Published:Updated:

பஞ்சாப்: கூட்டாக வலியுறுத்திய அரசியல் கட்சிகள் - சட்டமன்றத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணி!

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிவைக்குமாறு ஆளும் காங்கிரஸ் மட்டுமல்லாமல், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியதால், அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்: கூட்டாக வலியுறுத்திய அரசியல் கட்சிகள் - சட்டமன்றத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணி!

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிவைக்குமாறு ஆளும் காங்கிரஸ் மட்டுமல்லாமல், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியதால், அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்

கடந்த பல மாதங்களாக பஞ்சாப் அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. ஓராண்டுக்கு முன்பாக மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள் போராட்டம் தொடங்கி, ஆளும் காங்கிரஸ் அரசில் அதிரடியாக முதல்வர் மாற்றம், சீக்கியர்களின் வழிபாட்டுத்தலங்களை அவமதித்ததாக இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சமீபத்தில் ஏற்பட்ட பதற்றம் என பஞ்சாப் மாநிலம் டென்ஷன் மோடிலேயே இருக்கிறது.

அமரீந்தர் சிங்
அமரீந்தர் சிங்

முன்னதாக, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பரபரப்பாக களமிறங்கின. காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கட்சி, முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சி கூட்டணி என நான்கு முனைப் போட்டியை பஞ்சாப் தேர்தல் களம் இந்த முறை சந்திக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியே மீண்டும் வெற்றிபெற வாய்ப்புகள் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு, தேர்தல் களம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் வேளையில், தேர்தல் தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற குரல் பஞ்சாப்பிலிருந்து எழுந்தது. இந்தக் கோரிக்கையை முதலில் எழுப்பியவர் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிதான்.

முதல்வர் சன்னி
முதல்வர் சன்னி

ஆளும் காங்கிரஸைத் தொடர்ந்து, தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை பா.ஜ.க தரப்பிலிருந்தும் எழுந்தது. குரு ரவிதாஸ் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக பஞ்சாப்பிலிருந்து உ.பி-க்கு லட்சக்கணக்கானோர் செல்வார்கள் என்பதால் தேர்தல் தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையையே இந்தக் கட்சிகள் அனைத்தும் முன்வைத்தன.

பஞ்சாப் தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்று குரு ரவிதாஸ் டைகர் ஃபோர்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன. 17) காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்துத்தான், இந்தப் பிரச்னையை அரசியல் கட்சிகள் சீரியஸாகப் பார்க்கத் தொடங்கின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பக்தி இயக்கத்தின் புனிதரான குரு ரவிதாஸ், பரவலான மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர். சாதிய தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர். அதனால், அவர் மீது இன்றைக்கும் லட்சக்கணக்கான மக்கள் அபிமானம் கொண்டிருக்கிறார்கள். குரு ரவிதாஸ் ஜெயந்தி பிப்ரவரி 16-ம் தேதி வருகிறது. இது, அவரின் 645-வது பிறந்த நாள்.

பா.ஜ.க-வின் கடிதம்
பா.ஜ.க-வின் கடிதம்

அதற்காக, பிப்ரவரி 10-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதிவரை, பஞ்சாப் மாநிலத்திலிருந்து சுமார் 20 லட்சம் பேர் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்வார்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் அரசியல் கட்சிகள் குறிப்பிட்டிருந்தன.

பஞ்சாப் பா.ஜ.க-வின் பொதுச்செயலாளர் சுபாஷ் சர்மா, ``குரு ரவிதாஸுக்கு மரியாதை செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் வாரணாசிக்கு செல்வார்கள். அந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்றால், லட்சக்கணக்கானோர் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும். லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது. ஒவ்வொருவரின் மத உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில், மாநிலத்தின் ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவை இரண்டும் முக்கியம்” என்றுதேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார்.

பா.ஜ.க
பா.ஜ.க

பஞ்சாப் மாநிலத்தில் பட்டியலின மக்களின் வாக்கு வங்கி 32 சதவிகிதமாக இருக்கிறது. இந்த நிலையில், குரு ரவிதாஸ் ஜெயந்தி வரும் நேரத்தில் தேர்தல் நடைபெற்றால், லட்சக்கணக்கான மக்கள் வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்ற விஷயத்தை பட்டியலின சமூகத்தின் பிரநிதிகள் தன் கவனத்துக்கு கொண்டுவந்ததாக தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் சன்னி கூறினார். மேலும், இந்த காரணங்களால் குறைந்தது 6 நாள்களுக்காவது தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை சன்னி கேட்டுக்கொண்டார்.

முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அமரீந்தர் சிங்கும் இதே கோரிக்கையை முன்வைத்து தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார். தேசிய பட்டியலின கூட்டணி என்ற தன்னார்வ அமைப்பும் தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தியது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலை பிப்ரவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism