Published:Updated:

''எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வரக் கூடாது'' - விஜய் மீது சீமான் பாய்வது ஏன்?

விஜய் மீதான கோபம்... சீமானின் இந்த மன மாற்றத்துக்கான காரணம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

``அரசியல் செய்யாமல் நேரடியாகத் தேர்தலை எதிர்கொள்வது மக்களை மிகக் குறைவாக, தாழ்வாக, கேவலமாக மதிப்பிடுவது.’’
சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, சீமான் இப்படி பதிலளிக்க, ``விரைவில் விஜய்யும் அரசியலுக்கு வருவார் என அவரின் அப்பா சொல்லியிருக்கிறாரே?'' என பத்திரிகையாளர்கள் பதில் கேள்வி கேட்க, ``ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் வரக் கூடாது'' என மிகக் காட்டமாக பதிலளித்தார் சீமான். ``நடிகர் விஜய்க்கும் சேர்த்தா...’’ எனப் பத்திரிகையாளர்கள் மீண்டும் கேட்க, ``எல்லோருக்கும் சேர்த்துத்தான்’’ என ஆமோதித்தார் அவர்.

விஜய் | மாஸ்டர்
விஜய் | மாஸ்டர்

இதே சீமான், கடந்த வருடம் `உலக காணாமல் போனவர்கள்’ (ஆகஸ்ட் 30 ) தினத்தன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில்,``யார் யாரோ அரசியலுக்கு வரும்போது, என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தா என்ன தப்பு... ரஜினிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. விஜய் என்னுடைய தம்பி. மக்கள் அவருக்கு வாக்களிச்சா, நான் பாராட்டுகளைத் தெரிவிப்பேன். எனக்கு வாக்களிச்சா நன்றியைத் தெரிவிப்பேன்’’ எனப் பேசியிருந்தார். அதற்கு முன்பாக, ``ரஜினிக்கும் விஷாலுக்கும் அரசியல் ஆசை இருக்கும்போது, மண்ணின் மைந்தன் என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு?’’ எனவும் மேடைகளில் பேசியிருக்கிறார். ஆனால், தற்போது விஜய்க்கும் சேர்த்தே எச்சரிக்கைவிடும் வகையில் பேசியிருக்கிறார் சீமான் .

சீமானின் இந்த மன மாற்றத்துக்கான காரணம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ரஜினிக்கு நோ... விஜய்க்கு எஸ்... சீமானின் அரசியல் கணக்கு என்ன?

நாம் தமிழர் கட்சி முதன்முதலில், 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் 1.07 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றாலும், அது அந்தக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எந்தவித சோர்வையும் உண்டாக்கவில்லை. அதற்கடுத்ததாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது. 20 தொகுதிகளில் ஆண் மற்றும் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கி, 16,45,185 வாக்குகள் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07-லிருந்து 3.87-ஆக அதிகரித்தாலும் அந்தக் கட்சி நிர்வாகிகளின் எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யவில்லை. எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று கட்சி அங்கீகாரம், நிரந்தரச் சின்னம் என ஆவலோடு காத்திருந்த சீமானுக்கும், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் தேர்தல் முடிவுகள் திருப்தியளிக்கவில்லை.

கமலுடன் சீமான்
கமலுடன் சீமான்

நாம் தமிழர் கட்சி எதிர்பார்த்த வாக்குகள் பெறாமல் போனதற்கு, நடிகர் கமலின் திடீர் அரசியல் பிரவேசமும், அவரின் கட்சி வாங்கிய 15.73 லட்சம் வாக்குகளுமே காரணம் எனக் கருதினர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள். கமல் கட்சி ஆரம்பிக்கும்போது, அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த சீமான், இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு,

``தேர்தலில் அவருடைய (கமல்) பங்களிப்பு என்று எதுவும் இல்லை. திரைப்படத்தைப் போலவேதான் அரசியலையும் பார்க்கிறார். 50 வருடங்கள் நடித்திருக்கிறார். என்னைவிட அவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. தவிர, அவர் வெள்ளையாக இருக்கிறார். மக்கள், `வெள்ளையாக இருப்பவர் பொய் பேச மாட்டார்' என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அவரை ஒரு பர்சனாலிட்டியாகப் பார்ப்பவர்கள்தான் அதிகம்’’ எனக் கடுமையாக விமர்சித்துப் பேச ஆரம்பித்தார். காரணம், நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளில் கடுமையாகக் களப்பணியாற்றி பெற்ற வாக்குகளை, கமலஹாசன் தன் திரைப் பிரபலத்தின் மூலம், கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் பெற்றுவிட்டார் என்கிற எண்ணம் சீமானுக்கு ஏற்பட்டது.

``திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்றுதான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்துக்காகக் கடந்த 10 வருடங்களாக உண்மையோடும், உறுதியோடும், உள்ளத் தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!
சீமான், ட்விட்டரில்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போதும்கூட, போராட்டக் களம் எதற்கும் வராமல், நேரடியாக தேர்தல் களத்துக்கு கமல் வருகிறார் எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். ஆனால், கூடவே, நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசமும் தற்போது சீமானை மிகவும் கோபப்படுத்தியிருக்கிறது. ஆரம்பத்தில் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது எனக் கடுமையாக எதிர்த்துவந்த சீமான், பிறகு ``நான் முதலமைச்சராக மாட்டேன்’’ என ரஜினி அறிவித்ததும், வரவேற்றுப் பேசினார். ஆனால், 2019-ம் ஆண்டிலேயே பெற்றிருக்க வேண்டிய எட்டு சதவிகித வாக்குகளுக்குத் தடையாக தற்போது கமலோடு ரஜினியும் வந்துவிட்டார் என்கிற கோபம் சீமானுக்கு இருந்தாலும்,

``என்னுடைய கோட்பாட்டை, தமிழக அரசியல் கட்சிகளில் யாருடைய கோட்பாட்டோடும் ஒப்பிட முடியாது. அப்படியிருக்கும்போது, எனக்கென்று இருக்கிற கூட்டம், என்னோடுதான் தொடரும். இன்னும் சொல்லப்போனால், ரஜினியும் அரசியலுக்கு வரும்போது, என்னுடைய தேவை இன்னும் கூடுதலாகிவிடும்... அதாவது, `சீமான் சொல்வது சரிதானே...’ என்றுதான் மக்கள் சிந்திப்பார்கள். எனவே, ரஜினி வந்து எங்களது வாக்குகளைப் பிரிப்பார் என்ற பேச்சுக்கே இடமில்லை!’’ எனப் பேசிவந்தார் சீமான்.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

ஆனால், நாளை விஜய் அரசியலுக்கு வந்தால் அது நிச்சயமாக தன் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என தற்போது நினைக்கிறார் சீமான். ரஜினி, கமல் ஆகிய இருவரின் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் சீமானின் நிலைப்பாடுகளுக்கும் பல மாறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், ஈழ விவகாரம், காவிரி, நீட், ஸ்டெர்லைட் உள்ளிட்ட தமிழர் உரிமை சார்ந்த விஷயங்களிலெல்லாம் நடிகர் விஜய்யின் நிலைப்பாடும் சீமானின் நிலைப்பாடும் ஒரே மாதிரியானதுதான்.

தமிழக அரசியல் களத்தில், அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்குப் பிறகு நாம்தான் என நினைத்து வந்தார் சீமான். ஆனால், கமல், ரஜினி, அடுத்ததாக விஜய் எனப் பலர் போட்டியாக வருவதை அவர் விரும்பவில்லை. காரணம், கடுமையான களப்பணியாற்றி தம் கட்சி பெறும் வாக்குகளை திரைப்பிரபலத்தின் மூலம் மிக எளிதாக நடிகர்களின் கட்சி வாங்கிவிடுகிறது என்கிற கோபம்தான். அதனால்தான், விஜய் உட்பட நடிகர்கள் யாருக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணமே வரக் கூடாது எனக் கொந்தளித்திருக்கிறார்.

``கமல், ரஜினி இருவரும் இரண்டு ஜாம்பவான்கள். அரசியலில், மிகப்பெரிய சாதனையைச் செய்வதற்கு கமல் ஆரம்பித்துவிட்டார். இதேபோல் ரஜினியும் வர வேண்டும். இவர்கள் இருவரும் சேர்ந்தால், தமிழ்நாட்டுக்கு நல்லது. தமிழர்களுக்கு நல்லது. இருவரும் இணைந்து அரசியல் செய்ய வேண்டும் என்கிற என் ஆசையை, இந்த மேடையில் பகிரங்கமாகவே சொல்லிக்கொள்கிறேன்.''
எஸ்.ஏ.சந்திரசேகர்

``சீமான் முன்னிறுத்தும் தமிழ்த் தேசியக் கொள்கைகளை அவருக்கு முன்பே பலர் இங்கே பேசியும், இயக்கங்களாகச் செயல்பட்டும் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்கும் கிடைக்காத மக்கள் ஆதரவு சீமானுக்குக் கிடைத்தது. 2009-ம் ஆண்டில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் காரணமாக தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் உண்டான எழுச்சிதான் அதற்கு முதன்மையான காரணமாக இருந்தாலும், மற்றவர்களைவிட சீமானுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது என்பதற்கு அவர் திரைத்துறையைச் சார்ந்தவர் என்பதும் ஒரு காரணிதான். அதை நிச்சயமாக அவர் மறுக்க முடியாது.

அடுத்ததாக சீமானுடைய பேச்சாற்றலைச் சொல்லலாம். ஈழப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை, மக்கள் அடைந்த துயரங்களை, போருக்குப் பின்னால் இருக்கும் காரணிகளை தமிழக மக்களிடம் பாமர மொழியில் கொண்டு சேர்த்தவர் சீமான். அதனாலேயே அவர் பின்னால் பெருவாரியான இளைஞர்கள் திரண்டனர். தொடர்ச்சியான சிறைவாசமும், அவர் மீதான அடக்குமுறைகளும் இளைஞர்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பை உயர்த்தியது.

இன்று, நாம் களப்பணியாற்றிச் சிறுகச் சிறுகச் சேர்க்கும் வாக்குகளை, நடிகர்கள் எளிதாக தங்களின் பிரபல்யத்தின் மூலம் பெற்றுவிடுகிறார்கள் என சீமான் குற்றம்சாட்டினால், அவருக்கு முன்பாக ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த, அதற்காக சிறை சென்ற, கொடுமைகளை அனுபவித்த பலரையும்விட சீமான் அதிக கவனம் பெற்றிருக்கிறாரே, அதற்காக அவர்கள் சீமான் மீது கோபப்பட முடியுமா... ஆனால், நடிகராக இருந்தாலும் குறைந்தபட்சம் தமிழர் நலன் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் விஜய்யை எதிராக சீமான் நிறுத்துவது தேவையற்றது'' என்பதே சீமானைப்போல தமிழ்த் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்பவர்களின் கருத்தாக இருக்கிறது.

சீமான்
சீமான்

ஆனால், ''விஜய்யின் அரசியல் வருகை, ரஜினி, கமலுக்கு ஆதரவாகப் போக வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, ரஜினி, கமல் இணைந்து அரசியலுக்கு வர வேண்டும் என என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் `கமல் 60' நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்திருந்தார். அப்போதே, சீமான் உள்ளிட்ட பலருக்கும் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. அதனால்தான் சீமான் இப்போதே விஜய்யையும் எதிர்த்து அரசியல் செய்கிறார்'' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஆனால், ``வாக்குவங்கிக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பத்திரிகையாளர்கள் விஜய் குறித்துக் கேட்கவும்தான் எங்கள் அண்ணன் பதில் சொன்னார். எங்கள் அண்ணன் இயக்கம் ஆரம்பித்து மக்களைச் சந்தித்தார். ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கவில்லை. அதனால், ரஜினி, கமலையும் எங்கள் அண்ணன் சீமானையும் திரைத்துறையிலிருந்து வந்தவர்கள் என ஒப்பிடுவது சரியல்ல. இது குறித்து எங்கள் அண்ணனே விளக்கமும் கொடுத்துவிட்டார்'' என்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு