Published:Updated:

`ரஜினியின் மனமாற்றம்... கழகம் கட்சியானதா?’ - மக்கள் மன்றத்தின் திடீர் அறிவிப்பின் பின்னணி!

ரஜினி
ரஜினி

எர்ணாவூரிலுள்ள அந்த இடத்துக்கு விசிட் செய்தனர். ஆனால், அந்த இடத்தின் சுற்றுப்புறத்தைப் பார்த்து, `ரஜினி ஏன் வடசென்னைக்கு வரப்போகிறார். இது ரஜினியின் கட்சி ஆபீஸாக இருக்காது’ என்கிற முடிவுக்கு வந்தனர்.

ரஜினி கட்சியின் பெயர், கட்சி அலுவலகம், சின்னம் ஆகிவை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன. கட்சியின் பெயர் `மக்கள் சேவை கட்சி’ என்றும், சின்னம் `ஆட்டோ’ எனவும் கட்சி அலுவலகம் செயல்படும் இடம் என சென்னை எர்ணாவூரிலுள்ள முகவரியைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்றபோதிலும் அதில் ரஜினியின் பெயர் இல்லை.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இது தொடர்பாக விவரம் அறிந்த சிலரிடம் விசாரித்தோம். கடந்த மாதம், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தார். அங்கே நின்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலினை அருகில் அழைத்து, `வெளியே மீடியாக்கள் இருக்கின்றன. அவர்களிடம் இந்தத் தகவல்களை நீங்களே சொல்லிவிடுங்கள்' என்று சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு காரில் ஏறிப் பறந்தார்.

இதைப் பார்த்த மற்ற மாவட்ட செயலாளர்களுக்கு ஆச்சர்யம். `ஸ்டாலினுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறாரே...’ என்று பேசிக்கொண்டனர். ஆனால், ஸ்டாலின் தொடர்புள்ள இடத்தில் ரஜினியின் கட்சி அலுவலக முகவரி பதிவு செய்யப்பட்டிருப்பதால்தான், அந்த அளவுக்கு முக்கியத்துவத்தை ரஜினி தந்திருக்கிறார் என்று இப்போது மாவட்டச் செயலாளர்கள் புரிந்துகொண்டனர். மற்றபடி, புதிய கட்சி... ஸ்டாலின் பெயரில் பதிவுசெய்திருப்பதாக புதுத் தகவல் இன்று காலை பரவியது. அது தவறு என்று தெரிகிறது. ஸ்டாலின் பெயரில் கட்சி பதிவு செய்யப்படவில்லை. டம்மியாக வேறு ஒரு பெயரில் பதிவு செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ஒரு வருடத்துக்கு முன்பு, ரஜினி தரப்பிலிருந்து புதிய கட்சி பதிவு செய்ய டெல்லி தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பத்தில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் முகவரி இருந்தன. அதைத் தெரிந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகளின் வி.ஐ.பி-கள் சிலர் களத்தில் இறங்கினர். சிலர் ஆர்.டி.ஐ-யிலும் கேட்டுப் பார்த்தனர்.

`சமூகநீதியை ஒழிக்க முயற்சி’... ரஜினி மீது அமைச்சர் சி.வி.சண்முகம் பாய்வது ஏன்?

முதலில் `அனைத்து இந்திய மக்கள் சக்தி கழகம்’ என்கிற பெயரை தேர்ந்தெடுத்தார் ரஜினி. ஆனால், அது தொடர்பான எந்த ஆவணங்களிலும் ரஜினி பெயர் இல்லை. அதேபோல், முகவரி என்கிற இடத்தில் எர்ணாவூர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவரங்களை எப்படியோ மோப்பம் பிடித்த வி.ஐ.பி-கள் சிலர், எர்ணாவூரிலுள்ள அந்த இடத்துக்கு விசிட் செய்தனர். ஆனால், அந்த இடத்தின் சுற்றுப்புறத்தை பார்த்து, `ரஜினி ஏன் வடசென்னைக்கு வரப்போகிறார். இது ரஜினி கட்சி ஆபீஸாக இருக்காது’ என்கிற முடிவுக்கு வந்தனர். இதே காலகட்டத்தில், தமிழகத்திலிருந்து புதிதாகப் பதிவு செய்த கட்சிகளின் பின்னணியை வி.ஐ.பி-கள் விசாரித்து ஏமாந்தனர். `எம்.ஜி.ஆர் கட்சி’ என்கிற பெயரில் இன்னொருவர் பதிவு செய்திருந்தாராம். அதையும் வி.ஐ.பி-கள் துருவி விசாரித்தனர். அதைப் பதிவு செய்தவருக்கும் ரஜினிக்கும் சம்பந்தமில்லை என்று தெரிந்துகொண்டனர்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இந்தநிலையில் திடீரென ஒரு நாள்... ரஜினி தியானத்தில் இருந்துவிட்டு வந்தவர், முதலில் பதிவு செய்தபோது கட்சியின் பெயரில் இருந்த `கழகம்’ என்கிற வார்த்தை வேண்டாம் என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார். அதையடுத்து, ரஜினியின் விருப்பப்படியே கட்சியின் பெயர் `மக்கள் சேவை கட்சி’ என்று மாற்ற முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ரஜினிக்கு மிகவும் விசுவாசமானவர்கள் 100 பேர் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது என்று சொல்லி பழைய பெயரை மாற்றி, புதுப் பெயர் கேட்டு விண்ணப்பிக்கும் ஆவணங்களில் ரஜினியின் வழக்கறிஞர்கள் கையெழுத்து வாங்கினர். அவர்களும் புதியதாக மாற்றப்பட்ட பெயரை வெளியே சொல்லவில்லை. இந்த நிலையில்தான், தற்போது தேர்தல் கமிஷன் வெளியிட்ட லிஸ்ட்டை வைத்து ரஜினி கட்சியின் பெயர், சின்னம், முகவரி ஆகிவை அம்பலமாகின.

108 கோடி ரூபாய் சம்பளம்... ரஜினி  இன்னும் சூப்பர் ஸ்டாராக இருப்பதன் ரகசியம் என்ன?! #HBDRAJINI
ரஜினி மக்கள் மன்ற அறிக்கை
ரஜினி மக்கள் மன்ற அறிக்கை

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில், ``இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், ``வழக்கமாக, தேர்தல் ஆணையம் கட்சிகளின் பட்டியலை பிப்ரவரி மாதத்தில்தான் வெளியிடும். அதற்கு முன்னதாக ரஜினி தனது கட்சியின் பெயரை அறிவித்துவிடுவார் என்பதால் பிரச்னை இருக்காது என நினைத்தார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் தனது பட்டியலை டிசம்பர் மாதமே வெளியிட்டதால், தற்போது பெயர் வெளியாகிவிட்டது. கட்சியின் பெயரை தலைவர் ரஜினிதான் அறிவிப்பார் என்பதால், தற்போது `தலைமையிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி’ அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு