Published:Updated:

ஏன் நடக்கிறது ரெய்டு?... எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும் டெல்லியின் கூட்டல் கழித்தல் கணக்குகள்?!

மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம்

சந்திரசேகர், செய்யாதுரை இருவர் மீதும் நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை, எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த 'வார்னிங்' மெசேஜ் தான் என்கின்றன அ.தி.மு.க வட்டாரங்கள்.

ஏன் நடக்கிறது ரெய்டு?... எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும் டெல்லியின் கூட்டல் கழித்தல் கணக்குகள்?!

சந்திரசேகர், செய்யாதுரை இருவர் மீதும் நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை, எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த 'வார்னிங்' மெசேஜ் தான் என்கின்றன அ.தி.மு.க வட்டாரங்கள்.

Published:Updated:
மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம்

'அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும்? பொதுக்குழுவுக்கு நாங்கள் தடை விதிக்க முடியாது', என உச்ச நீதிமன்றம் நேற்று தன் உத்தரவில் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, "கழகத்தின் தற்காலிக பொதுச் செயலாளராக முடிசூடிக் கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தடையுமில்லை. ரூட் க்ளியர்..." என அவரது ஆதரவாளர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வெளிவந்த அதேநேரத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'நமது அம்மா'வின் வெளியீட்டாளருமான வடவள்ளி சந்திரசேகர் மீது வருமானவரித்துறை சோதனைகள் தடதடக்கின்றன. விருதுநகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செய்யாதுரை தொடர்புடைய இடங்களிலும் சோதனை தொடர்கிறது. இரண்டாவது நாளாக தொடரும் இந்த ரெய்டால், அ.தி.மு.க வட்டாரங்களில் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லை. குறிப்பாக, எடப்பாடி முகாமில் கலவர ரேகைகள் படர்ந்திருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணியுடன் சந்திரசேகர்
எடப்பாடி பழனிசாமி, வேலுமணியுடன் சந்திரசேகர்

ஜனாதிபதி தேர்தல் விரைவிலேயே நடைபெறவிருக்கும் நிலையில், அ.தி.மு.க தலைவர்களுக்கெல்லாம் மிக நெருக்கமாக இருக்கும் சந்திரசேகர், செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் இந்த ரெய்டுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து, அ.தி.மு.க-வின் சீனியர்கள் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களிடம் பேசினோம். "வடவள்ளி சந்திரசேகர் லேசுப்பட்டவரல்ல. வேலுமணியின் வலது கரமாக அறியப்படுபவர். வேலுமணியின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்திருப்பவர். அதேபோல, நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர். எடப்பாடியின் சம்பந்தி நிறுவனத்துடன் இணைந்து, செய்யாதுரையின் எஸ்.பி.கே கன்ஷ்ட்ரக்‌ஷன் நிறுவனம், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளில் பல டெண்டர்களை எடுத்துச் செய்ததாக தகவல் உண்டு. சந்திரசேகர், செய்யாதுரை இருவர் மீதும் நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை, எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த 'வார்னிங்' மெசேஜ் தான். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி அமர்வதை விரும்பாத பா.ஜ.க., அவருக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு முன்னதாக, எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என பலருக்கும் ஸ்வீட் பாக்ஸ்கள் சென்றன. எடப்பாடிக்கு ஆதரவாக திரள வேண்டுமென அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதற்கான பொறுப்பை கொங்கு மண்டலத்தில் சந்திரசேகரும், தென் மாவட்டங்களில் செய்யாதுரையும் பார்த்துக் கொண்டனர். ஜூலை 11-ம் தேதி கூடவிருக்கும் பொதுக்குழுவுக்கு முன்னதாகக்கூட, சில நிர்வாகிகளுக்கு ஸ்வீட் பார்சல் அனுப்ப ஏற்பாடானது. இதையெல்லாம் மோப்பம் பிடித்துதான் தற்போது இந்த ரெய்டுகள் தடதடக்கின்றன. எடப்பாடிக்கு எதிராக பா.ஜ.க காய் நகர்த்துவதில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முதலாவது, பத்திரிகையாளர் ஒருவருக்கும் எடப்பாடிக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல். டெல்லியில் தனக்கென பெரிய லாபியை வைத்திருக்கும் அந்த பத்திரிக்கையாளர், 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் சில ஆலோசனைகளை எடப்பாடிக்கு அளித்தார். டெல்லிக்கும் அந்த தகவல்களைச் சொன்னார். ஆனால், எடப்பாடி அவர் பேச்சை மதிக்கவே இல்லை. ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தபோதுகூட, பன்னீர் - எடப்பாடி இடையே சமரசம் ஏற்பட சில முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். அதற்கு, 'அவரெல்லாம் ஒரு ஆளா? நாலு வருஷம் சி.எம்-மா இருந்தவர் எடப்பாடி. ஒரு கட்சிக்குத் தலைவர். மக்களைச் சந்தித்து வாக்குகள் பெற்றவர். அந்த பத்திரிகையாளர் சொல்றதை எடப்பாடி கேட்கணுமா?' என்கிற ரீதியில் எடப்பாடி தரப்பு பேச, 'ஈகோ' மோதல் தலைதூக்கிவிட்டது. அந்தப் பத்திரிகையாளர்தான், தற்போது எடப்பாடி அன்ட் கோவுக்கு எதிராக டெல்லியில் பலமாக காய் நகர்த்தி வருகிறார். 'ஒற்றைத் தலைமையாக எடப்பாடி உருவெடுத்துவிட்டால், காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணி உருவாகிவிடும். பா.ஜ.க தனி மரமாகிவிடும்' என்றெல்லாம் அந்த பத்திரிகையாளர் தூபம் போட, டெல்லியும் தீவிரமாக கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது.

இரண்டாவது, எடப்பாடியின் அதீத வேகம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே கழகத்தின் ஒற்றை தலைமையாக அமர்ந்துவிடுவதில் முனைப்பு காட்டுகிறார் எடப்பாடி. ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு கேட்டு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தன்னைச் சந்தித்தபோது, 'எங்களுக்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை. தலையிட வேண்டாம்' என்றுதான் சொல்லி அனுப்பினார் எடப்பாடி. ஆனால், முன்னாள் ஆளுநர் ஒருவர் மூலமாக டெல்லியில் லாபி செய்தது, சகட்டுமேனிக்கு ஸ்வீட் பாக்ஸ் விநியோகிப்பது, காங்கிரஸ் கட்சியுடன் மறைமுக தொடர்பிலிருப்பது உள்ளிட்ட விஷயங்களால், எடப்பாடி தரப்பினர் மீது டெல்லி அதிருப்தி அடைந்துவிட்டது. அதன் வெளிப்பாடுதான் இந்த வருமானவரித்துறை சோதனைகள். இதனைத் தொடர்ந்து எடப்பாடி முகாமில் கலவர மேகங்கள் சூழ ஆரம்பித்துவிட்டன. சோதனை நடந்து கொண்டிருக்கும்போதே சில முன்னாள் அமைச்சர்கள், 'தேவையில்லாம டெல்லியை ஏன் பகைச்சுக்கனும்? அவங்கக் கூட மோத முடியாம, சசிகலாவே ஒதுங்கிட்டாங்க. ஒரு ரூபாய்கூட அவங்களால வெளியே எடுக்க முடியல. இப்ப நாம டெல்லியோட மோதுனா, நம்மளையும் தெருவுல நிறுத்திடுவாங்க' என்று எடப்பாடியிடம் பதைபதைத்திருக்கிறார்கள். ஆனால், அவர் இதற்கெல்லாம் அசரவில்லை. ஒற்றைத் தலைமையாகும் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி" என்றனர் விரிவாக.

சசிகலா
சசிகலா
தே.சிலம்பரசன்

திட்டமிட்டபடி ஜூலை 11 பொதுக்குழுவை நடத்துவது. தற்காலிக பொதுச் செயலாளராக தன்னை அறிவிக்க வைப்பது. தொடர்ந்து, கழக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி, ஒருமனதாக தன்னை தேர்வாக்கிக் கொள்வது என அடுத்தடுத்து திட்டங்களை பக்காவாக பட்டியலிட்டு வைத்திருக்கிறார் எடப்பாடி. அவரின் மனநிலை இதே நிலையில் தொடர்ந்தால், இரண்டு 'ஷாக்' ட்ரீட்மென்ட்கள் கொடுக்கவும் டெல்லி தயாராகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லி பா.ஜ.க தலைவர் ஒருவர், "முதல் ஷாக்காக, முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு அமலாக்கத்துறையிலிருந்து 'நோட்டீஸ்' வழங்கப்படலாம் என்கிறார்கள். டெல்டாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் பிரமாண்ட மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறாராம். சமீபத்தில், அந்த மருத்துவமனை திறப்பு விழாவுக்கு பா.ஜ.க தலைவர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கிறார். 'டெல்லி உங்க மேல கோபமாக இருக்குப்பா. நான் ரிஸ்க் எடுக்க விரும்பல' எனச் சொல்லி, வரமறுத்திருக்கிறார் அந்த பா.ஜ.க தலைவர். தடபுடலாக மருத்துவமனை கட்டியிருக்கும் அந்த முன்னாள் அமைச்சரும் அமலாக்கத்துறையின் ரேடாரில் சிக்கியிருக்கிறார். அதேபோல, பல்வேறு குற்றச்சாட்டுகள், வருமானவரித்துறை சோதனைக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கும் சிக்கல் எழும் என்கிறது அமலாக்கத்துறை வட்டாரம்.

இரண்டாவது ஷாக், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன். 2018-ம் ஆண்டு எடப்பாடியின் சம்பந்தி சுப்பிரமணியன் தொடர்புடைய இடங்களில் சோதனையிட்டது வருமானவரித்துறை. அப்போது, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனடிப்படையில், புதிதாக வழக்கு பதிவு செய்து, மிதுனுக்கு 'நோட்டீஸ்' அனுப்பவும் ரெடியாகிறது வருமானவரித்துறை. டெல்லி எதிர்பார்ப்பதெல்லாம் இரட்டைத் தலைமை தொடர வேண்டும், காங்கிரஸ் கட்சியுடன் எந்த மறைமுகப் பேச்சுவார்த்தையும் எடப்பாடி நடத்தக்கூடாது என்பதுதான். அதற்கு அவர் மசிய மறுப்பதுதான், இப்போது சோதனை வரை வந்து நிற்கிறது" என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் வெளியிட்டாளர் மீது இந்த வருமானவரித்துறை சோதனை நடக்கிறது. ஆனால், இதைக் கண்டித்தோ, அல்லது விளக்கம் தெரிவிக்கும் விதமாகவோ இதுவரையில் அ.தி.மு.க-விலிருந்து யாரும் பேசவில்லை. அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரமாகவே தொடக்கத்தில் பார்க்கப்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரம், இப்போது டெல்லியின் கூட்டல் கழித்தல் கணக்குகளில் சிக்கியிருக்கிறது. ஜூலை 11 பொதுக்குழு நடந்து, எடப்பாடி ஒற்றைத் தலைமையாக உருவெடுத்தாலும், அவருக்கு சிக்கல் தீராது என்பதே, இரண்டு நாள்களாக தொடரும் வருமானவரித்துறை சோதனைகள் சொல்கின்றன.