Published:Updated:

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி... எங்கு தவறு நடந்தது தெரியுமா?!

Statue of Unity
Statue of Unity ( Photo: PMO India )

உலகையே உலுக்கிய ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்கு ஒரே ஒரு வார்த்தை தவறாக மொழிபெயர்க்கப்பட்டது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது எனச் சொன்னால் நம்பமுடிகிறதா?

கர்நாடகாவின் தேவனாகிரி மாவட்டம், பி.ஜே.பி தேர்தல் பொதுக்கூட்டத்தில் முழங்குகிறார் அமித் ஷா ``சித்தராமையாவின் அரசால் கர்நாடகாவை முன்னேற்ற முடியாது, மோடியின் மீது நம்பிக்கை வைத்து எடியூரப்பாவுக்கு ஓட்டு போடுங்கள், இந்தியாவின் சிறந்த மாநிலமாகக் கர்நாடகாவை மாற்றுகிறோம்" என அவர் இந்தியில் பேச, அதைக் கன்னடத்தில் மொழி பெயர்த்த ப்ரஹலாத் ஜோஷி, ``மோடி தலித்துகளுக்கு ஒன்றும் செய்யமாட்டார், அவர் நாட்டை பாழ்படுத்திவிடுவார், தயவுசெய்து அவருக்கு ஓட்டு போடுங்கள்" என்றார். தமிழகத்தில் தங்கபாலு சிரமப்பட்டது, ஹெச்.ராஜா தடுமாறியதெல்லாம் ஏன்... மொழியோ, மொழிபெயர்ப்போ தெரியாததால் அல்ல. தங்கள் கட்சித் தலைவருக்கு தாங்களே மொழிபெயர்ப்பாளராக இருப்பதால் வரும் பதற்றம், பயம்தான். அதனால்தான் அரசியல் களத்தில் தேசிய, சர்வதேச அளவில் அரசு மொழிபெயர்ப்பாளர்களின் அவசியம் இன்றியமையாதது.

அமித் ஷா
அமித் ஷா

மொழிபெயர்ப்பு - நல்ல தமிழ் வாசிப்பாளர்களுக்கு இந்த வார்த்தை சில தரமான ரஷ்ய நாவல்களை நினைவுபடுத்தலாம், பயணிகளுக்கு ஒரு சுவாரஸ்யமான டூர் கைடு நினைவுக்கு வரலாம், அதுவும் இல்லையா, `அவென்ஜர்ஸ்' படத்தில் அயர்ன் மேனுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்ததாவது பலருக்கு ஞாபகம் வரும். ஆனால், மொழிபெயர்ப்பின் தேவையும், பயன்பாடும், முக்கியத்துவமும் இந்த விஷயங்களோடு முடிவதில்லை. உலக அரசியலில் மிக முக்கியமான வினையாற்ற வல்லது மொழிபெயர்ப்பு.

உலகையே உலுக்கிய ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்கு ஒரே ஒரு வார்த்தை தவறாக மொழிபெயர்க்கப்பட்டது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது எனச் சொன்னால் நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை....

இரண்டாம் உலகப் போர் உச்சத்திலிருந்த சமயம், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பலம் பொருந்திய நாடுகள் ஒன்றிணைந்து எதிரி நாடான ஜப்பானுக்கு ஒரு செய்தியை அனுப்புகின்றன. ``மொத்தமாக சரணடையாவிட்டால் உடனடியாக ஜப்பான் முற்றிலும் அழிக்கப்படும் " என்று பொருள் கொள்வதாக இருந்தது அந்த இறுதி அறிவிப்பு.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று திட்டவட்டமாக ஜப்பான் அரசு முடிவெடுக்காத நிலையில், பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கிறார் ஜப்பான் அதிபர் சுசூகி கண்டரோ.

அணு குண்டு வெடிப்பு
அணு குண்டு வெடிப்பு

பேட்டியில், இந்த அறிவிப்பு பழைய அறிவிப்புகளிலிருந்து பெரிதாய் மாறுபடவில்லை என்று கூறியவர், தற்போதைக்கு ஜப்பான் அரசு இவ்விஷயத்தில் எதுவும் பதிலளிக்காமல் அமைதி காக்கிறது (Withholding comment) என்று பொருள்படும்படி ``மோக்குசாட்சு" (Mokusatsu) எனும் வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்.

ஆனால், அதே வார்த்தைக்கு மற்றொரு அர்த்தமும் உண்டு. மறுநாள் காலை, ஜப்பான் பத்திரிகைகள், `அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் இந்தக் கூட்டு அறிவிப்பை ஜப்பான் `ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை’ (not worthy of comment) என்ற அர்த்தத்தில் செய்தி வெளியிட்டன. அவ்வளவுதான், அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன்னுக்கு கோபம் தலைக்கேறியது, அன்றிலிருந்து பத்தாவது நாள், உலகின் முதல் அணுகுண்டு பல லட்சம் உயிர்களைக் காவு வாங்கியது. பல அர்த்தம் கொண்ட தெளிவற்ற வார்த்தையை ஜப்பான் அதிபர் பயன்படுத்தியது தவறு என்று ஒருபுறமும், ``சரணடைவதற்குத் தவிர எந்த முடிவைச் சொல்லியிருந்தாலும் ஜப்பானுக்கு இதே நிலைதான். ஆகவே, வார்த்தை பயன்பாட்டில் ஒன்றும் இல்லை" என்று மறுபுறமும் பல வகைகளில் இந்த வார்த்தையை, அதன் எதிர்விளைவுகளைப் பற்றிய மாற்றுக் கருத்துகள் இன்றளவும் விவாதிக்கப்படுகின்றன. இந்த வார்த்தை காரணமோ அல்லது வேறு காரணமோ... moku - `silence' satsu - `killing' எனும் இந்த வார்த்தையின் அர்த்தம் போலவே, ஒரே நொடியில் கத்தியின்றி ரத்தமின்றி பல உயிர்களைக் கொன்றன அந்தக் குண்டுகள்.

உலக அளவில், மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையினால் ஏற்பட்ட மாபெரும் பாதிப்புகளில் முதன்மையானதாக இன்றுவரை ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்கள் கருதப்படுகின்றன.

சர்வதேச நாடுகளின் உறவுகளில், ஊடகங்களின் மொழிபெயர்ப்புகள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது, இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக்கொள்ளும்போது அவர்களின் பேச்சுவார்த்தைக்குத் துணை நிற்கும் அரசு மொழிபெயர்ப்பாளர்களின் பணி. அவர்களுக்கு மொழியுடன், கூடவே சர்வதேச அரசியலும், அந்த மொழி சார்ந்த கலாசாரமும் தெரிந்திருப்பது அவசியம்.

மோடி
மோடி

அவ்வளவு கூர்மையான ஆயுதமான மொழி, அந்தத் தலைவர்கள் வேற்று மாநிலங்களுக்குச் செல்லும்போதெல்லாம் உறையிலிட்ட வாளாகப் பயனற்றுப் போகின்றது. அத்தகைய சமயங்களிலெல்லாம் தலைவர்களின் பேச்சின் வீச்சை அதே லாகவத்தோடு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் கடமை மொழிபெயர்ப்பாளர்கள் வசம் சேர்கிறது.

சமீபத்தில் கூட சீன அதிபரும், இந்தியப் பிரதமரும் மாமல்லபுரத்தில் சந்தித்துக்கொண்டபோது அதிகம் கவனம் பெற்றார், அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்ட இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி மதுசூதன். இரு பெரும் தலைவர்களின் உரையாடல்களை அர்த்தம் மாறாமல் உடனுக்குடன் மொழிபெயர்த்துச் சொல்வதற்கு அசாத்தியமான மொழித்திறன் என்பது அவசியம். உதாரணத்துக்கு வசந்த் வாசுதேவ் பரஞ்ப்பே என்னும் இந்திய அதிகாரியின் கதையைச் சொல்கிறேன்.

மதுசூதன் ரவீந்திரன்
மதுசூதன் ரவீந்திரன்
DD Podhigai
`சென்னையில் படிப்பு; முதன்மை செயலாளர் பணி!’ - மோடி, ஜின்பிங் சந்திப்பில் இருந்த தமிழர் மதுசூதன்

1954-ம் ஆண்டு, முழுநிலா இரவு... பெய்ஜிங்கில் உள்ள மாவோவினுடைய வீடு... இந்தியப் பிரதமர் நேருவை வழியனுப்ப வாசல் வரை வருகிறார் மாவோ. நேருவின் இரு கரங்களையும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, நட்பைப் பற்றிய இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான ஒரு சீனக் கவிதையைச் சொல்கிறார்... அந்தச் சூழலின் இனிமை மாறாது, அந்தக் கவிதையை நேருவுக்கு அழகுற இந்தியில் மொழிபெயர்க்கிறார் வசந்த் வாசுதேவ் பரஞ்ப்பே...

``துன்பத்தில் கொடியது

துணை நின்றவர் பிரிவது

இன்பத்தில் பெரியது

இனிமையானவர் இணைவது!"

என்பதே தமிழ் மொழியில் அந்தக் கவிதையின் சாராம்சம். வசந்த் வாசுதேவ் பரஞ்ப்பே அன்று இல்லையென்றால், அந்த அழகிய தருணம் அர்த்தமின்றிப் போயிருக்கும் என்கிறார் இந்த நிகழ்வைப் பற்றிப் பதிவுசெய்த சீன கல்வியாளர் டான் சுங். நேரு, இந்திரா காந்தி, எஸ். ராதாகிருஷ்ணன் எனப் பலரின் சீன தேச பயணத்தில் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்ட வசந்த் வாசுதேவ் பரஞ்ப்பேவினுடைய சீன மொழிப் புலமையைக் கண்டு மாவோ மிகவும் வியந்ததுண்டாம். இது வரலாறு... ஆனால், இன்றைய நிலை வேறு.... மொழி வளம் மிக்க இந்திய நாட்டில், மொழிபெயர்ப்பாளர்களின் வளம் இல்லை.

வேற்று நாட்டின் மொழி இருக்கட்டும், இந்திய நாட்டினுள் அதிகமாகப் பேசப்படும் பல மொழிகளுக்கே திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பதில்லை.

அரசியல் பொதுக்கூட்டங்களில் மொழிபெயர்ப்பவர்கள் ஒருபுறம் இருக்கட்டும், இன்றைய நிலையில், அரசு மொழிபெயர்ப்பாளர்களுக்கே பற்றாக்குறை இருக்கிறது, அதிலும், வெளிநாடு செல்வதில் சாதனைகள் புரியும் நமது பிரதமர் மோடிக்குத்தான், சரியான மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததில் அதிக சிக்கல் இருக்கிறது. சமயங்களில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் இன்றி, மக்களவை செயலகத்திலிருந்து மொழிபெயர்ப்பாளர்களை மோடி தன்னுடன் அழைத்துச் செல்லும் நிலையும் ஏற்பட்டது. இன்றைய நிலையில், திறமையாக, சரளமாக வேற்று நாட்டு மொழியை மொழிபெயர்க்கும் மிகச் சொற்பமான அரசு மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளனர். அந்நிலையில் உதவிக்கு வருவது இந்திய ஐஎஃப்எஸ் (IFS) அதிகாரிகளே.

நிலாக்க்ஷி சாஹா சின்ஹா
நிலாக்க்ஷி சாஹா சின்ஹா
Photo: PMO India / Twitter
`சீனாவில் 3 ஆண்டுகள்;பீஜிங் இந்தியர்களின் செல்லமகள்!'-மோடியின் நிழலாகப் பின்தொடர்ந்த பிரியங்கா யார்?

மொழிபெயர்ப்பில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள், தோனி டக் அவுட் ஆவதுபோல சில தவறுகள் இழைத்த வரலாறும் நம்முடையதே... கிரிக்கெட் ஒரு விளையாட்டு. ஆனால், அரசியல் வினையல்லவா? உதாரணத்துக்கு நிலாக்க்ஷி சாஹா சின்ஹா, மோடியின் சிங்கப்பூர் பயணத்தில் உடன் சென்றவர், மோடி முன்தயாரிப்பின்றி கேள்விகளுக்குப் பதில் வழங்கும் நேர்காணலில், பதில்களை முன்கூட்டியே எழுதிவைத்து வாசித்து சர்ச்சையில் சிக்கினார். மோடி சொன்னதைவிட சில இடங்களில் கூடுதலாகவும் மொழிபெயர்ப்பில் பதில் சொன்னார். எதிர்க்கட்சியினர் விமர்சனங்களோடு இந்த விஷயம் முடிவுக்கு வந்தது. ஆனால், நினைத்துப் பாருங்கள், சீன அதிபர் ஜின்பிங்கிடமோ, ரஷ்ய அதிபர் புடினிடமோ, அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பிடமோ நமது தேர்தல் பிரசார மேடைகளில் செய்வதைப்போல நம்முடைய அதிகாரிகள் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும்?

அதையெல்லாம் தவிர்ப்பதற்காகவே, பன்மொழி புலமையுள்ளவர்களாக நம் அதிகாரிகளை தயார்படுத்தும் கடமை இந்தியாவுக்கு இருக்கிறது. அதுமட்டுமின்றி, இத்தகைய மொழிபெயர்ப்பாளர்களுக்கு, ஒரு நாட்டின் மொழியுடன் கூட அந்த நாட்டின் கலாசாரமும் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கும் ஒரு சின்ன உதாரணம் இருக்கிறது. பூட்டான் நாட்டு மக்கள் கைதட்டுவது என்பது பாராட்டுவதற்காக அல்ல, மாறாக அவர்கள் தீய சக்திகளை விரட்டுவதற்காகக் கையைத் தட்டுவார்கள். இந்த நிலையில், நம் பிரதமர் அங்கு உணர்ச்சிபொங்க ஒரு உரையாற்றிவிட்டு வழக்கமான கைதட்டல் ஒலிக்காகக் காத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு நிசப்தம் நிலவும், அப்போது பிரதமருக்கு அவர்களின் கலாசாரத்தையும் எடுத்துக்கூறும் திறமை மொழிப்பெயர்ப்பாளருக்கு இருந்தால் நல்லது. மோடியின் பூட்டான் பயணத்தின்போது, அவர் பூட்டான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு, பூட்டான் எம்.பி-க்கள் தங்கள் வழக்கத்தை மாற்றி, பாராட்டுவதற்காக கைதட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மோடியின் பூட்டான் பயணத்தில் மக்களவை செயலகத்திலிருந்து மொழிபெயர்ப்பாளராக உடன் சென்றவர், இந்தியப் பிரதமரின் இந்தியைப் புரிந்துகொள்ளவே திணறினார் என்பது தனிக்கதை.

Modi in Bhutan
Modi in Bhutan

ஆக, தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றது. சரி, ஒவ்வொரு நாடுகளிலும் மொழிபெயர்ப்பவர்களுக்கா பஞ்சம் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். சரிதான், ஆனால் பேசுவது நீங்களும் நானும் இல்லையே, இரு நாட்டின் முதன்மைத் தலைவர்கள் பேசுகிறார்கள் எனும்போது, நம்பகத்தன்மை, ரகசிய காப்பு என்பது அத்தியாவசியம் என்றறிக. ஆகவே, இத்தகைய வேலையை மொழி கற்றறிந்த, நாட்டுப் பற்றறிந்த, அதிகாரிகள் வசம் ஒப்படைப்பதே நமக்கும் நாட்டுக்கும் நல்லது.

1984-ம் ஆண்டு, இந்திரா காந்தியால்தான், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் `Interpreters cadre' எனப்படும் மொழிபெயர்ப்பாளர்கள் பிரிவு உருவாக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டின் தொடக்கம் வரையிலும்கூட `Interpreters cadre'ல் ஏழு மொழிகள் பேசக்கூடிய 33 அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். நிரந்தரமற்ற வேலை, குறைவான சம்பளம், குறைவான வாய்ப்புகள் ஆகிய காரணங்களாலேயே பலர் இந்த interpretation எனும் மொழிபெயர்ப்புத் துறையைத் தேர்ந்தெடுப்பதில்லை என்கின்றனர். அதனால் இத்தகைய சமயங்களில் பெரும்பாலும் ஐஎஃப்எஸ் (IFS) அதிகாரிகளையே அரசு சார்ந்திருக்கிறது. அப்படிச் செய்தால், அந்தந்த ஐஎஃப்எஸ் (IFS) அதிகாரிகளின் பணிச்சுமையைக் கூட்டி, தங்கள் வேளையில் அவர்களின் வளர்ச்சியைத் தடைபடுத்தும் என்பது இதை எதிர்ப்பவர்கள் கருத்தாக இருக்கிறது.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி
Vikatan

இந்தியாவைப் பொறுத்தவரை அரபி, ரஷ்யா, மாண்டரின், ஸ்பானிஷ் ஆகிய சில மொழிகளுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பினும், ஆங்கிலம் தாண்டி இந்த மொழிகளைத் திறம்பட இந்தியில் மொழிபெயர்க்க வல்லவர்கள் குறைவாகவே உள்ளனர். ரஷ்யாவுக்குச் சென்ற மோடிக்கு, இத்தனை கோடி இந்தியர்களில் ஒருவர் கூட இல்லாமல் ரஷ்ய நாட்டு அதிகாரி ஒருவரே இந்தி மொழிபெயர்ப்பாளராக இருந்தார் என்பதே அதற்குச் சாட்சி. இந்தியாவில், டெல்லியில் உள்ள `School of languages ' எனும் இடத்தில்தான் இந்திய அதிகாரிகளுக்கு மொழிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுவும் 6 மொழிகளில் மட்டுமே. இதைத் தவிர்த்து நம் அதிகாரிகளுக்குப் போதிய பயிற்சிகள் இந்திய அரசால் தரப்படுவதில்லை என்பதே உண்மை. தற்போதைய நிலையில், பெரும்பாலானவர்களுக்கு கலிபோர்னியாவில் உள்ள மான்டெரெய் கல்வி நிறுவனத்தில்தான் மொழிப்பயிற்சி அளிக்கப்படுகிறது, இதை மாற்றி இந்தியாவில் உலகத் தரத்தில் மொழிப்பயிற்சி வழங்கும் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் கட்டாயம். இல்லையேல், 2015-ம் ஆண்டு உலக சம்ஸ்கிருத மாநாட்டில் சம்ஸ்கிருதத்தில் பேசிய சுஷ்மா ஸ்வராஜின் உரையை மொழிபெயர்க்க அரசு மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாது போன நிலையே மேலும் மேலும் தொடரக்கூடும்.

கடந்த 6 ஆண்டுகளில் 56 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு, பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களை இந்தியாவில் வரவேற்று வெளியுறவுக் கொள்கையில் அதிதீவிரம் காட்டும் மோடியின் அரசு இதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது.

யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, ``ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” எனும் மகா மொழிபெயர்ப்பு பிழையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லவா நாம்? மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை நம்மையன்றி வேறு யாரால் நன்றாக உணர முடியும்.

அடுத்த கட்டுரைக்கு