Election bannerElection banner
Published:Updated:

``சட்டவிதிகள் தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டன!” - என்.ஐ.ஏ பிடியில் உள்ள கௌதம் நவ்லாகா யார்?

கௌதம் நவ்லாகா
கௌதம் நவ்லாகா

பீமா கோரேகான் வழக்கில் என்.ஐ.ஏ-வால் கைதி செய்யப்பட்டுள்ள கௌதம் நவ்லாகா யார்?

2018-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள பீமா கோரேகானில், பீமா கோரேகான் யுத்தத்தின் இருநூறாவது ஆண்டு நினைவு கடைப்பிடிக்கப்பட்டது. 1818-ம் ஆண்டு நடைபெற்ற பீமா கோரேகான் யுத்தத்தில் பிரிட்டிஷ் படைகள் மராட்டிய பேஷ்வா படைகளை வீழ்த். பிரிட்டிஷ் படையில் தாழ்த்தப்பட்ட மகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பீமா கோரேகான் போரில் ஈடுபட்டனர். ஒடுக்கப்பட்ட மகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க மராத்தா பேஷ்வா படையை வீழ்த்தியதன் அடையாளமாக பீமா கோரேகான் விளங்கி வருகிறது.

பீமா கோரேகான் நினைவிடத்திற்கு, 1927-ம் ஆண்டு அதன் 109-வது நினைவு தினத்தன்று அம்பேத்கர் வருகைபுரிந்தார். அதன்பிறகு தாழ்த்தப்பட்ட சமூகங்களின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாக மாறியது பீமா கோரேகான்.

பீமா கோரேகான்  நினைவுச் சின்னம்
பீமா கோரேகான் நினைவுச் சின்னம்

ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் ஆண்டு மக்கள் அங்கு வெகுவாகக் கூடுவது வழக்கம். அதைப்போலவே 2018-ம் ஆண்டு பீமா கோரேகான் யுத்தத்தின் 200-வது நினைவு தினத்தின்போது அங்கு மிகப்பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது.

அதில் ஒருவர் உயிரிழக்க, முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த புனே போலீஸ் சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லாகா போன்ற சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதென்றும், பிரதமரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகவும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் (உ.பா சட்டம்) குற்றம் சுமத்தியது. இந்த வழக்கை தற்போது தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது.

இதில் சுதா பரத்வாஜ் போன்றோர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச்சிறையில் இருந்துவருகிற நிலையில் ஆனந்த் டெல்டும்டே மற்றும் கௌதம் நவ்லாகா ஆகியோர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு வாரத்திற்குள்ளாக சரணடைய வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் என்.ஐ.ஏ-விடம் சரணடைந்தனர்.

யார் இந்த கௌதம் நவ்லாகா?

கௌதம் நவ்லாகா டெல்லியை மையப்படுத்திய பத்திரிகையாளர், சமூகச் செயற்பாட்டாளர். ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பில் இணைந்து மனித உரிமைகளுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உடன் இணைந்து பணிபுரிந்து வந்தவர் கௌதம் நவ்லாகா. அதோடு பிரபல பத்திரிகையான எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லியின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சர்வதேச அளவில் மதிக்கப்படும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுள் ஒருவர் கௌதம் நவ்லாகா.

ஆனந்த் டெல்டும்டே - கௌதம் நவ்லாகா
ஆனந்த் டெல்டும்டே - கௌதம் நவ்லாகா

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலும், மாவோயிஸ்ட் தாக்கம் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்திலும் பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளார். இவரின் செயல்பாடுகளைக் காரணம் காட்டி 2011-ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைய இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காஷ்மீரில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் குற்றங்களைப் பற்றிய விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிடுவதில் மிக முக்கியப் பங்காற்றியிருந்தார். இதில் பல மூத்த இராணுவ வீரர்கள் மற்றும அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும் காஷ்மீரில் இராணுவத்தின் இருப்பைக் குறைக்க ஜனநாயக வழியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காகவும் குரல் கொடுத்தவர் கௌதம் நவ்லாகா.

சிறைக்குச் செல்வதற்கு முன்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``ஊரடங்கு காலத்தில் நான் சரணடைய ஒரு வார காலம் கிடைத்திருப்பது பெருமதிப்பு வாய்ந்தது. கொரோனா பாதிப்பை தேசிய நெருக்கடி என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். உச்சநீதிமன்றமும் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள கைதிகளை விடுவித்து வருகிறது. இந்த நிலையில் எங்களைய சரணடையச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது. கொரோனா சமயத்தில் என்னுடைய சிறைவாசம் என்னைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய அச்சத்தை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன். உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றபோது கொரோனா நெருக்கடியைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பது எனக்கு ஏமாற்றமே.

கௌதம் நவ்லாகா
கௌதம் நவ்லாகா

இனி நான் உ.பா சட்ட விசாரணை எதிர்கொள்ள வேண்டும். தற்போது சட்ட விதிகள் எல்லாம் தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டன. `ஒருவர் குற்றம் நிரூபிக்கப்படுகின்ற வரை நிரபராதி என்பது, குற்றம் நிரூபிக்கப்படுகிற வரை ஒருவர் குற்றவாளி என்றாகிவிட்டது’ உ.பா சட்டத்தின் கடுமையைப் போல அதன் நடைமுறைகள் தெளிவானது இல்லை. பெயில் என்பது விதியாகவும், ஜெயில் என்பது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும் என்கிற மரபும் தலைகீழாக மாறி ஜெயில் என்பது விதியாகவும், பெயில் என்பது விதிவிலக்காகவும் மாறிவிட்டது. இத்தகைய சூழ்நிலைகளில் வழக்கு விசாரணையை எதிர்கொள்வதே மிகப்பெரிய தண்டனையாக உள்ளது.

என் மீதும், என்னுடன் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மீதும் நடத்தப்படுகிற நியாயமான மற்றும் வேகமான விசாரணையை மட்டுமே நான் நம்பியிருக்கிறேன். அது நாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கும்” என்றுள்ளார்.

ஏற்கெனவே இதே வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவ், தானேவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் ஃபெரெய்ரா, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெர்னன் கோன்சல்வ்ஸ் ஆகியோர் சுமார் ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள செயற்பாட்டாளர்கள்
பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள செயற்பாட்டாளர்கள்

தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட உ.பா சட்டம் மத்திய மாநில அரசுகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு உ.பா சட்டத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் கடும் விமர்சனங்களுக்குள்ளானது. இந்தப் புதிய சட்டத்தின் அஸ்ஸாமைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் அகில் கோகாய் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது பீமா கோரேகான் வழக்கிலும் இந்தச் சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு