Published:Updated:

`காஷ்மீரில் இணையம் எதற்கு.. ஆபாசப் படங்களைப் பார்க்கவா?'- நிதி ஆயோக் வி.கே.சரஸ்வத் சர்ச்சை பேச்சு!

காஷ்மீரில் 150 நாள்களைக் கடந்தும் இணைய சேவைகள் சரியாக வழங்கப்படாத நிலையில், நிதி அயோக் குழுவின் உறுப்பினர் சரஸ்வத் காஷ்மீரில் இணைய துண்டிப்பு தொடர்பாக இன்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370-வது சட்டப்பிரிவைக் கடந்த ஆண்டு ரத்து செய்தது. இதையடுத்து போராட்டம் மற்றும் பிரச்னைகளைத் தவிர்க்க ஜம்மு காஷ்மீரில் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. முக்கியமான அரசியல் தலைவர்களை தடுப்புக் காவலில் வைத்தது. தகவல் தொடர்பு சேவைகளைளும் தடை செய்யப்பட்டன.

அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. 150 நாள்களை கடந்தும் இணைய சேவைகள் ஜம்மு காஷ்மீரில் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை. இந்நிலையில், நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் சரஸ்வத் காஷ்மீரில் இணைய துண்டிப்பு தொடர்பாக இன்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர்
காஷ்மீர்

குஜராத்தின் காந்திநகரில் உள்ள உள்ள திருபாய் அம்பானி தகவல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக வி.கே.சரஸ்வத் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், ``அரசியல்வாதிகள் ஏன் காஷ்மீருக்குச் செல்ல விரும்புகிறார்கள்?'' என்று கேள்வி எழுப்பினர். மேலும், ``காஷ்மீரின் சாலைகளில் மீண்டும் போராட்டங்களை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

மக்களைத் தூண்டுவதற்கு சமூக ஊடகங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இணைய சேவை இல்லையென்றால் இப்போது என்ன வேறுபாடு வந்துவிடப்போகிறது? இணையம் இருந்தால் அதில் எதைப் பார்க்கப் போகிறார்கள்? தவறான படங்களைப் பார்ப்பதைத் தவிர, வேறு எதையும் செய்ய மாட்டார்கள்" என்று பேசினார்.

`அமைதியை விரும்புகிறோம்; காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம்!’- மீண்டும் ட்ரம்பை அழைக்கும் பாகிஸ்தான்

தொடர்ந்து பேசிய அவர், ``காஷ்மீரில் இணையம் இல்லையென்றால், அது பொருளாதாரத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்படுவதற்கான காரணம் முற்றிலும் வேறுபட்டது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட வேண்டும். காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் முன்னேறச் செய்ய வேண்டும். ஆனால், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதிக்கும் வகையில் இந்தச் சட்டம் தொடர்பான தவறான தகவல்கள் பகிரப்படும் என்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று பேசினார்.

ஜே.என்.யூ தாக்குதல் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ``பல்கலைக்கழகம் அரசியல் போர்க்களமாக இருக்கிறது. கல்விக்கட்டணம் 10 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கான பிரச்னை அல்ல இது. அனைவரும் இதன் மூலமாகப் புகழ்பெற விரும்புகிறார்கள். நான் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

நாம் ஜனநாயகத்தைச் சேர்ந்தவர்கள், ஜனநாயக முறையிலேயே இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். நம்முடைய அரசு, கல்வித்துறை மற்றும் நான் உட்பட அனைவருமே இந்தப் பிரச்னையை ஜனநாயக ரீதியிலேயே அணுகுகிறோம். கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்கக்கூடாது" என்றார்.

ஜே.என்.யூ
ஜே.என்.யூ

மேலும், ``முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1980-ஆம் ஆண்டு வேந்தராக இருந்தபோது ஜே.என்.யூ 45 நாள்கள் மூடப்பட்டது. அப்போது, 800 மாணவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போதைய துணைவேந்தர் ஜகதீஷ் குமார் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்" என்றும் குறிப்பிட்டார்.

ஜம்மு பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களிலும் 2-ஜி சேவை கடந்த சனிக்கிழமை அன்று வழங்கப்பட்டது. நிபந்தனையுடன் கூடிய 153 வலைதளங்கள் மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. காஷ்மீரின் பல மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பிராட்பேண்ட் சேவைகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வழங்கப்பட்டாலும், சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் தகவல் தொடர்பு இடைநீக்கம் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதுடன் இணைய சேவைகளைத் திரும்ப அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

`120 நாள்களாக இன்டர்நெட் சேவை இல்லை!' - வாட்ஸ்அப் கணக்கை இழக்கும் காஷ்மீர் மக்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு