Published:Updated:

2004-ம் ஆண்டு இதே நாளில்தான் ரஜினி, ஜெயலலிதாவை `தைரியலட்சுமி’ என்றார்; அது ஏன் தெரியுமா?

விழாவில் ரஜினியும் ஜெயலலிதாவும்...
விழாவில் ரஜினியும் ஜெயலலிதாவும்... ( விகடன் )

``ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’’ எனச் சொன்ன ரஜினி, பிறகு ஜெயலலிதாவுக்கு `தைரியலட்சுமி’ எனப் பட்டம் கொடுத்த தினம் இன்று.

''ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது.''

- ரஜினிகாந்த் சொன்ன இந்த வார்த்தைகள் 1996 சட்டமன்றத் தேர்தலில் திருப்புமுனையை உண்டாக்கியது. தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகிப்போனது. அப்படிச் சொன்ன ரஜினிதான் எட்டு ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதாவைத் தைரியலட்சுமி எனப் பாராட்டினார். 2004 நவம்பர் 8-ம் தேதிதான், ஜெயலலிதாவுக்கு 'தைரியலட்சுமி' பட்டத்தைக் கொடுத்தார். அன்றைக்கு என்ன நடந்தது?

ரஜினியும் ஜெயலலிதாவும்
ரஜினியும் ஜெயலலிதாவும்

ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக் காலமான 1991 - 1996 காலகட்டத்தில் வளர்ப்பு மகன் திருமணம், வக்கீல்கள் விஜயன், சண்முகசுந்தரம் மீது தாக்குதல், சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கடி, ஊழல்கள், சசிகலா குடும்பத்தினர் சொத்துக்குவிப்பு, நில அபகரிப்புகள், நீதிபதி உறவினர்மீது கஞ்சா வழக்கு, தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் தங்கியிருந்த ஹோட்டல்மீது தாக்குதல் என நிறைய அடாவடிகள் நடந்தன. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் கொதித்துக் கொண்டிருந்தபோது, ரஜினியும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார்.

1991 சட்டசபைத் தேர்தலின்போது, ராஜீவ்காந்தி படுகொலையில் எழுந்த அனுதாப அலையில், எதிர்க்கட்சிகளையெல்லாம் வாரிச் சுருட்டி வீசிவிட்டு ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா. அசுர பலத்தோடு ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா, 'எல்லாமே நான்’ என்கிற அதிகார தோரணையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார். எந்தத் திட்டத்திலும் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக்கொண்டார். ஜெ.ஜெ அரிசி, ஜெ.ஜெ போக்குவரத்துக் கழகம் என எல்லாத் திட்டங்களிலும் ஜெயலலிதாவின் பெயர்தான் சூட்டப்பட்டன. அந்த வரிசையில், திரைப்பட நகருக்கும் தன் பெயரையே ஜெயலலிதா சூட்டிக் கொண்டார்.

செவாலியே விழாவில் ஜெயலலிதா, ரஜினி...
செவாலியே விழாவில் ஜெயலலிதா, ரஜினி...
விகடன்

திரைப்பட நகருக்கு ‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’ எனப் பெயர் சூட்டப்பட்டதுமே `எம்.ஜி.ஆர் பெயரையோ, சிவாஜி பெயரையோ வைக்க வேண்டும்’ எனத் திரையுலகத்தினர் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், அது ஏற்கப்படவில்லை. ரஜினியின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது. தன்னுடைய கோபத்தை வெளிக்காட்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் ரஜினி. சில மாதங்கள் கழித்து சிவாஜிக்கு 'செவாலியே விருது வழங்கும் விழா' நடைபெற்றது. அந்த விழாவை ரஜினி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

ஜெயலலிதா பங்கேற்ற அந்த விழாவில், ''நீங்கள் திறந்து வைத்த ஃபிலிம் சிட்டிக்கு சிவாஜி பெயரை வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்யவில்லை. அவரை மதிக்கவில்லை. அது தவறு. தவறு செய்வது மனித இயல்பு. தவற்றைத் திருத்திக் கொள்வது மனிதத்தனம். அந்தத் தவற்றை இப்போது சரி பண்ணிட்டீங்க'' எனக் கொஞ்சம் காரமாகவே பேசினார் ரஜினி. ரஜினியின் பேச்சுக்குக் கைத்தட்டல்கள் ஒலித்துக்கொண்டிருக்க... மேடையில், நடுநாயகமாக அமர்ந்திருந்த ஜெயலலிதா கூட்டத்தைச் சலனமில்லாமல், உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

செவலியே விழாவில்...
செவலியே விழாவில்...
விகடன்

ஜெயலலிதாவைக் கண்டித்து அறிக்கைவிடக்கூடப் பலரும் அச்சப்பட்ட காலம் அது. அப்படியான சூழலில், ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே, ``யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்’’ எனப் பேசிய ரஜினியின் தைரியத்தைப் பலரும் பாராட்டினார்கள்.

மூன்று மாதங்கள்கூட முடியவில்லை. அதற்குள் இன்னொரு மேடையில், ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தார். அது `பாட்ஷா’ பட வெற்றி விழா. அந்த விழாவில் பேசிய ரஜினி ``தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பரவியுள்ளது’’ என்கிற பரபரப்பைப் பற்றவைத்தார். ''சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு என் மனதை மிகவும் சங்கடப்படுத்திவிட்டது. அதுமட்டுமல்ல, அடுத்தடுத்து பல இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, அப்பாவிப் பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்கள். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்றார்.

பாட்ஷா பட விழாவில் ரஜினியும் ஆர்.எம். வீர்ப்பனும்
பாட்ஷா பட விழாவில் ரஜினியும் ஆர்.எம். வீர்ப்பனும்
விகடன்

1994-ம் ஆண்டிலிருந்து ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்து வந்த ரஜினி, 1996 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க - த.மா.கா கூட்டணிக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தார். டிவி-யிலும் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். அப்போதுதான் ''ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது'' என்றார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா தோற்றுப்போனார்.

பாபா படத்தில்...
பாபா படத்தில்...

அதன் பின் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 2002-ம் ஆண்டு 'பாபா ' படம் ரிலீஸ் ஆனது. அந்த நேரத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி ஜெயலலிதாவைச் சந்தித்தார். திரையரங்க உரிமையாளர்களே கூடுதல் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியது. அதே நேரம் பாபா பட பிரச்னையில் பா.ம.க தலையிட்டது. ரஜினி புகைபிடிக்கும் மது அருந்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாகச் சொல்லி. ''படத்தை யாரும் பார்க்க வேண்டாம்'' எனச் சொன்னார் ராமதாஸ். இதனால் வட மாவட்டங்களில் பாபா படத்தைத் திரையிட முடியவில்லை. அந்த நேரத்தில் அ.தி.மு.க, பா.ம.க மீது நடவடிக்கை எடுத்தது.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட ஆறு தொகுதிகளில், அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி வேட்பாளர்களை ரஜினி ஆதரித்தார். ஆனால், அது பலனிக்கவில்லை. அதன்பின் திரையுலகம் வைத்த கோரிக்கையை ஏற்று, திருட்டு வி.சி.டி-யை ஒழிக்க கடும் நடவடிக்க எடுத்தார் ஜெயலலிதா. அதோடு திரையுலகுக்குச் சலுகைகள் அறிவித்தார். அதற்காகப் பாராட்டு விழாவை 2004 நவம்பர் 8-ம் தேதி எடுத்தது கோலிவுட்.

'கலைத்தாய்க்குக் கலை உலகின் நன்றி விழா'வில்
'கலைத்தாய்க்குக் கலை உலகின் நன்றி விழா'வில்
விகடன்

'கலைத்தாய்க்குக் கலை உலகின் நன்றி விழா' என்ற பெயரில் திரையுலகின் அனைத்துச் சங்கங்களின் சார்பாக நடந்த பிரமாண்ட விழாவில் ரஜினியும் கலந்துகொண்டார். அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன் ஆகியோர் ஜெயலலிதாவை வரவேற்றனர். ரஜினியும் கமலும் சேர்ந்து ஜெயலலிதாவுக்குச் சால்வையை அணிவித்தனர். கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. ஜெயலலிதாவை வாழ்த்தி எழுதப்பட்ட பாடலுக்கு நடிகர்கள் நடனம் ஆடினார்கள்.

இந்த விழா நடைபெற்ற காலத்தில்தான் வீரப்பன் என்கவுன்டர் நடந்திருந்தது. வீராணம் நீரைச் சென்னைக்குக் கொண்டு வந்தார். அதனால், அந்தச் சாதனைகளையும் விழாவில் பறைசாற்றினார்கள் திரையுலகினர். 'வீராணம் வென்றாய்... வீரப்பனைக் கொன்றாய்' எனப் பாடலுக்கு நடனம் ஆடினார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி படங்களின் பாடல்களுக்கு டான்ஸ் அமைத்திருந்தார்கள். நடிகர் விவேக் கவிதை படித்தார்.

'கலைத்தாய்க்குக் கலை உலகின் நன்றி விழா'வில்
'கலைத்தாய்க்குக் கலை உலகின் நன்றி விழா'வில்
விகடன்

கலை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய ரஜினி, ''சமைக்கத் தெரிந்தவனுக்குப் பொண்டாட்டியாகப் போகக் கூடாது. வேலை தெரிந்தவன்கிட்ட வேலைக்காரனாகப் போகக் கூடாது. பேச்சாளர்கள் இருக்கிற இடத்தில் பேசக் கூடாது. ஆனால், நான் கொஞ்சம் பேசத்தான் போகிறேன்'' என முன்னோட்டம் கொடுத்துப் பேச ஆரம்பித்தார் ரஜினி.

'திருட்டு வி.சி.டி-க்கு எதிரா ஊர்வலம் போகிறோம். கோட்டையில் முதல்வரைச் சந்தித்து மனுக்கொடுக்கலாம்' எனத் திரையுலகத்தினர் சொன்னபோது, 'என்ன பிரயோஜனம். நான் வரவில்லை' என்றேன். ஊர்வலம் போனால் போக்குவரத்து பாதிக்கும். படப்பிடிப்பு கேன்சல் ஆகும் என்பதால் வரவில்லை. ஆனால், அடுத்த நாள் திரைத்துறைக்கு நிறைய சலுகைகளை வழங்கிய செய்தி பத்திரிகைகளில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.

இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என முதலில் சொல்லியிருந்தேன். பத்திரிகைகள் வாயிலாக முதல்வரை ஏற்கெனவே பாராட்டிவிட்டேன். அதனால், நான் விழாவுக்கு வராவிட்டாலும் முதல்வர் தவறாக நினைக்க மாட்டார் எனத் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளிதரனிடம் கூறினேன். ஆனால், 'கண்டிப்பாக வர வேண்டும்' என முரளிதரன் வற்புறுத்தினார். இந்த விழாவுக்கு வராவிட்டால் நான் நிச்சயம் சினிமாக்காரனே அல்ல. திருட்டு வி.சி.டி-க்கு எதிராக முதல்வர் எடுத்த நடவடிக்கையால் திரையுலகை முதல்வர் காப்பாற்றியிருக்கிறார்.

திரைப்படக் கல்லூரியில் நான் மாணவனாக இருந்த நேரத்தில் ஜெயலலிதாவை முதன்முதலில் பார்த்தேன். அங்கு வந்த ஜெயலலிதாவின் நடை, கம்பீரத்தைப் பார்த்து நான் அசந்து போய் நின்றேன். அவர் நடந்து வந்தது போலவே நண்பர்களிடம் நடந்து காட்டினேன். அந்தக் கம்பீரம் இன்றும் அவரிடம் இருக்கிறது. பல பாராட்டு விழாக்களில் நான் பங்கேற்றிருக்கிறேன். ஆனால், சத்தியமான பாராட்டு விழா இதுதான். முதல்வர் செய்திருக்கும் சாதனைகள் சாதாரணமானவை அல்ல.

'கலைத்தாய்க்குக் கலை உலகின் நன்றி விழா'வில்
'கலைத்தாய்க்குக் கலை உலகின் நன்றி விழா'வில்
விகடன்

வீரப்பனைப் பற்றி மற்றவர்களைவிட எனக்கு நன்றாகத் தெரியும். அழிச்சது சாதாரணமான ஆளை அல்ல. அது சாதாரணமான விஷயம் அல்ல. சரித்திரம். வன தேவதைக்கே விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள். வீரப்பன் பிரச்னையும் வீராணம் பிரச்னையும் நிச்சயம் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. அதற்காக எனது மனமார்ந்த பாராட்டுகள். ஹாட்ஸ் ஆஃப் டூ யூ. வீரப்பனை வீழ்த்தியதன் மூலம் தமிழகத்தின் பெருமையை இந்திய அளவிலும் உலக அளவிலும் ஜெயலலிதா உயர்த்திவிட்டார்.

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்னு சொல்லுவாங்க. தைரியலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கீர்த்திலட்சுமி, ஐஸ்வரியலட்சுமினு வரிசையாகச் சொல்லுவாங்க. 'கடவுளிடம் முதலில் எந்த லட்சுமியைக் கேட்கிறது'னு ஒரு கதையில் குருகிட்ட சிஷ்யன் கேட்டான். 'தைரியலட்சுமியை முதலில் கேளு. ஏன்னா தைரியலட்சுமிகூட இருந்தால் மற்ற லட்சுமிகள் தானா வருவார்கள். தைரியலட்சுமி இருக்கிற பக்கம்தான் வீரலட்சுமி, வீரலட்சுமி இருக்கிற பக்கம்தான் விஜயலட்சுமி... இப்படி ஒவ்வொரு லட்சுமியும் தன்னால வருவார்கள். இங்கே ஜெ.ஜெ தைரியலட்சுமி'' என்றார் ரஜினி.

இறுதியில் பேசிய ஜெயலலிதா, ''என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்திருக்கிறீர்கள். திரையுலகம் என் தாய் வீடு. நீங்களெல்லாம் என் உறவினர்கள். இந்த பிரமாண்ட விழா எடுத்த உங்களை நான் மறக்க மாட்டேன்'' என்றார்.

`வள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்!’ - போயஸ் கார்டனில் தகித்த ரஜினி
அடுத்த கட்டுரைக்கு