அலசல்
Published:Updated:

ரஜினி ஏன் முதல்வர் ஆக விரும்பவில்லை?

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

எனக்கு மனைவியைவிட தொழில் தான் முக்கியம்

‘வரி பாக்கி செலுத்த வேண்டும். சினிமாவில் நடிக்க அனுமதி தாருங்கள்’ என, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

42 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதத்தில் நடந்த விஷயம் இது!

அ.தி.மு.க-வைத் தொடங்கிய பிறகு, 1977-ம் ஆண்டு தேர்தலில் வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர். தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்கள் கழித்துதான் முதல்வராகப் பதவி ஏற்றார். காரணம், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படப்பிடிப்பு மீதம் இருந்தது. ‘முதலமைச்சர் ஆன பிறகு நடிக்க முடியாது’ என நினைத்ததால் என்னவோ இந்த ஏற்பாட்டைச் செய்தார்.

ஆட்சியில் அமர்ந்த பிறகு எம்.ஜி.ஆருக்கு சினிமா மோகம் குறையவில்லை. எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், ‘கோப்புகளில் கையெழுத்திடும் எளிமையான பணியில் எம்.ஜி.ஆர் அமர்ந்து விட்டார்’ எனச் சொல்ல... ‘சினிமாவில் நடிக்க ஆசை உண்டு. 15 நாள்கள் முதல்வராகவும் 15 நாள்கள் நடிகராகவும் இருக்கப்போகிறேன்’ என அதே மேடையில் பதில் சொன்னார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘நடிப்பை விட்டுவிடப்போவதில்லை. இரண்டு பொறுப்புகளையும் என்னால் சமாளிக்க முடியும்’ என்று கூறியிருந்தார்.

1978 பிப்ரவரி 11-ம் தேதி பாளையங்கோட்டை அரசு விழாவில் பேசிய எம்.ஜி.ஆர், `மேற்கு வங்காளம் முதல்வர் பி.சி.ராய், ஒரே நேரத்தில் டாக்டராகவும் முதல்வராகவும் செயல் பட்டார். அதேபோல், என்னாலும் நடித்துக் கொண்டே முதலமைச்சர் பணியையும் செய்ய முடியும். அதனால், மீண்டும் சினிமாவில் நடிக்கப்போகிறேன்’ என்றதும் கூட்டம் ஆர்ப்பரித்தது.

ரஜினி, எம்.ஜி.ஆர்
ரஜினி, எம்.ஜி.ஆர்

விஷயம் பிரதமர் மொரார்ஜி தேசாய் கவனத்துக்குப் போனது. ‘சினிமாவில் நடிப்பது, முதல்வர் பதவிக்கு கண்ணியம் சேர்க்காது’ என்றார். சினிமாவில் நடிக்க முடிவான நிலையில், பிரதமரின் கருத்தை அலட்சியம் செய்ய வேண்டாம் என எண்ணி மொரார்ஜி தேசாய்க்கு கடிதம் எழுதினார் எம்.ஜி.ஆர். ‘முதலமைச்சர் பதவிக்குக் கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை. நான் செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கியை, கிடைக்கும் சம்பளத்தை வைத்துச் செலுத்த முடியவில்லை. அதனால், அவகாசம் கிடைக்கும் நேரங்களில் பணம் சம்பாதிக்க திரைப்படங்களில் நடிக்க வேண்டியுள்ளது. எனவே, அனுமதி தாருங்கள்’ என, கடிதத்தில் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டிருந்தார்

1978 ஏப்ரல் 2-ம் தேதி மொரார்ஜி தேசாயிட மிருந்து எம்.ஜி.ஆருக்கு பதில் வந்தது. ‘சினிமாவில் நடிப்பது உங்கள் விருப்பம். அதற்கு பிரதமரின் அனுமதி தேவையில்லை.

முதலமைச்சருக்கான கடமைகளுக்கு இடை யூறு இல்லாமல் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’ எனச் சொல்லியிருந்தார்.

புதிய பட வேலைகள் வேகமெடுத்தன. கதாநாயகியாக லதா, இசை: இளையராஜா, கதை-வசனம்: வாலி, இயக்கம்: கே.சங்கர், தயாரிப்பு: தர்மராஜ் என முடிவாகி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, தொடக்க விழாவுக்குத் தேதி குறித்தனர். படத்தின் பெயர் ‘உன்னை விடமாட்டேன்’. பிரசாத் ஸ்டூடியோவில் ஏப்ரல் 14-ம் தேதி படத்தின் தொடக்க விழா. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியானது. ‘சொந்த படமான `இமயத்தின் உச்சியில்’ படத்தில் நடிக்கப் போகிறேன்’ என 1979 ஜனவரி 31-ம் தேதி அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

தொழில்துறை தொடர்பான மாநாட்டில் முதல்வர் எம்.ஜி.ஆர் பங்கேற்க தேதி கேட்டு, அவரைச் சந்திக்க தொழிலதிபர்கள் முயன்றனர். ‘முதல்வர் பிஸியாக இருக்கிறார். வாய்ப்பில்லை’ என்றனர் முதல்வர் அலுவலக அதிகாரிகள். தொழிலதிபர்கள் விசாரித்தபோது, ‘உன்னை விடமாட்டேன்’ படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்தார். ‘அலுவலக வேலைக்குப் பிறகுதான் நடிப்பேன் எனச் சொல்லிவிட்டு முழுநேரமும் படப்பிடிப்பில் இருக்கிறார் \எம்.ஜி.ஆர்’ என, பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

அடுத்து இன்னொரு பிரச்னை முளைத்தது. ‘விவசாயக் கடன்கள் ரத்து, மின் கட்டணக் குறைப்பு’ உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தியது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். மறியல், தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு என உருமாறிய போராட்டம், துப்பாக்கிச்சூடு வரையில் செல்ல... விவசாயிகள் பலர் பலியானார்கள். போராட்டத்தை ஒடுக்க முடியாமல் போலீஸ் திணற, ராணுவம் வந்தது. இந்தக் களேபரம் மற்றும் அடுத்தடுத்து வந்த இடைஞ்சல்களில், ‘உன்னை விடமாட்டேன்’ பாதியிலேயே நின்று போனது. எம்.ஜி.ஆர் அதன் பிறகு சினிமாவில் நடிக்கவேயில்லை.

எல்லாம் சரி... எம்.ஜி.ஆர் எவ்வளவு வரி பாக்கி வைத்திருந்தார்? அதற்கான விடை, 1982 மார்ச் 25-ம் தேதி நாடாளுமன்றத்தில் கிடைத்தது. ‘1981 அக்டோபர் 30-ம் தேதி வரையில், 2 லட்சம் ரூபாய்க்குமேல் வருமானவரி பாக்கி வைத்திருக்கும் நடிகர்கள் யார்?’ என்ற கேள்விக்கு, நிதித்துறை இணை அமைச்சராக இருந்த சிசோடியா பதில் அளித்தார். எம்.ஜி.ஆர் 9 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் வருமான வரி பாக்கி வைத்திருக்கும் தகவல் அப்போதுதான் தெரியவந்தது.

‘உன்னை விடமாட்டேன்’ விவகாரம் ஓய்ந்து, மூன்று ஆண்டுகள் கழித்து நடிகர் ரஜினியின் திருமணம் 1981 பிப்ரவரி 26-ம் தேதி திருப்பதியில் நடந்தது. அதற்கு முந்தைய தினம் பத்திரிகையாளர் களைச் சந்தித்த ரஜினி, ‘‘திருமணம் முடிந்ததும் உடனே காலை 10 மணியிலிருந்து படப்பிடிப்பில் பங்கேற்பேன். எனக்கு மனைவியைவிட தொழில் தான் முக்கியம்’’ என்று அப்போது பேசியிருந்தார்.

லதாவை ரஜினி கரம் பிடிக்க எம்.ஜி.ஆரும் காரணம். ‘எம்.ஜி.ஆர் சிபாரிசு செய்ததால்தான், எனக்கு லதாவை திருமணம் செய்துவைக்க அவரின் குடும்பத்தினர் சம்மதித்தனர்’ என 2018 மார்ச்சில் எம்.ஜி.ஆர் கல்வி நிறுவனத்தில் நடந்த எம்.ஜி.ஆர் சிலை திறப்புவிழாவில் சொன்னார் ரஜினி. அங்கேதான், ‘அரசியலுக்கு யார் வந்தாலும் அவர் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. அவர் ஒரு தெய்வப்பிறவி. அவரைப்போல் ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்’ என்றும் சொன்னார் ரஜினி.

ரஜினி
ரஜினி

இப்போது மேட்டருக்கு வருவோம்.

‘எம்.ஜி.ஆர் ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும்’ என 2018-ம் ஆண்டில் சொன்ன ரஜினி, இப்போது, ‘‘கட்சிக்கு ஒரு தலைமை... ஆட்சிக்கு இன்னொரு தலைமை’’ என்கிறார். ‘‘முதல்வர் ஆக எனக்கு விருப்பமில்லை. அதை நினைத்துப் பார்க்கவே முடியாது. நான் கட்சித் தலைவராக இருப்பேன். நல்லவரை ஆட்சியில் உட்கார வைப்பேன்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

முதல்வர் பதவியில் அமர்ந்தால், நடிக்க முடியாது எனத் தீர்க்கமாக ரஜினி நம்புகிறார். எம்.ஜி.ஆர் நடிக்க முயன்று, தோற்றுப்போன வரலாறு ரஜினிக்குத் தெரியாமல் இருக்காது. எம்.ஜி.ஆரைப்போலவே கட்சி ஆரம்பித்து, ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த என்.டி.ராமராவ்கூட நடிக்க முயன்று ஒன்றிரண்டு படங்களோடு தோற்றுப்போனார். ‘எனக்கு, மனைவியைவிட தொழில்தான் முக்கியம்’ எனச் சொன்னதன் மூலம், சினிமாதான் தனக்கு முக்கியம் என்பதை ஏற்கெனவே பதிவு செய்திருப்பவர் ரஜினி. ‘ஆட்சியில் இருந்துகொண்டு சினிமாவில் கவனம் செலுத்த முடியாது’ என்பது முன்னவர்களின் கடந்தகால வரலாறு. இதையெல்லாம் மனதில் வைத்துதான் ‘‘முதல்வர் ஆவதை நினைத்துப்பார்க்கவே முடியாது. கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார்போலும்!

எம்.ஜி.ஆர் சிபாரிசில் லதாவை கரம் பிடித்த ரஜினி, எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த சினிமா பாடத்தைவைத்து புதிய அரசியல் அரிச்சுவடி எழுதத் திட்டமிட்டிருக்கிறார்.

காலத்தின் கையில் அது இருக்கு!