Published:Updated:

ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்ட காந்தியின் பெயர்... இருந்தும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

1937-ம் ஆண்டு அந்த கமிட்டியின்பரிந்துரைக்குச் சென்ற நூற்றுக்கணக்கான பெயர்களில், மகாத்மா காந்தியின் பெயர் 13 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருந்தது.

உலகத் தலைவர்களின் பட்டியலில் நீங்காத இடம்பிடித்து, உலகின் அகிம்சையின் அடையாளமாகப் போற்றப்படும் மகாத்மா காந்திக்கு, உலகின் மிக உயரிய விருதுகளில் முக்கியமானதாகக் கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ஏன்? 1937-ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது அந்த வரலாறு.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

இந்தியா பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் பிடியிலிருந்த சமயம் அது; இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் முழு வீச்சில் வலுவடைந்திருந்தது. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் விடுதலைக்குப் போராடிப் புகழ்பெற்று நாடு திரும்பிய காந்தியின் பின்னால் இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்றனர். கத்தியின்றி ரத்தமின்றி போராடுவோம் என்ற அறைகூவலோடு வித்தியாசமான போராட்ட முறையைக் கையிலெடுத்த காந்தி உலகின் கவனத்தைப் பெற்றிருந்தார். அப்போது காந்தியின் கொள்கைகளை ஆதரிக்கும் பலர் `இந்தியாவின் நண்பர்கள்' (Friends of Gandhi) என்ற பெயரில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒன்றிணைந்து இருந்தனர். அந்த அமைப்பின் முக்கிய பொறுப்பிலிருந்த நார்வீஜிய பெண்கள் உந்துதலின் பேரில், நார்வீஜியன் பாராளுமன்றத்தைச் சார்ந்த ஓலை கால்பியன்சென் என்பவர் முதன்முதலாக 1937-ம் ஆண்டு காந்தியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரை செய்தார்.

ஆல்பிரட் நோபலின் நினைவாகக் கொடுக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு யார் பெறுவது என்பதை நார்வே நாட்டின் பாராளுமன்றம் அமைக்கும் ஐந்து பேர் கொண்ட கமிட்டி ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கிறது. 1937-ம் ஆண்டு அந்த கமிட்டியின்பரிந்துரைக்குச் சென்ற நூற்றுக்கணக்கான பெயர்களில், மகாத்மா காந்தியின் பெயர் 13 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருந்தது.

ஆனால், அவ்வருடம் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

நோபல் பரிசு!
நோபல் பரிசு!

ஏன் என்ற கேள்விக்குப் பதிலை, தேர்வு கமிட்டியின் ஆலோசகர் பேராசிரியர் ஜேக்கப் வார்ம்-மியூலர் காந்தியைப் பற்றி எழுதிய அறிக்கையின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அறிக்கையில்,

``காந்தி அவர்கள் இந்திய மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிற, அவர்களின் அன்பைப் பெற்ற ஒரு நல்ல உன்னதமான துறவி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே சமயம், அவரை ஒரு அரசியல் தலைவராகப் பார்க்கும்போது, அவரது கொள்கை முடிவுகள் நிறைய முரண்களோடு இருக்கின்றன. அவற்றை அவரின் தொண்டர்களால்கூட பல நேரங்களில் நியாயப்படுத்த முடிவதில்லை. காந்தி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். ஆனால், அதே சமயம் அவர் ஒரு சர்வாதிகாரி. அவர் ஒரு கொள்கைவாதி. ஆனால் அதே சமயம் அவர் ஒரு தேசியவாதி. காந்தி பெரும்பான்மை நேரம் ஒரு இரட்சகர். ஆனால், திடீரென அவர் ஒரு சாதாரண அரசியல்வாதி" என்று எழுதியிருக்கிறார் வார்ம்-மியூலர். கூடுதலாகக் காந்தி மீது இருந்த பல்வேறு விமர்சனங்களைக் குறிப்பிட்டிருக்கும் மியூலர், காந்தி 100 சதவிகிதம் சமாதானத்தை விரும்பியவர் அல்லர். அவருடைய சில போராட்டங்கள் வன்முறையாக மாறும் என்று அவருக்குத் தெரிந்தே இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். 1920 -21-ம் ஆண்டுகளில் ஒத்துழையாமை இயக்கத்தின்போது நிகழ்ந்த சௌரி சௌரா சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

இவை மட்டுமல்ல, காந்தி ஒரு அதீதமான இந்தியத் தேசியவாதி என்றும் மியூலரின் அறிக்கை அவரை விமர்சனம் செய்கிறது. அதற்கு உதாரணமாகக் காந்தியின் தென்னாப்பிரிக்கா போராட்டங்கள் இந்தியர்களின் விடுதலைக்காக மட்டுமே இருந்ததே ஒழிய இந்தியர்களைவிட அதிக ஒடுக்குமுறைக்கு உள்ளான கறுப்பின மக்களுக்காக அவர் போராடவில்லை என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

காரணங்கள் எதுவாக இருப்பினும், 1937-ம் ஆண்டு காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து 1938, 1939 என இரு ஆண்டுகளுமே நோபல் பரிசுக்காகக் காந்தியின் பெயரைப் பரிந்துரைத்தார் ஒலை கால்பியன்சென். ஆனால், அவ்விரு வருடங்களும் காந்தியின் பெயர் இறுதிப்பட்டியலில் பரிசீலிக்கப்படவில்லை.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

மீண்டும் 1947-ம் ஆண்டுதான் காந்தியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. `காந்தி இந்தியத் தேசத்தின் சிற்பி, சமூக ஒழுங்கின் வாழும் உருவம், உலக அமைதிக்கான போராட்டத்தில் முதன்மையானவர்' என்ற புகழுரைகளோடு பி.ஜி.கெர், கோவிந்த பல்லப பந்த், மவ்லங்கர் ஆகியோர் இவரது பெயரை நோபல் குழுவுக்குப் பரிந்துரை செய்தனர். இம்முறை தேர்வுக்குழுவின் இறுதிப்பட்டியலில் ஆறு பெயரில் ஒருவராகக் காந்தியின் பெயர் இடம்பெற்றது.

இம்முறையும் காந்திக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை, அதற்குப் பதிலாக அந்த ஆண்டு தேர்வு கமிட்டியின் ஆலோசகர் ஜென்ஸ் அரூப் செய்ப் எழுதிய மற்றுமொரு அறிக்கை மட்டுமே கிடைத்தது. இந்த அறிக்கையில் மியூலர் அறிக்கையைவிடவும் விமர்சனங்கள் குறைவே. ஆனால், 1937-ம் ஆண்டு முதல் 1947 வரையான காந்தியின் பயணத்தைப் பதிவு செய்திருந்தது. இந்தியச் சுதந்திரம் எனும் மிகப்பெரிய வெற்றியையும் பாகிஸ்தான் பிரிவினை எனும் மிகப் பெரிய தோல்வியையும் அவரது சுதந்திரப் போராட்ட இயக்கம் சந்தித்தது என்பதையும் அந்த அறிக்கை பதிவு செய்திருந்தது. பல்லாயிரக்கணக்கோர் ரத்தம் சிந்திய பாகிஸ்தான் பிரிவினை நிகழாமல் இருந்திருந்தால் காந்தியின் அஹிம்சாவாதம் வெற்றி பெற்றிருக்கும் என்பதையும் செய்ப்பின் அறிக்கை சுட்டிக் காட்டியது.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

அதுமட்டுமன்றி நோபல் கமிட்டியின் தலைவர் குன்னர் ஜஹ்ன் அவர்களின் டைரிக் குறிப்பு, மேலும் சில தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. காந்தியின் மனித நேயத்தைவிடவும் இந்திய நேயம் கூடுதலாக இருந்ததாக நோபல் கமிட்டியின் உறுப்பினர்கள் நினைத்தது அந்த டைரிக் குறிப்புகளின் வழி தெரிகிறது. கமிட்டியின் விவாதங்களில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது காந்தி எடுத்த நிலைப்பாடும் கேள்விக்குள்ளானதாகத் தெரிகிறது.

வெளிமாநிலத்தவர்களுக்கு எதிரான போராட்டம்... பெ.மணியரசனுக்கு சில கேள்விகள்!

1947-ம் ஆண்டு செப்டம்பர் 27 -ம் தேதி, `பாகிஸ்தானுடன் போரில் காந்தி' ( Gandhi on war with Pakistan) என்ற தலைப்பில், காந்தி நிகழ்த்திய ஒரு சொற்பொழிவைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியில், ``நான் எப்போதும் போருக்கு எதிரானவனே. ஆனால், பாகிஸ்தான் தன் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து நீதிக்குப் புறம்பாக நடந்தால், இந்திய அரசு பாகிஸ்தானுடன் போர் தொடுத்தே ஆக வேண்டும்" என்று சொன்னதாகக் குறிப்பிட்டு, நியாயத்தை நிலைநாட்டுவதற்காக எல்லா இந்துக்களும் இறந்தாலும் அவர் கவலை கொள்ளமாட்டார் எனச் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி வெளியானதும், அதற்குப் பதிலளித்த காந்தி, ``இவர்கள் குறிப்பிட்டது உண்மையே. ஆனால், அவர்கள் என் பேச்சின் ஒரு பகுதியைப் பிரசுரிக்கவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தார். `தான் கொள்கை ரீதியாக எப்போதும் போர் நெறிக்கு எதிரானவன்தான், பெரும் ராணுவத்தைப் பலப்படுத்தும் புதிய இந்தியாவில் தனக்கு எவ்வித பங்கும் இல்லை' எனத் தன்னுடைய பேச்சின் முழு பகுதியையும் வெளியிட்டார். இருப்பினும் நோபல் கமிட்டி அதைக் கணக்கில் கொள்ளவில்லை, பாகிஸ்தான் பிரிவினையின் ரத்தக்கறை படிந்திருந்த இந்தியாவின் சுதந்திர வருடத்திலும் காந்திக்கு நோபல் பரிசு தரப்படவில்லை.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி
`நான் ராகுல், சாவர்க்கர் இல்லை…’
ராகுல் காந்தி சொன்னது ஏன்?

அடுத்த வருடம், காந்தி இறந்ததற்கு இரு தினங்களுக்கு முன்பு ஐந்தாவது முறையாக நோபல் பரிசிசுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், நோபல் பரிசு கமிட்டியின் இறுதி பட்டியலிலிருந்த காந்தி அந்தப் பரிசினை வென்றால் வாங்குவதற்கு அவர் உயிரோடு இல்லை. இறந்தவர்களுக்கு நோபல் பரிசு கொடுப்பதில்லை என்பது நோபல் பரிசு கமிட்டியின் விதி. அதுமட்டுமன்றி, அப்படியே காந்திக்கு நோபல் பரிசு கொடுத்தாலும், அவர் சார்பாக அப்பரிசை பெற்றுக்கொள்ள அவர் எந்த அமைப்பையோ, உயிலையோ விட்டுச்செல்லவில்லை என்ற பிரச்னையும் இருந்தது. இறுதியாக அந்த ஆண்டும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ஆனால், அந்த ஆண்டின் நோபல் கமிட்டியின் அறிக்கை இவ்வாறு இருந்தது, ``இந்த ஆண்டு இந்த விருதுக்குத் தகுதியான யாரும் உயிருடன் இல்லை என்பதால், யாருக்கும் 1948-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை" என்பதே அது.

அதன் பிறகு 1989-ம் ஆண்டு, தலாய் லாமா பெற்ற நோபல் பரிசு காந்தியின் நினைவாக அவருக்கான அஞ்சலியாக அர்ப்பணிக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து காந்திக்கு நோபல் வழங்காததற்கு வருத்தம் தெரிவித்தது நோபல் கமிட்டி. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதன் என எவரும் இல்லை. அப்படி காந்தியின் மீதான விமர்சனங்களும் அவருக்கான அங்கீகாரமும் ஒருசேர உலக அரங்கில் பதிவு செய்யப்பட்டதன் வெளிப்பாடே இந்த விருது பரிந்துரைகளும் நிராகரிப்பும்.

அடுத்த கட்டுரைக்கு