காஷ்மீர் பண்டிட்டுகள் அம்மாநிலத்தில் சந்தித்த கொடூரங்களை பற்றிய கதையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படம் `தி காஷ்மீர் ஃபல்ஸ்'. இந்த சம்பவம் 1980-களுக்கு பிறகு நடந்த சம்பவமாகக் கருதப்படுகிறது.
இந்த திரைப்படம் உண்மையை வெளிப்படையாக காண்பிப்பதாக பிரதமர் மோடி பாராட்டியதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படத்திற்குக் கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தைப் பார்க்க, காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் மத்திய பிரதேச பாஜக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன், "உண்மைகளைத் தவறாகச் சித்தரித்து ஒரு தலைபட்சமாக எடுக்கப்பட்டு, இளைஞர்களைத் தவறாக வழி நடத்தும் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்துக்கு நாட்டின் பிரதமரே விளம்பரப்படுத்துகிறார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பா.ஜ.க அரசு ஆக்ரோஷமாக ஊக்குவிப்பதன் வழியாகக் காஷ்மீர் பண்டிட்களின் வலியை ஆயுதமாகப் பயன்படுத்தும் அவர்களின் தவறான உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழைய காயங்களுக்கு மருந்திட்டு, இரு சமூகத்தினரிடையே இணக்கமான சூழலை உருவாக்குவதற்கு மாறாக, இரு சமூகத்தினரையும் பிளவுற செய்கிறது பா.ஜ.க” என்று விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த திரைப்படம் தொடர்பாக, ``காஷ்மீர் சம்பவம் தொடர்பாக “தி காஷ்மீர் ஃபைல்ஸ்" எனும் திரைப்படம் எடுக்க முடியுமென்றால் லக்கிம்பூர் கேரி சம்பவத்தை வைத்து ஏன் "லக்கீம்பூர் ஃபைல்ஸ்" திரைப்படம் எடுக்கக் கூடாது?.

லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் மீது பா.ஜ.க அமைச்சரின் மகன் கார் ஏற்றிக் கொலை செய்ததையும் திரைப்படமாக எடுக்கலாம். இது முடியுமென்றால் அதுவும் முடியும்" என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி விவசாய சட்டத்துக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பா.ஜ.க- வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரி்கையாளர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ரா தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.