Published:Updated:

``கைகோத்தால் நாம் கரைசேர முடியாது!'' - தி.மு.க அழைப்பும் உஷாரான கமலும்

கமலும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். நாம் மத்திய அரசுக்கு எதிராக இருப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்காக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தை நாம் எதிர்க்கவும் வேண்டாம்.

கமல்
கமல்

"தி.மு.க தலைமையில் 23-ம் தேதி நடைபெற உள்ள பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது” என்று அதிரடியாக அறிவித்துள்ளார் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இந்த அறிவிப்புக்குப் பின்னால் நடக்கும் அரசியல்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்
`குடியுரிமை திருத்தச் சட்டம்' - ரஜினி கருத்தும் எதிர்வினையும்!

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள், மாணவ அமைப்புகள் போன்றவை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள். குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் அதை ஆதரித்து வாக்களித்த அ.தி.மு.க-வுக்கு எதிராகவும் தமிழகத்தில் எந்த மாதிரியான போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்பது குறித்து அப்போது பேசப்பட்டது. அதன் முடிவில் சென்னையில் எதிர்ப்புப் பேரணி ஒன்றை பிரமாண்டமாக நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதே நேரம் குடியுரிமை மசோதாவுக்கு எதிராகத் தமிழகத்தில் முதல் கட்சியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

மத்திய அரசு இந்தியாவுக்குள் மத பிரிவினையை உண்டுபண்ணப் போவதாகவும் கடும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார் கமல்ஹாசன். இதனால் தி.மு.க-வின் தலைமையில் நடந்த கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கமலுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், கமல் கட்சிக்கு தி.மு.க தரப்பிலிருந்து அழைப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கமலிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விளக்கினார். மேலும், தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகனும் கமலை நேரடியாகச் சந்தித்து தி.மு.க தலைமையில் நடக்கும் போராட்டத்தில் கமலின் மக்கள் நீதி மய்யமும் கலந்து கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்தனர். கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து பதில் சொல்வதாக அப்போது அவர்களிடம் கமல் தெரிவித்துள்ளார்.

கமல்- ஆர்.எஸ்.பாரதி
கமல்- ஆர்.எஸ்.பாரதி

இந்த நிலையில் தி.மு.க-வின் கூட்டத்தில் கமலின் மக்கள் நீதி மய்யம் பங்கேற்க முடியாது என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு அந்தக் கட்சியின் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது, “கமல் அவர்களுக்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சைக்காக மருத்துவ பரிசோதனை செய்ய அவர் வெளிநாடு சென்றுள்ளார். எனவே, தலைவர் இல்லாமல் இந்தக் கூட்டத்தில் கட்சி பங்கேற்க இயலாது. ஆனால், இந்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்திருந்த மசோதிவுக்கு தி.மு.க-வின் எதிர்ப்புப் போராட்டத்துக்கு தங்களது கட்சியின் தார்மிக ஆதரவு தொடர்ந்து இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். தி.மு.க தரப்பில் அந்தக் கட்சியின் கூட்டணியில் இல்லாத கட்சியான மக்கள் நீதி மய்யத்துக்கு மட்டுமே அழைப்பு கொடுத்தது. ஆனால், அந்தக் கட்சியும் கைவிரித்தது ஸ்டாலினை அப்செட்டாக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

உண்மையில், கமல் வெளிநாடு சென்றுவிட்டதால் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாத காரணமா என்று கமல் தரப்பில் கேட்டால், "அதுவும் ஒரு காரணம். ஆனால், அதைத்தாண்டி சில காரணங்கள் இருக்கின்றன” என்று சொல்கிறார்கள். குறிப்பாக, தி.மு.க தரப்பில் கமல்ஹாசனை சந்தித்த அடுத்த சில நிமிடங்களில் மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப் பொறுப்பாளர் முரளி அப்பாஸ் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

கமல் -ஸ்டாலின்
கமல் -ஸ்டாலின்

அந்தப் பதிவில், "குடியுரிமைச் சட்டம் வாபஸ் பெற வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் அ.தி.மு.க ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதும் தி.மு.க ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதும்” என்று பதிவிட்டிருந்தார். அதாவது, தி.மு.க எங்களுக்கு அழைப்புக் கொடுத்தாலும் தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே எங்களுக்கு ஒன்றுதான் என்று அர்த்தத்தில் அந்தப் பதிவு இடம்பெற்றிருந்தது.

இந்தப் பதிவும் கமலின் எண்ணமும் ஒன்றே என்கிறார்கள். "மக்கள் நீதி மய்யம் அரசியல் இயக்கமாக உருவானதற்கு பிரதான காரணங்களில் ஒன்று இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஊழலற்ற ஒரு அரசை நிர்மானிக்க வேண்டும் என்பதுதான். அந்த ஒத்த கருத்தை ரஜினியும் தொடர்ந்து சொல்லிவந்ததால்தான் ரஜினியுடன் கைகோக்கவும் அவர் திட்டமிட்டார். ஆனால், மத்திய அரசின் சட்டத்திருத்த மசோதாவில் தி.மு.க-வை முந்திக்கொண்டு கமல் நீதிமன்றப் படியேறியதை தி.மு.க-வே எதிர்பார்க்கவில்லை. மத்திய அரசு எதிர்ப்பு விஷயத்தில் தி.மு.க-வைவிட கமலின் வேகம் அதிகமாக இருந்தது. இந்த நிலையால்தான் அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டத்துக்கு கமல் அழைக்கப்படவில்லை. இப்படியிருக்கையில், பேரணிக்கு கமல் வர வேண்டும் என்று அழைப்பு கொடுத்தன் காரணமே தேசிய அளவில் ஒரு வலுவான அணியை தங்கள் பின்னால் வைத்திருக்கிறோம் என்று தி.மு.க காட்ட நினைக்கிறதோ என்கிற எண்ணம் கமல் கட்சி நிர்வாகிகளிடம் எழுந்தது.

`டெல்லியை உலுக்கிய பேரணி... ஒற்றைத் தலைமை!' - யார் இந்த சந்திரசேகர் ஆசாத்?

அதே நேரம் தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவித்த அன்றுதான் கமலுக்கு மருத்துவப் பரிசோதனைக்கான நேரமும் ஒதுக்கப்பட்டிருந்தது. அதை ஸ்டாலின் தொலைபேசியில் பேசும்போதே கமல் தெரிவித்துவிட்டார். அதற்குப் பிறகு கமல், தன் கட்சி நிர்வாகிகளிடம், நம் கட்சியினர் தி.மு.க-வின் போராட்டத்தில் கலந்துகொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர்கள், "நமக்கு என்று தனித்துவம் இருக்கிறது. இப்போது தி.மு.க தலைமையில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்றால் எதிர்காலத்தில் அதை வைத்தே நமக்கு எதிராக அரசியல் விமர்சனங்கள் வர ஆரம்பிக்கும். அதே போல் வைகோ, திருமா போன்று நம்மையும் கூட்டணியில் ஓர் அங்கம் என்கிற பிம்பத்தை தி.மு.க தரப்பு ஏற்படுத்திவிடும். ஆர்ப்பாட்டம் செய்வது என்றால் நாம் தனியாகச் செய்துகொள்ளலாம், நீங்களும் இல்லாமல் தொண்டர்கள் மட்டும் பங்கேற்பது நமக்கு உகந்தது அல்ல” என்று சொல்லியுள்ளார்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கமலும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். நாம் மத்திய அரசுக்கு எதிராக இருப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்காக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தை நாம் எதிர்க்க வேண்டாம். அவர்களுக்குத் தார்மிக ஆதரவைத் தெரிவிப்போம். மய்யத்தின் தனித்துவத்தையும் நாம் பேணிக் காக்க வேண்டும். இன்னும் ஓர் ஆண்டில் தமிழகத் தேர்தல் நடக்க இருக்கிறது. அப்போது அவர்களையும் எதிர்த்துதான் நாம் களமாட வேண்டிய நிலை இருக்கிறது. இப்போது கைகோத்துவிட்டு, அப்போது எதிர்த்துப் பேசுவது நமக்கு சிக்கலாகிவிடும்” என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இந்தக் கருத்தை சொல்லிவிட்டு தி.மு.க தலைமைக்கு ஓரு கடிதத்தையும் எழுதிவிட்டு விமானம் ஏறிவிட்டார் உலக நாயகன்.