Published:Updated:

மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்: தற்போதைய சூழலுக்குக் காரணம் என்ன? ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை ( மாதிரி படம் )

மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். மூத்த நிர்வாகிகளை வெளியேற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய தேவை என்ன... அதன் ப்ளஸ், மைனஸ் என்ன?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூத்த அமைச்சர்கள் 12 பேர் ராஜினாமா செய்ததோடு, புதிதாக 43 பேர் அமைச்சர்களாகவும் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர். இதில் 11 பெண்கள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முனைவர்கள் என முழுவதும் படித்தவர்களால் நிரம்பியிருக்கிறது மத்திய அமைச்சரவை. மொத்தம் 81 அமைச்சர்கள் இடம்பெற வாய்ப்புள்ள பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 9 தனி அதிகாரம் கொண்ட இணை அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் உட்பட 53 அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். 2018-ம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இரண்டாவது முறையாகப் பதவியேற்ற மோடி தலைமையிலான அமைச்சரவை மீது பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி சார்ந்து மிகப்பெரிய சுமை இருந்தாலும், அவற்றையெல்லாம் விஞ்சும் அளவுக்கு அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது கொரோனா பெருந்தொற்றுதான். முதல் அலையை ஓரளவுக்குச் சமாளித்தாலும், இரண்டாவது அலையிலிருந்து மீண்டு வர இந்தியா திணறிவிட்டது. தடுப்பூசி, ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை என மாநிலங்களும் குற்றச்சாட்டுகளைவைத்தன. தற்போது ஓரளவு இரண்டாம் அலை என்ற மிகப்பெரிய சிக்கலிலிருந்து மீண்டு வந்தாலும் அது தற்காலிகமானதுதான். மூன்றாவது அலைக்கு வாய்ப்பிருக்கிறது. அதற்குத் தயாராக வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துவருகிறார்கள்.

மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை

சுகாதாரம் இப்படியென்றால் உணவுப்பொருள்கள் தொடங்கி, காஸ் சிலிண்டர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனப் பொருளாதார அளவிலும் இந்தியா மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இவையெல்லாம் மோடியின் பிம்பத்தை வெகுவாக பாதித்துவிட்டன. அடுத்து உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்தும் 2024-ல் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்தும் தற்போது அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

உ.பி -7, குஜராத் - 3, 11 பெண்கள், 8 பழங்குடியினர் - மோடி அமைச்சரவை 2.0 -வில் மொத்தம் எத்தனை பேர்?!

புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் ப்ளஸ் என்ன?

புதிதாக பதிவேற்றுள்ள அமைச்சரவையில் இளம் வயதினர் முதல் மூத்த உறுப்பினர்கள் வரை இருக்கிறார்கள். இந்த அமைச்சரவையின் சராசரி வயது 58. `இதுதான் இந்திய வரலாற்றிலேயே மிகவும் இளமையான அமைச்சரவை’ எனக் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதுவரை இல்லாத வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டிருப்பதோடு 12 பட்டியலினத்தவர்கள், 8 பழங்குடிகள், 27 பிற்படுத்தப்பட்டோர், 11 பெண்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தைச் சேர்ந்தவர் எனக் கலவையாக அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்களான ரவி ஷங்கர் பிரசாத் , ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், டாக்டர் ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேகர் போன்றவர்களை நீக்கியிருக்கிறார்கள். மூத்த அமைச்சர்கள், நிர்வாகத்தில் அனுபவம் மிக்கவர் என்ற எந்த யோசனையும் இன்றி, அதன் பின்விளைவுகள் குறித்தும் யோசிக்காமல் அவர்களை நீக்கியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை
அமைச்சரவை

புதியவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பதன் மூலம் சீனியர் தலைவர்களுடன் இணைந்து உற்சாகமாக இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பாடுபடுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செயல்படாமல் இருந்தால் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்தியிருப்பது அமைச்சரவை மாற்றத்தின் ப்ளஸ் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

தமிழக பா.ஜ.க தலைவர் ரேஸ்: அண்ணாமலையா... நயினாரா? யாருக்கு வாய்ப்பு?!

மைனஸ்

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் டாக்டர் ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேகர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் மீடியாவை திறம்பட எதிர்கொள்பவர்கள். இவர்களில் இருவரை அமைச்சரவையிலிருந்து நீக்கியது மோடி அரசின் மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மத்திய அரசு சார்பில் இனி மீடியாக்களை யார் கையாளுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. படித்தவர்கள், திறனுடையவர்கள்தான் என்றாலும் மாநிலத்துக்கு ஒருவர், சமூகத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில்தான் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர அரசியலில், நிர்வாகத்தில் பெரிய அளவில் அவர்களுக்கு அனுபவம் இல்லாததால் தற்போது இந்தியா சந்தித்துவரும் சுகாதார, பொருளாதாரப் பிரச்னைகளை எப்படிக் கையாளப்போகிறார்கள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். மேலும், பீகார் தவிர பிற மாநிலங்களிலுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு குறிப்பாக, தமிழ்நாட்டிலுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் கொடுக்கப்படவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். மேலும், கட்சியின் பல்வேறு மூத்த உறுப்பினர்கள் இருக்கும்போது பிற கட்சியிலிருந்து பா.ஜ.க-வில் இணைந்த புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது அந்தக் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி அமைச்சரவை  2.0
மோடி அமைச்சரவை 2.0

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில்தான் மூத்த அமைச்சர்கள் உட்பட பலரை நீக்கி அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றத்தைப் பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார் என்றும், மக்கள்நலனுக்காகவோ, நிர்வாகத்தைச் சரி செய்யவோ இல்லை எனவும் கூறப்படுகிறது. ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழாதவரை இந்த மாற்றம் மீது எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் வைக்கும் விமர்சனங்கள் உண்மை என்றாகிடும். விமர்சனங்களை மீறி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வார்களா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!

மத்திய அமைச்சரவை: தந்தை கவனித்த துறைக்கு மகன்; `புதிய துறைக்கு' அமித் ஷா! - யாருக்கு என்ன இலாகா?
அடுத்த கட்டுரைக்கு