நிலைகளையும் அழித்து வரும் வளர்ச்சியை நாங்கள் எதிர்க்கிறோம். விவசாயத்தை அழித்து கட்டுமானத்தைக் கொண்டு வருவதுதான் வளர்ச்சி என அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வளர்ச்சியில்லை. வளர்ச்சி என்பது கட்டுமானங்களும் வளர வேண்டும். அதேசமயம் விவசாயமும் வளர வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், நீர்நிலைகளைக் காத்து, நீர் மேலாண்மைத் திட்டங்களை வகுத்து, விவசாயத்தைச் செழிக்க வைத்துக்கொண்டே, வளர்ச்சிக்கான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

சென்னைக்கு 2-வது விமான நிலையம் தேவைதான்! ஆனால்..?

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் நிச்சயமாகத் தேவை. அது சம்பந்தமாக நானே பல அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறேன். ஆனால், சென்னையிலேயே உப்பளம் போன்று, பல்வேறு பகுதிகளில் அரசு நிலங்களே இருக்கின்றன. அங்கெல்லாம் தேர்வு செய்யாமல் இந்த இடத்தை ஏன் தேர்வு செய்தார்கள் என்பது குறித்து நாங்கள் அமைக்கப்போகும் குழு ஆய்வு செய்த பிறகுதான் தெரியவரும்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஜி.கே. மணி
கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஜி.கே. மணி

ஜி.கே.மணி தலைமையில் ஆய்வுக்குழு:

முதற்கட்டமாக, பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஏழு பேர்கொண்ட குழு அமைக்கப்படும். அந்தக் குழு 12 கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும். அதன் பிறகு முன்னர் விமான நிலையம் அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நான்கு இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளும். அதன் பின்னர், ஏன் பரந்தூர் இடத்தைத் தேர்வு செய்தார்கள் என குழு கொடுக்கும் அறிக்கையைத் தொடர்ந்து, அரசிடம் கலந்தாலோசித்து பா.ம.க-வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று தெரிவிப்போம்" எனக் கூறியிருக்கிறார்.

அன்புமணி - பாமக
அன்புமணி - பாமக

பரந்தூர் விவகாரம் மட்டுமல்லாமல், தற்போது கொசஸ்தலை ஆற்றில் ஆந்திரா அணை கட்டும் விவகாரத்தையும் அன்புமணி கையிலெடுத்திருக்கிறார். கொசஸ்தலை ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுவதைக் கைவிட வலியுறுத்தியும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளக் கோரியும் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு நகரத்தில், வரும் 30-ம் தேதி பா.ம.க சார்பில் தானே தலைமையேற்று மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

பா.ம.க தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்ட ஏரிகள், குளங்களுக்கு நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து தற்போது பரந்தூர் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார். அடுத்து கொசஸ்தலை அணை விவகாரம் குறித்து அறப்போராட்டம் நடத்தவிருக்கிறார். அடுத்தடுத்து விவசாயம் சார்ந்த பிரச்னைகளைத் தீவிரமாகக் கையிலெடுப்பதன் மூலம், தமிழகத்தில் குறிப்பாக, வட மாவட்டங்களில் பா.ம.க இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவும், எதிர்வரும் 2024 தேர்தலுக்கு ஓட்டுவங்கியாகவும் அமையும் என அன்புமணி ராமதாஸ் நம்புவதாக பா.ம.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.