Published:Updated:

புதுச்சேரி: `ராகுல் காந்தி ஸ்டாலினைச் சந்திக்காதது ஏன்?!’ –கே.எஸ்.அழகிரி சொன்ன விளக்கம்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியில் ஸ்டாலின்தான் முதல்வர் என்று நாங்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறோம்” – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

31 மக்கள் நலத்திட்ட கோரிக்கைகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்க வேண்டுமென்றும், அது தொடர்பாக விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டுமென்றும் என்று கூறி கடந்த எட்டு நாள்களாகச் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்திவருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் கந்தசாமி. நேற்று இரவு சட்டப்பேரவை வளாகத்தில் அவரை நேரில் சந்தித்து ஆதரவளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பிரதமர் மோடி, ஜனநாயகத்துக்கு எதிராக ஆளுநர்களைவைத்து ஆட்டிப்படைக்கும் நிலையில் இருக்கிறார்.

அமைச்சர் கந்தசாமியுடன் கே.எஸ்.அழகிரி
அமைச்சர் கந்தசாமியுடன் கே.எஸ்.அழகிரி

புதுச்சேரிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்து இது. புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க தலைமையிலிருக்கும் இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அது ஒரு பெரிய விஷயமே இல்லை. அதை எளிதில் பேசி தீர்த்துக்கொள்ள முடியும். இருதரப்பினருக்குள் வருத்தமிருந்தால் அதைப் பேசிச் சரிசெய்வதுதான் சிறந்த வழி. முதல்வர் நாராயணசாமி அதை மிகத் திறமையாகக் கையாள்வார். அத்துடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இது குறித்துப் பேசி முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

புதுச்சேரியில் தி.மு.க-வுடனான கூட்டணி தொடரும். இதுவும் ஒரு குடும்பத்தைப் போன்றதுதான். தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் அறிவிப்பு வந்த பிறகுதான் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசுவோம். அதேபோல தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுவது என்பது தற்போது விஷயமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்பது இடங்களைப் பெற்றோம். அவற்றில் எட்டு இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறோம். குறிப்பாக, 90% வெற்றியைப் பெற்றிருக்கிறோம். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி, கொள்கைரீதியில் ஒற்றுமையாக இருக்கிறது. காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியில் ஸ்டாலின்தான் முதல்வர் என்று நாங்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறோம். ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதையே முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. `முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் அறிவிப்போம்’ என்று பா.ஜ.க சொல்கிறது. முதல்வர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவே எடுக்கவில்லை என்று பா.ம.க சொல்கிறது. ஓ.பன்னீர்செல்வம் இன்னும் தெளிவான எந்தவொரு வார்த்தையையும் கூறவில்லை.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்த ராகுல் காந்தி #NowAtVikatan

பெரிய கூட்டணியில் தங்கள் முதல்வர் வேட்பாளரைக்கூடத் தேர்வு செய்ய முடியாமல் திணறுகிறார்கள். இதன் மூலம் இவர்களால் மாநிலப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், முதல் சுற்றிலேயே நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். நடிகர் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். நன்றாகப் பேசுவார். யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். ராகுல் காந்தியின் தற்போதைய தமிழகப் பயணம் அரசியல் பயணமில்லை. தமிழ் கலாசாரத்தை அறிவதற்காகவே வந்தார். இப்போது தேர்தல் களம் அல்ல. அதனால் அவர் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கவில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு