Published:Updated:

ஷா கமிஷன் அறிக்கையில், மிசா கைதிகள் பட்டியலில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? காரணம்!

மு.க.ஸ்டாலின் ( Vikatan )

ஷா கமிஷன் அறிக்கையில், தி.மு.க-வின் மற்ற தலைவர்களின் பெயர்களெல்லாம் இருக்கும்போது, ஸ்டாலினின் பெயர் மட்டும் விடுபட்டுப் போயிருப்பது ஏன்?

ஷா கமிஷன் அறிக்கையில், மிசா கைதிகள் பட்டியலில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? காரணம்!

ஷா கமிஷன் அறிக்கையில், தி.மு.க-வின் மற்ற தலைவர்களின் பெயர்களெல்லாம் இருக்கும்போது, ஸ்டாலினின் பெயர் மட்டும் விடுபட்டுப் போயிருப்பது ஏன்?

Published:Updated:
மு.க.ஸ்டாலின் ( Vikatan )

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்வு குறித்துப்பேச ஆரம்பித்தால், 'மிசா'வில் இருந்துதான் நிச்சயம் துவங்கவேண்டும். தி.மு.க-வினர் மட்டுமல்லாத நடுநிலையாளர்களும்கூட மிசாவில் அவர் அடைந்த இன்னல்களை மறுத்துப் பேசுவதில்லை. பத்திரிகை, தொலைக்காட்சிகளில் 'மிசா' என்னும் முன்னுரையோடுதான் ஸ்டாலினின் அரசியல் வரலாற்றைத் தொடங்கும் நிலை இருக்கிறது. அந்தளவுக்கு ஸ்டாலினின் அரசியல் பயணத்தில், `மிசா'வுக்கு முக்கிய இடமுண்டு. தி.மு.க-வினர் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்ததும் மிசா கைதுதான்.

Stalin
Stalin

இந்தநிலையில், ``ஸ்டாலின் `மிசா' காலத்தில் கைது செய்யப்பட்டாரே தவிர, மிசா கைதியாக, சிறையில் அடைக்கப்படவில்லை'' என்று தற்போது வெளியாகியிருக்கும் தகவல் மிகப்பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

தி.மு.க முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான பொன்முடி கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியின் நெறியாளர், ``ஸ்டாலின் மிசா காலத்தில் மட்டும்தான் கைதுசெய்யப்பட்டார். மிசா சட்டத்தின்கீழ் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறதே, ஷா கமிஷன் அறிக்கையிலும் மற்ற தி.மு.க தலைவர்களின் பெயர்களெல்லாம் இருக்கிறது, ஸ்டாலினின் பெயர் இல்லையே?'' என்று கேள்வி எழுப்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சென்னை சிறைச்சாலையில் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம். சிறையில் இருக்கக்கூடிய ஆயுள் கைதிகளை வைத்து எங்கள் மீது தடியடி நடத்தினார்கள். தி.மு.க-விலிருந்து விலகிவிட்டோம், எங்களுக்கும் தி.மு.க-விற்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதிக் கொடுக்க வேண்டும், கையொப்பம் போட வேண்டும் என மிரட்டினார்கள். ஆனால், அந்த மிரட்டல், அச்சுறுத்தலுக்கெல்லாம் நாங்கள் அஞ்சவில்லை.''
ஸ்டாலின், (மிசா சட்டத்தால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன், 40-ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசியது).

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதற்குப் பதிலளித்த பொன்முடி, ``இந்தக் கேள்வியே தவறு. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார் என்பது நாடறிந்த உண்மை. புத்தகத்தில் எழுதியிருப்பதால் அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.

``இது, புத்தகம் இல்லை. கமிஷன் ரிப்போர்ட். மேலும் இதைத் தமிழில் தொகுத்தது தி.மு.க எம்.பி இரா.செழியன். அவர் எப்படி ஸ்டாலினின் பெயர் விடுபட்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார். அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி போன்ற எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மைதானா?'' என்று பதில் கேள்வியெழுப்ப, ``எனக்குத் தெரியாது. நான் அதைப் படித்ததில்லை. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்'' எனப் பதிலளித்திருந்தார் பொன்முடி. 

பொன்முடியின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

Ponmudi
Ponmudi

``கருணாநிதியின் மகன் என்பதால்தான் பதவிக்கு வந்தார்'' என ஸ்டாலினின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எல்லாம் `மிசா' என்னும் கேடயம்தான் இவ்வளவு காலம் காத்து வந்தது. அதற்கெதிராகத் தொடுக்கப்பட்ட இந்த அம்புக்கு தி.மு.க-வினர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

மிசா (MISA) என்று பரவலாக அறியப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (Maintainence of Internal Security Act) 1971-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

`` `ஷா கமிஷன் அறிக்கையில் பெயர் விடுபட்டிருப்பதைப் பற்றித் தெரியாது' என்றுதான் பொன்முடி கருத்து தெரிவித்திருந்தார். `ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டது குறித்து தெரியாது' என்று சொல்லவில்லை. தலைவர் கலைஞர், `நெஞ்சுக்கு நீதி’யிலேயே, தளபதி ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டது குறித்து எழுதியிருக்கிறார். திண்டிவனத்துக்குள் நாடகம் போடுவதற்காகச் சென்றிருந்த தளபதி வந்ததும், தலைவர் கலைஞரே காவல்துறைக்கு அழைத்து தன் மகன் வந்துவிட்ட செய்தியைச் சொன்னார். அதன் பிறகுதான் காவல்துறை தளபதியைக் கைதுசெய்தது.

Stalin
Stalin

வேறு வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்தால், அவர் ஜாமீனில் வெளிவந்திருக்கலாம். ஜாமீனில் வெளிவராமல் ஓராண்டுக் காலம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. மிசா கைதிகள் விடுதலையானபோதுதான் தளபதியும் விடுதலை செய்யப்பட்டார். மிசா வழக்கில் கைது செய்யப்படாதவர் மிசா கைதிகளுடன் விடுதலையானது ஏன்?

அந்த நேரத்தில், தளபதியின்மீது வேறு எந்த வழக்கும் கிடையாது. தளபதி மிசாவில்தான் கைதானார், வேண்டுமென்றே சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள்'' என்றார், அவர்.

எனில், ஷா கமிஷன் அறிக்கையில், தி.மு.க-வின் மற்ற தலைவர்களின் பெயர்கள் எல்லாம் இருக்கும்போது ஸ்டாலினின் பெயர் மட்டும் விடுபட்டுப் போயிருப்பது ஏன்?

``ஸ்டாலின் மிசா கைதியாகத்தான் சிறைக்குள் இருந்தார். அடிபட்ட பிறகு தனியாகக் கொண்டுபோய் வைத்திருந்தனர். இஸ்மாயிலின் அறிக்கையில், அதுபற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அந்த அறிக்கையை முழுமையாகப் படித்திருக்கிறேன். இஸ்மாயிலிடமும் பேசியிருக்கிறேன். ஸ்டாலினிடம், கலைஞரிடம், முரசொலி மாறனிடம் 'மிசா' பற்றி பேட்டி எடுத்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

Thiyagu
Thiyagu

`ஷா' கமிஷன் அறிக்கையில் தி.மு.க தலைவர்களோடு அவர் பெயர் இல்லாமல் போனதற்கு, அவர் அப்போது தி.மு.க-வின் உறுப்பினராக இல்லை. கோபாலபுரம் பகுதியில் ஏதோ ஓர் இளைஞர் நற்பணி மன்றத்தைத்தான் நடத்திக்கொண்டிருந்தார். தி.மு.க-வில் அப்போது அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லை. இந்தத் தகவலை கலைஞர்தான் என்னிடம் தெரிவித்தார். `மிசாதான் ஸ்டாலினை அரசியலுக்குள் இழுத்து வந்துவிட்டது' என்றும் சொன்னார். அதனால் கண்டிப்பாக ஸ்டாலின் மிசா கைதியாகத்தான் இருந்தார். அதுதான் உண்மை'' என்கிறார், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு.

`மிசா' சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுதல், `மிசா' காலத்தில் கைது செய்யப்படுதல், இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

``மிசா என்பது தடுப்புக் காவல் சட்டம்தான். தடா, பொடா போன்ற மிகக் கடுமையான சட்டமல்ல. எமர்ஜென்சி நேரத்தில், ஒருவரைக் கைது செய்து தொடர்ச்சியாகச் சிறையில் வைத்திருப்பது என்பதே மிசாவின் கீழ்தான் வரும்.

Pugalenthi
Pugalenthi

`மிசா' சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யாமலும் சிறையில் அடைக்கலாம். ஸ்டாலின் மிசாவில்தான் சிறையில் இருந்தார். அதனால்தான் அவருக்கு பெயில் வழங்கப்படவில்லை. 1982-க்குப் பிறகு, `மிசா'தான் குண்டாஸாக மாற்றம் பெற்றது'' என்கிறார், வழக்கறிஞர் புகழேந்தி.

ஏற்கெனவே பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க எனப் பலமுனைத் தாக்குதலில் தவிக்கும் ஸ்டாலினுக்கு இந்த விவாதம் இன்னும் ஒரு சவால்தான். எப்படிச் சமாளிக்கிறாரென்று காத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism