Published:Updated:

எடப்பாடியைத் தனியாகச் சந்தித்த மோடி, பன்னீரை ஏன் சந்திக்கவில்லை?

மோடியுடன் எடப்பாடி, பன்னீர்
மோடியுடன் எடப்பாடி, பன்னீர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தனியாகச் சந்தித்த பிரதமர் மோடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்காததன் பின்னணியில் பல அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தமிழகத்தில் ரூ.8,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காகவும், அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுகிழமை (பிப். 14) தமிழகம் வந்தார். சென்னையில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அது ஓர் அரசு நிகழ்ச்சி என்றபோதிலும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்றிருக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி (பா.ம.க), ஜி.கே.வாசன் (த.மா.கா), பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன் (தே.மு.தி.க), இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா (பா.ஜ.க) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மோடி, எடப்பாடி
மோடி, எடப்பாடி

அந்த நிகழ்ச்சியின்போது, சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் உட்பட தமிழகத்துக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பிரதமரின் இந்தப் பயணம் குறித்து அரசியல்ரீதியாக பல ஆரூடங்கள் கடந்த சில நாள்களாகக் கூறப்பட்டுவந்தன. ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து சசிகலா விடுதலையாகிவந்திருக்கும் நிலையில், அதன் காரணமாக தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் சூழலில், பிரதமரின் தமிழகப் பயணத் திட்டத்தில் மறைமுகமாக சில அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அந்த வகையில், இரண்டு முக்கிய விஷயங்கள் தற்போது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் கைகளையும் பிடித்து பிரதமர் மோடி உயர்த்திக் காண்பித்ததற்கு அரசியல் விமர்சகர்களும் எதிர்க் கட்சியினரும் பல்வேறு அர்த்தங்களைக் கற்பிக்கிறார்கள். ``தன்னுடைய பிடியில் அ.தி.மு.க இருக்கிறது என்பதை இதன் மூலம் மோடி உறுதிசெய்திருக்கிறார்'' என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

அதேபோல, முதல்வர் எடப்பாடியை பிரதமர் மோடி தனியாகச் சந்தித்ததும் பல விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. ஒரு முதல்வரை பிரதமர் சந்திப்பது அரசியல் நிமித்தமானது என்றபோதிலும், பிரதமரின் இந்தப் பயணம் அரசியல்ரீதியானது என்று பார்க்கப்பட்டதால்,`ஒருங்கிணைப்பாளரை விட்டுவிட்டு இணை ஒருங்கிணைப்பாளரை பிரதமர் சந்தித்ததன் பின்னால் இருக்கும் அரசியல் கணக்கு என்ன?’ என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

பன்னீர், எடப்பாடி
பன்னீர், எடப்பாடி

இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். ``வழக்கமாக பன்னீருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மோடி கொடுக்கவில்லை என்றுதான் இந்தச் சந்திப்பைப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க-வில் தனக்கு மிகவும் முக்கியமான நபர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும், தன் எண்ணங்களை வெளிப்படுத்துபவராக எடப்பாடி இருக்கிறார் என்றும் மோடி கருதுகிறார். அதன் வெளிப்பாடுதான் அந்தச் சந்திப்பு. ஏற்கெனவே, டெல்லியில் பிரதமர் மோடியைப் பார்த்துவிட்டுத்தான், `அ.தி.மு.க-வில் சசிகலாவுக்கு இடமில்லை' என்று எடப்பாடி பழனிசாமி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, சசிகலாவை எதிர் சக்தியாகத்தான் மோடி நினைக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா முக்கிய சக்தியாக உருவெடுத்தார். அத்தகைய சூழலில், சசிகலாவை ஆதரிக்கும் நிலையில் பா.ஜ.க மேலிடம் விரும்பவில்லை. சசிகலாவை ஆதரித்தால் ஓ.பி.சி சமூகத்தினர் ஆதரிக்கக்கூடிய மிகப்பெரிய தலைவராக வளர்ந்துவிடுவார் என்றும், அவரின் வளர்ச்சி எந்த வகையிலும் தங்களுக்கு பலன் தராது என்றும் மத்திய அரசின் உளவு அமைப்புகள் டெல்லி தலைமைக்குத் தெரிவித்தன.

அதைத் தொடர்ந்துதான், 37 எம்.பி-களின் ஆதரவு மற்றும் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தும்கூட, மத்தியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் சசிகலாவை முதல்வர் ஆவதற்கு விடவில்லை. இரட்டை இலைச் சின்னம் தினகரன் தரப்புக்குக் கிடைக்கவில்லை. சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடைபெற்றது.

சசிகலா
சசிகலா

சசிகலா தரப்பினர் என்றைக்கு வேண்டுமானாலும் காங்கிரஸுடன் நெருக்கம் காட்டுவார்கள். அரசியல்ரீதியாக அவர்களால் தங்களுக்கு லாபம் இருக்காது. எனவே, முடிந்தவரை அவர்களை மட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பா.ஜ.க தலைமை, எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு ஆதரவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி இன்று போய்விடும், நாளை போய்விடும் என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், முழு ஆட்சியையும் அவர் நிறைவுசெய்கிறார். ஒரு தலைவராகவும் அவர் வளர்ந்துவிட்டார். எனவே, பா.ஜ.க மேலிடத்தின் ஆலோசனைப்படிதான், சசிகலா எதிர்ப்பு நிலையில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய பன்னீர்செல்வம் தற்போது சசிகலா தரப்புடன் நெருக்கமாக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அது பன்னீர்செல்வம் மீது பிரதமர் மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்” என்றார் ரவீந்திரன் துரைசாமி.

``ஆர்.எஸ்.எஸ்-போல காங்கிரஸ் கட்டமைப்பை உருமாற்ற நினைக்கிறார் ராகுல்!'' - பீட்டர் அல்போன்ஸ் தடாலடி

டெல்லிக்குச் சென்று பா.ஜ.க மேலிடத்தை டி.டி.வி.தினகரன் சந்தித்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், சசிகலாவை எப்படி பா.ஜ.க மேலிடமோ, பிரதமர் மோடியோ தங்களுக்கு எதிரானவராகக் கருதுவார்கள் என்ற கேள்விக்கு, ``டி.டி.வி.தினகரன் பா.ஜ.க தலைவர்களைப் பார்த்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், சென்னையில் மோடியும் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்தது உண்மை என்பதைப் பார்க்கிறோம். சசிகலாவை மட்டுப்படுத்த வேண்டும் என்கிற தங்களின் எதிர்பார்ப்பை எடப்பாடி பழனிசாமிதான் நிறைவேற்றுவார் என்று பா.ஜ.க மேலிடம் கருதுகிறது. அந்த வாய்ப்பு, பன்னீர்செல்வத்துக்குத்தான் முதலில் வழங்கப்பட்டது. அதை அவர் நிறைவேற்றவில்லை. பன்னீர்செல்வத்தின் மீது பா.ஜ.க மேலிடத்துக்கு ஒருவித பரிவு இருந்தாலும், அவருக்கும் சசிகலா தரப்புக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்ற சந்தேகம் பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான், இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டும்” என்றார்.

மோடி
மோடி

இது குறித்து பா.ஜ.க-வின் மாநிலச் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, ``இந்த நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்தின் முதல்வரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவ்வளவுதான். இதற்கு அரசியல் நோக்கம் கற்பிப்பது என்பதெல்லாம் தவறானது. அரசியல்ரீதியான சந்திப்பாக இருந்திருந்தால், அந்தக் கேள்வி நியாயமானது. ஆனால், ஒரு பிரதமரும் ஒரு முதல்வரும் சந்திப்பதை அரசியல் ஆக்குவது ஆரோக்கியமான செயல் இல்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு