Published:Updated:

துக்ளக் பொன்விழா முதல் சாணக்யா ஆண்டுவிழா வரை... ரஜினியின் டார்கெட் தி.மு.க தானா?

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

பெரியார், தி.மு.க, கலைஞர் மற்றும் முரசொலிக்கு எதிரான கருத்துகளையே தொடர்ந்து நுட்பமாக முன்வைத்து வருகிறார் ரஜினி. கடுகளவுக்குக் கூட, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மற்ற தலைவர்களின் இமேஜைச் சீர்குலைக்கும் கருத்துகளை வெளியிடுவதில்லை.

``அரசியலில் அலை என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். நானும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி, அரசியல்ல புதுப்புள்ளி போட்டேன். அந்தப் புள்ளி இப்போ சைலன்டா, கொயட்டா யாருக்கும் தெரியாம ஒரு சுழலா உருவாகிடுச்சு. கடவுள் மத்தியில மக்கள் மத்தியில. இனிமே அதை யாரும் தடுக்க முடியாது. இனிமே அத வலுவான அலையா மாத்தணும். அதுக்கு ரஜினிகாந்த் போகணும்... ரஜினிகாந்த் ரசிகர்கள் போகணும். அந்த அலை கரைய நெருங்க நெருங்க, தேர்தலை நெருங்க நெருங்க பெரிய அரசியல் சுனாமியா மாறும்'' என சாணக்யா ஊடகத்தின் முதலாம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேச அரங்கில் கைதட்டல்கள், விசில்கள் பறந்தன.

ரஜினி
ரஜினி

1996 தேர்தலில் இருந்தே ரஜினி அரசியலுக்கு வரவிருப்பதாக மற்றவர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் அவர் அந்த அறிவிப்பை வெளியிட்டார். அந்தக் காலகட்டத்தில், ஆறு மாத இடைவெளியில் இரண்டு முறை தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார். முதல் சந்திப்பில் அவர் பேசும்போது, ``தமிழகத்தில் இன்றைய அரசியலில் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. சிஸ்டம் சரியில்லை. இது மொத்தத்தையும் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் உருப்படும். அதற்கான நேரம் வரும்" என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளில் பெரும்பாலானோரைப் பாராட்டி தன் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு எதுவும் வராமல் பார்த்துக்கொண்டார். இரண்டாவது முறை நடந்த கூட்டத்தில்தான் ``நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதியிலும் போட்டியிடப் போகிறோம். போருக்குத் தயாராக இருங்கள்" என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்குப் பிறகு ஒவ்வொரு ஊடக சந்திப்புக்குப் பிறகும், தமிழக அரசியல் களம் ரஜினிகாந்தைச் சுற்றி சுழலத் தொடங்கியது. அதில் சிறிது தொய்வு ஏற்பட்ட தருணத்தில் ``அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என பேட்டி கொடுக்க, மீண்டும் தமிழக அரசியல் களம் ரஜினியை மையம் கொண்டே சுழல ஆரம்பித்தது. இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி, ராகவேந்திரா மண்டபத்தில், தனது மக்கள் மன்றத்தின், மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தார் ரஜினி. கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர் ``மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை; ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன்" எனத் தெரிவித்தார். ரஜினியை ஏமாற்றமடையச் செய்த விஷயம் எது என்ற விவாதம் பொதுவெளியில் சூடுபிடித்தது

ரஜினி
ரஜினி

இந்த நிலையில், கடந்த மார்ச் பத்தாம் தேதி மாலை, நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து பத்திரிகையாளர்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது. கண்டிப்பாக ரஜினியின் கட்சி அறிவிப்பு அன்று வெளியாகும் என்று வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்று பேசிய ரஜினி ``மக்களிடம் எழுச்சி உருவாகும்போது அரசியலுக்கு வருவேன்'' என அறிவித்தார். மேலும், அதோடு மூன்று திட்டங்களையும் தெரிவித்து அதை மக்களிடம் கொண்டு செல்ல தன் ரசிகர்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தான் இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த சாணக்யா ஆண்டுவிழாவில் குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

அரசியல் வருகைக்கு, அ.தி.மு.கவை, மற்ற கட்சிகளை எல்லாம் ரஜினி ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மக்கள் மத்தியில் அவர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதாகவும் நினைக்கவில்லை. கொள்கை ரீதியாகவும் ரஜினியின் கொள்கைகளுக்கு எதிர்கருத்துடையவர்கள் இல்லை. ரஜினியின் அரசியல் வருகையை இன ரீதியாக எதிர்த்த சீமானைக் கூட `கட்சிக்குத்தான் நான் தலைவர், ஆட்சிக்கு அல்ல' என்ற அறிவிப்பின் மூலம் இப்போது ஆஃப் செய்துவிட்டார். ரஜினியை பரமவைரியாகக் கருதிய ராமதாஸும் அவருக்கு வாழ்த்துச் சொல்லுமளவுக்கு வந்துவிட்டார். ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டு சேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை; அதேவேளை, மக்கள் அலை, மக்களிடம் எதிர்பார்ப்பு என்பதைத்தாண்டி ரஜினி தன் அரசியல் வருகைக்குச் சவாலாக நினைப்பது ஸ்டாலினையும் தி.மு.க-வையும்தான். அதனால்தான் அதைத் தகர்ப்பதற்கான வேலையை மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டார் அவர் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வழக்கமாக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் ரஜினிகாந்த் இந்த ஆண்டு அதையும் தவிர்த்துவிட்டார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ரஜினி
ரஜினி

கடந்த ஜனவரி 14-ம் தேதி துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது தந்தை பெரியார் குறித்து ரஜினி பேசிய கருத்துகள் மிகப்பெரிய சர்ச்சையாகியது. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. `ரஜினி மன்னிப்புக் கேட்காவிட்டால் அவர் வீடு முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எச்சரிக்கை விடுக்கவும் செய்தனர். அந்தநேரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி ``கேள்விப்பட்டதையும், பத்திரிகைகளில் வந்ததையும்தான் சொல்லியிருக்கிறேன். அதனால், மன்னிப்பும் கேட்க முடியாது, வருத்தமும் தெரிவிக்க முடியாது '' எனத் கடுமையாகப் பதிலளித்தார்.

1971-ம் ஆண்டு சேலத்தில் ராமர் மற்றும் சீதை சிலைக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதைத் துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார் சோ. இதனால், அப்போதைய தி.மு.க அரசுக்குப் பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால், அந்தப் பத்திரிகை யாருக்கும் கிடைக்கக் கூடாது என அதன் பிரதிகளைக் கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டனர். `பிளாக்'கில் விற்றது. 10 ரூபாய் விற்ற பத்திரிகை 50 ரூபாய் 60 ரூபாய்னு போச்சு. இப்படித்தான் கலைஞர் சோவையும் துக்ளக்கையும் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய `பப்ளிசிட்டி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்
ரஜினிகாந்த்

அந்த விழாவில் பெரியாருக்கு எதிரான கருத்துகளை மட்டும் முன்வைக்கவில்லை ரஜினி. சோவைப் பெருமைப்படுத்துவதாக தி.மு.க-வையும், கருணாநிதியையும் சற்று இறக்கிப் பேசினார் ரஜினி. கருத்தியல் ரீதியாக, கொள்கை ரீதியாக தி.மு.க-வை இந்துக்களுக்கு எதிரான ஒரு கட்சியாக சித்திரிப்பதாகவும் அந்தப் பேச்சு இருந்தது. அதோடு மட்டுமல்ல, ``முரசொலி வைத்திருந்தால் தி.மு.க-காரர். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி'' என அதே விழாவில் பேசினார் ரஜினி. அப்போது ரஜினிக்கு எதிராக முரசொலியிலும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் உதயநிதி வெளியிட்ட கருத்துகளாலும்தான் ரஜினி அப்படி நடந்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதையெல்லாம் தாண்டி, தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்குத் தடையாக ஸ்டாலினும் தி.மு.க-வுமே இருப்பார்கள் என்பதால் திட்டமிட்டு தொடங்கப்பட்ட போர்தான் என அடித்துச் சொல்கிறார்கள்.

ரஜினி மற்றும் உதயநிதி
ரஜினி மற்றும் உதயநிதி

தற்போது நடந்த சாணக்யா ஆண்டு விழாவிலும்கூட, தி.மு.க-வைத்தான் வம்புக்கிழுத்தார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலில் உருவாகும் அலை குறித்துப் பேசும்போது, எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை எல்லாம் முதலில் சொல்லிவிட்டு, கருணாநிதி முதல்வராக எம்.ஜி.ஆர் ஒரு காரணம் என்பதையும் பதிவு செய்துவிட்டுத் தொடர்ந்தவர், ``தி.மு.க-வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கணக்குக் கேட்க, அவரைக் கட்சியிலிருந்து தூக்கியெறிந்தார்கள். அவராக விலகியிருந்தால் கூட மக்களிடம் அவருக்கு இவ்வளவு அனுதாப அலை உருவாகியிருக்காது. தூக்கியெறிந்ததால், எம்.ஜி.ஆர் அதையே மக்களிடம் சொல்லி வாக்குக் கேட்டார். மகத்தான வெற்றி பெற்றார்'' என்றவர், தொடர்ந்து, ``91-ல் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது, அப்போது, காங்கிரஸ் மீதான அனுதாப அலை, அவர்களுடன் கூட்டணி வைத்திருந்த அ.தி.மு.க-வை வெற்றிபெறச் செய்தது. ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானார்” என்றார். துக்ளக் விழா, சாணக்யா விழா என எந்தவிழாவாக இருந்தாலும் முன் தயாரிப்புகள் இல்லாமல் ரஜினி பேசுவதில்லை. அதை ரஜினியே பல இடங்களில் சொல்லியும் இருக்கிறார். அப்படிச் சரியாக, பெரியார், தி.மு.க, கலைஞர், முரசொலி ஆகியவற்றுக்கு எதிரான கருத்துகளையே நுட்பமாக முன்வைத்து வருகிறார். கடுகளவுக்குக் கூட, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மற்ற தலைவர்களின் இமேஜைச் சீர்குலைக்கும் கருத்துகளை வெளியிடுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

நிர்வாகச் சீர்கேடு, ஊழல் போன்ற விஷயங்களில் ஆளும் அரசையும் எதிர்ப்பது போல் தோன்றினாலும், அதெல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை. அதேசமயம் நம்பிக்கை சார்ந்தும் உணர்வு ரீதியாகவும் சில விஷயங்களைக் கிளறும்போது அது மிகப்பெரிய சர்ச்சையாகிறது. மக்கள் மத்தியில் தி.மு.க-வுக்கு எதிராக ஒரு நெகட்டிவ் இம்பேக்ட் உருவாகிவிடுகிறது. நிச்சயமாக இது யதேச்சையாக நடப்பதில்லை, திட்டமிட்டே காய் நகர்த்தப்படுகிறது. இந்த விஷயத்தில் ரஜினிக்குப் பின்னால் யார் இருந்து இயக்குகிறார்கள் என்பதெல்லாம் `ஆண்டவனு'க்கே வெளிச்சம்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

ரஜினி என்றில்லை, `ரஜினி, காலம் எனக்களித்த கடைசிக் கருணை’ என முதல்வராக்கக் கிளம்பியிருக்கும் தமிழருவி மணியனும் அதே வேலையைத்தான் செய்துவருகிறார். ரஜினியின் ஆதரவாளராக, ரஜினியைத் தன் தலைவராக ஏற்றுக்கொண்டு ரஜினியின் புதிய கொள்கை பரப்புச் செயலாளராக கிளம்பியிருக்கும் மாரிதாஸ் போன்றவர்களின் செயல்பாடும் அப்படித்தான் இருக்கிறது. தமிழருவி மணியன், மாரிதாஸ், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி போன்றவர்கள் முன்பே தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாடுடையவர்கள்தான் என்றாலும் சமீபகாலமாக அது அதிகரித்திருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசுக்கும் தி.மு.கதான் பெரும் தலைவலியாக உள்ளது. அதனால் ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து விடக் கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறார்கள். ஆக, மொத்தத்தில், தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிடக் கூடாது என்பதில் அ.தி.முகவைவிட இன்னும் பலர் தீயாக வேலை செய்துவருகிறார்கள்.

``முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவர்னா புரட்சித்தலைவர், தைரியலெட்சுமின்னா அம்மா-கால் நூற்றாண்டாகக் கால்பிடித்து காலம் கடத்தி `தலை சுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியைக் கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே தி.மு.க-காரன். நான் தி.மு.க-காரன். பொங்கல் வாழ்த்துகள்''
உதயநிதி ஸ்டாலின்

சரி , இந்த நகர்வுகளுக்கு எதிராக தி.மு.க-வின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

ரஜினி விஷயத்தை தி.மு.க, மிகவும் சென்சிட்டிவ்வாகத்தான் அணுகி வருகிறது. பெரியாருக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என ரஜினி தெரிவித்தபோது, அ.தி.மு.க-வினரே கடுமையான எதிர்வினையாற்றி கண்டித்தபோதும், ஸ்டாலின் மிக கவனமாகவே கையாண்டார். ``நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். அவரிடம் விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். 95 ஆண்டுக்காலம் தமிழ் இனத்துக்காகப் போராடிய பெரியாரைப் பற்றிப் பேசும்போது யோசித்துச் சிந்தித்துப் பேச வேண்டும்'' மிகக் கனிவாகக் கண்டித்தார். முரசொலியை தி.மு.க-வினர்தான் படிப்பார்கள் என்பதற்கும் கூட உதயநிதிதான் எதிர்வினையாற்றியிருந்தார். தற்போதும் கூட, `தி.மு.க-வில் இருந்து தூக்கியெறிப்பட்டார் எம்.ஜி.ஆர்' என ரஜினி கருத்து தெரிவித்தும் அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதி காத்துவருகிறார்கள் தி.மு.க-வினர். பொதுவாக ரஜினி குறித்து, தலைமையின் அனுமதி இல்லாமல் எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்பது, தி.மு.கவில் தற்காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய விதியாக இருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்
ரஜினி சொன்ன பாணியில் கட்சிக்கு கருணாநிதி, ஆட்சிக்கு எம்.ஜி.ஆர்...1979-ல் நடந்தது என்ன?

2014-ல் தே.மு.தி.க, பா.ஜ.க, ம.தி.மு.க, தே.மு.தி.கவால் உருவான மூன்றாவது அணியால் பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது, 2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி எனும் மூன்றாவது அணியால் வாக்குகள் பிரிந்து ஆட்சியை இழந்தது என அந்த இரு தேர்தலில் நடந்தது, இனிமேல் நடந்துவிடக் கூடாது என்பதில் தி.மு.க மிகக் கவனமாகவே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லை. இந்தமுறை கண்டிப்பாக ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும். ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்து மூன்றாவதாக ஒரு அணி அமைந்தாலும் அது தங்களின் வாக்குகளைப் பிரித்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது தி.மு.க. அதனால்தான், ரஜினி விஷயத்தை மிகக் கவனமாக கையாள்கிறார்கள். வலிய வந்து வம்பிழுத்தாலும் மிகப் பொறுமையாக நடந்துகொள்கிறார்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க இந்த ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு