Published:Updated:

மோடியின் புதிய அமைச்சரவையிலும் ஓ.பி.எஸ் மகனுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

ஓ.பி.ரவீந்திரநாத்
ஓ.பி.ரவீந்திரநாத்

பல்வேறு துறைகளைக் கூடுதல் பொறுப்புகளாக பிரதமர் மோடி, அமித் ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கவனிக்கவிருக்கின்றனர். இப்படிப் பல வாய்ப்புகள் இருந்தும் ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது ஏன்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், மத்திய இணையமைச்சராக டெல்லி பா.ஜ.க தலைமையால் அறிவிக்கப்பட்டார். அதேவேளையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள்முதல் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட ஓ.பி.எஸ்-ஸின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இந்த முறையும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் அமைச்சராவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு பதவி கிடைக்கவில்லையா அல்லது முயற்சிகளே எடுக்கப்படவில்லையா..?

மோடி அமைச்சரவை  2.0
மோடி அமைச்சரவை 2.0

இந்தியப் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, முதன்முறையாக நேற்று அவரின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியாவதற்கு முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ரவிஷங்கர் பிரசாத் உள்ளிட்ட 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்தனர். தொடர்ந்து 43 பேர் கொண்ட புதிய பட்டியல் வெளியானது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவர்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுகொண்டனர். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு என அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இந்தப் புதிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மீன்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஓ.பி,.எஸ்-ஸின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு முதல் அமைச்சரவையிலே இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையிலும் இடம் கிடைக்கவில்லை. மொத்தமாக, 81 அமைச்சர்கள் வரை வைத்துக்கொள்ளலாம் என்கிற நிலையில் தற்போது 78 பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர். அதேபோல, பல்வேறு துறைகளைக் கூடுதல் பொறுப்புகளாக பிரதமர் மோடி, அமித் ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கவனிக்கவிருக்கின்றனர். இப்படிப் பல வாய்ப்புகள் இருந்தும் ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது ஏன்?

எல்.முருகன்
எல்.முருகன்

அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

``அ.தி.மு.க-வுக்கு அமைச்சர் பதவி வழங்க பா.ஜ.க தரப்பு தயாராக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்கான முயற்சிகளையே எடுக்கவிடாமல் எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொண்டார் என்பது உண்மை. ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வாங்க கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓ.பி.எஸ் முயன்றுவருகிறார். ஆனால், அப்போதெல்லாம் சீனியர்களான வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோரைக் காட்டியே எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டுவந்தார் .

உ.பி -7, குஜராத் - 3, 11 பெண்கள், 8 பழங்குடியினர் - மோடி அமைச்சரவை 2.0 -வில் மொத்தம் எத்தனை பேர்?!

கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் எம்.எல்.ஏ-க்களாக ஆன பிறகு தன் மகனுக்கு ரூட் க்ளியராகிவிட்டது என நினைத்தார் ஓ.பன்னீர்செல்வம். அதனால்தான், எதிர்க்கட்சித் தலைவரில் தொடங்கி பல விஷயங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால், எங்கே, ரவிந்திரநாத் குமார் அமைச்சராகிவிட்டால், கட்சிக் கட்டுப்பாடு ஓ.பி.எஸ்-ஸின் கைகளுக்குச் சென்றுவிடுமோ என யோசிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், இந்தமுறையும் டெல்லி பா.ஜ.க தலைமைக்குப் பரிந்துரைக் கடிதம்கூட கொடுக்கவிடாமல் செய்துவிட்டார். அவருக்கு மட்டுமல்ல, தம்பிதுரைக்கும் அமைச்சர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. இருவரின் பெயரையும் பரிந்துரைத்து இருவரும் கையெழுத்திட்டு அனுப்புவோம். யாருக்குக் கொடுக்கிறார்களோ, கொடுக்கட்டும் என ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமியிடம் பேசிப் பார்த்திருக்கிறார். ஆனால், ஏற்கெனவே நாம் பா.ஜ.க-வால்தான் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்திருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் வேற வரவிருக்கிறது. இந்தநேரத்தில், அமைச்சர் பதவியை வாங்கினால், கண்டிப்பாக பா.ஜ.க எதிர்பார்க்கும் இடங்களை நாம் கொடுத்தாக வேண்டும்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் படுதோல்வியைச் சந்தித்தால், கட்சி நிர்வாகிகளைத் தக்கவைப்பது மிகவும் சிரமமாகிவிடும். அதனால், இந்தநேரத்தில் நாம் பா.ஜ.க-வுடன் மிகவும் நெருக்கமாகச் செல்ல வேண்டாம் என அதை மறுத்துவிட்டார். ஓ.பி.எஸ் தனியாகக் கடிதம் அனுப்பியதாகச் சொல்கிறார்கள். ஆனால், டெல்லி தலைமை தற்போது எடப்பாடியின் கைகளில்தான் கட்சியின் கட்டுப்பாடு இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறது. அதனால் ஓ.பி.எஸ் பேச்சைக் கேட்டுக்கொண்டு எந்த முடிவையும் எடுக்க அவர்கள் தற்போது தயாராக இல்லை. ஓ.பி.எஸ்ஸுக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு எல்லாம் பெரிய அளவில் இல்லை. அவர் பேச்சை நம்பி ஏமாந்தது போதும் என நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தமிழக பா.ஜ.க தரப்பிலிருந்தும் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க-வின் ஒத்துழைப்பு குறித்து அதிருப்தியை டெல்லி தலைமையிடம் தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார்கள். அது, கடந்த வாரம் பிரதமருடன் நடந்த தமிழக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பிலும் தொடர்ந்திருக்கிறது. ஒருவேளை, அ.தி.மு.க அமைச்சர் பதவியைப் பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து, டெல்லி தலைமை சரியென ஒப்புக்கொண்டிருந்தாலும் தமிழக பா.ஜ.க-வினர் விட்டிருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்'' என்கிறார்கள்.

மொத்தமுள்ள 78 அமைச்சர்களில், பா.ஜ.க அமைச்சர்கள் தவிர, ஐக்கிய தனதா தளம், லோக் ஜனசக்தி, இந்தியக் குடியரசுக்கட்சி, அப்னா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் மத்திய அமைச்சர்களாகப் பொறுப்புவகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு