Published:Updated:

டெல்லி வன்முறை கோபம்... அமித் ஷாவைத் தாண்டி அஜித் தோவலிடம் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்?

மோடி, அஜித் தோவல்
மோடி, அஜித் தோவல்

டெல்லியில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள நிலையில், கலவரத்தின் எதிரொலியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கடுமையாக விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

டெல்லியில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வன்முறை வெடித்துள்ளது. 17 வயது இளைஞர் முதல் 84 வயது மூதாட்டி அக்பரி வரை கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை, மருத்துவமைனையில் அடையாளம் காணப்பட்டுள்ள சடலங்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். டெல்லி போலீஸாரின் அஜாக்கிரதை காரணமாக இத்தனை உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன. டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, கலவரத்தைக் கட்டுப்படுத்தும்படி தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலிடத்தில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அஜித் தோவல், கலவரம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்
AP

தேசிய பாதுகாப்பு முகமை, கலவரம் போன்ற உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை. இந்த நிலையில், டெல்லி கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு, அஜித் தோவலிடம் ஒப்படைக்கப்பட்டது சற்று ஆச்சர்யத்தையே ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டெல்லியில் இருந்த சமயத்தில் நடந்த இந்தக் கலவரம், பிரதமர் மோடியை மிகுந்த கவலைக்குள்ளாக்கியதாம். டெல்லி போலீஸ்மீது பிரதமருக்கு நம்பிக்கை குறைந்ததையடுத்து, தேசிய பாதுகாப்பு முகமையிடம் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பைக் கொடுக்க பிரதமர் முடிவுசெய்ததாகத் தெரிகிறது. அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம்தான், டெல்லி நகரின் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பு. டெல்லி போலீஸ், அமித் ஷாவிடம்தான் ரிப்போர்ட் செய்ய வேண்டும். பிரதமர், டெல்லி போலீஸ்மீது நம்பிக்கை இழந்தார் என்றால், அமித் ஷா மீதும் நம்பிக்கையை இழந்துள்ளார் என்றே அர்த்தம். அமித் ஷாவை தாண்டித்தான் அஜித் தோவலிடம் பிரதமர் இத்தகைய பெரும் பொறுப்பைக் கொடுத்துள்ளார். எனினும், அஜித் தோவல் உள்துறை அமைச்சரிடத்தில்தான் ரிப்போர்ட் செய்வர் என்று சொல்லப்படுகிறது.

இந்த அஜித் தோவால் யார் தெரியுமா?

1968-ம் ஆண்டின் கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி. ஐபிஎஸ் பயிற்சிக்குப் பின்னர் இன்டலிஜென்ஸ் பீரோ ( ஐபி) எனப்படும் இந்திய உளவுத்துறையிலும், வெளிநாட்டு உளவுப் பிரிவான `ரா'-விலும் (Research and Analysis Wing- RAW) பணியாற்றியவர். பாகிஸ்தானில் இஸ்லாமியர் போலவே மாறி 7 ஆண்டுகள் `ரா' உளவாளியாகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. `இந்திய ஜேம்ஸ்பாண்ட்’ என்று சொல்லும் அளவுக்கு ஒற்று அறிவதில் தேர்ந்தவர். தோவலுக்கு உருதுமொழியில் பேசவும் எழுதவும் நல்ல தேர்ச்சி உண்டு. கடந்த 2014-ம் ஆண்டு, ஐபி இயக்குநராக இருந்து அஜித் தோவல் ஓய்வுபெற்றவுடன், அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மோடி அறிவித்தார். காஷ்மீரில் 370-வது அரசியலமைப்புச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, அங்கு சென்று சில நாள்கள் தங்கியிருந்து, அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் அஜித் தோவல் ஈடுபட்டதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இவர் எடுத்த நடவடிக்கை காரணமாகவே, காஷ்மீரில் அப்போது பெரிய அளவில் வன்முறை ஏற்படவில்லை. இவரின் திறமையின்மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில், தற்போது டெல்லி அசைன்மென்ட்டை அவரிடத்தில் பிரதமர் வழங்கியுள்ளார்.

மோடி மற்றும் ட்ரம்ப்
மோடி மற்றும் ட்ரம்ப்
`தொடக்கம் தந்த சென்னை ; குரலற்றவர்களின் குரல்!’ - நீதியரசர் முரளிதரின் பின்னணி

அதோடு, டெல்லி வன்முறை விஷயத்தில் மீடியாக்கள் செயல்பட்ட விதமும் பிரதமருக்கு கடும் கோபத்தை அளித்துள்ளது. அமெரிக்க அதிபர் டெல்லியில் இருக்கும் சமயத்தில், 'டெல்லியில் கலவரம்' என்று தொடர்ந்து தொலைக்காட்சிகளில் வன்முறைக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. குறிப்பாக, வெளிநாட்டு மீடியாக்கள் வன்முறைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பின. இதனால், மீடியாக்களின்மீது பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

டெல்லியில், ஜஃபார்பாத் முதல் சாந்த்பாக் வரை 5 கிலோமீட்டர் சுற்றளவுப் பகுதி கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சாந்த்பாக்கில் ஐபி உளவுத்துறையில் பணியாற்றிய அங்கித் சர்மா என்பவரின் சடலம் சாக்கடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இவர், கல்வீச்சில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கடுமையாக விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

டெல்லியில் அஜித் தோவல்
டெல்லியில் அஜித் தோவல்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலேனியா மகள் இவாங்கா மற்றும் அதிகாரிகளுடன் 24, 25-ம் தேதிகளில் இரண்டு நாள்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லியில் ட்ரம்ப் இருந்த 25-ம் தேதிதான் அங்கே கலவரம் வெடித்தது. இதே நாள் மதியம், இந்தியப் பிரதமர் மோடியுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், "தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து நானும் கேள்விப்பட்டேன். ஆனால், அது குறித்து மோடியிடம் விவாதிக்கவில்லை. இந்தியா அந்தப் பிரச்னைகளைப் பார்த்துக்கொள்ளும். அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்" என்று தெரிவித்தார்.

ட்ரம்ப்போ இந்தியா பார்த்துக்கொள்ளும் என்கிறார். இது, மனித உரிமை விவகாரத்தில் தலைமைப் பண்பு இல்லாததைக் காட்டுகிறது!
ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ்

டெல்லியில் இன்னும் கலவரம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் பெர்னி சாண்டர்ஸ், தன் ட்விட்டரில் பதிவில் ட்ரம்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ''இருபது கோடி முஸ்லிம்கள் இந்தியாவைத் தங்கள் தாயகம் என்கின்றனர். இந்தியாவில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 27 பேர் வரை இறந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ஆனால், ட்ரம்ப்போ இந்தியா பார்த்துக்கொள்ளும் என்கிறார். இது, மனித உரிமை விவகாரத்தில் தலைமைப் பண்பு இல்லாததைக் காட்டுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

`மனித உரிமை மீதான தலைமையின் தோல்வி!’- ட்ரம்பின் பதிலும் பெர்னி சாண்டர்ஸின் விமர்சனமும்

குடியுரிமைச் சட்டம் காரணமாக இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களும் வன்முறைகளும் பல அமெரிக்க செனட்டர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஜனநாயகக் கட்சியின் மற்றோரு அதிபர் வேட்பாளரான எலிசபெத் வார்ரனும் டெல்லி வன்முறைச் சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு