Published:Updated:

அசால்ட் ஆளும்கட்சி... எடுபடாத எதிர்க்கட்சிகளின் குரல்... மாறிவிட்டதா தமிழக மக்களின் மனநிலை?

ஸ்டாலின் - எடப்பாடி
ஸ்டாலின் - எடப்பாடி

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கும் அறிக்கைகளுக்கும் அஞ்சி, ஆட்சி நடத்திவந்த ஆளும்கட்சிகள் இருந்த தமிழக அரசியல் வரலாற்றில், இன்று மிகவும் அசால்ட்டாக எதிர்க்கட்சிகளை, ஆளும்கட்சி டீல் செய்யக் காரணம் என்ன?

ஊழல், லஞ்சம், கொள்ளை என்கிற வார்த்தைகள் சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கிய காலம் ஒன்று இருந்தது. தவறு செய்யும் அரசியல்வாதிகள், மக்களால் கடுமையான விமர்சனத்துக்கும் புறக்கணிப்புக்கும் ஆளானார்கள். சமூகத்தில், மிகப்பெரிய அவமானமாக ஊழல் கருதப்பட்டது. சில பத்தாண்டுகள் கடந்தன. மேல் சொன்ன தவறுகள் எல்லாம், திரைமறைவில் நடக்கிறது என மக்களுக்குத் தெரிந்தாலும், அது வெளியில் அம்பலப்படும்போது மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. பொது இடங்களில் அது குறித்த விவாதங்கள், தேர்தல் காலங்களில் அதற்கான எதிர்வினைகள் ஆகியவை அரங்கேறின. இன்னும் சில பத்தாண்டுகள் கடந்தன. ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடியில் ஊழல் புகார் வெளியில் வந்தாலும், அது மக்களிடையே சிறிய அதிர்வைக் கூட உண்டாக்கவில்லை... ஊழல் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எங்கும் நடப்பதில்லை... எதிர்க்கட்சிகள் வாசிக்கும் பக்கம் பக்கமான ஊழல் புகார்களை எல்லாம், மக்கள் எங்கோ யாருக்கோ சொல்வதுபோல, பார்க்கத் தொடங்கிவிட்டனர். கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த இந்த மாற்றம் மிகப்பெரிய துயரமாகும்.

ஊழல்
ஊழல்

பக்காவான தரவுகளுடன் நியாயமான கேள்விகளுடனும் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை நோக்கி வீசும் வெடிகுண்டுகள் மட்டுமல்ல ஏவுகணைகள் கூட சத்தமில்லா புஸ்வானமாகப் போய்விடுகின்றன... எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கும் அறிக்கைகளுக்கும் அஞ்சி, ஆட்சி நடத்திவந்த ஆளுங்கட்சிகள் இருந்த தமிழக அரசியல் வரலாற்றில், இன்று மிகவும் அசால்ட்டாக எதிர்க்கட்சிகளை, ஆளுங்கட்சி டீல் செய்யக் காரணம் என்ன?

தவறுகளை ஏற்கப் பழகிவிட்டார்களா தமிழக மக்கள்?

ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பதை மக்கள் தற்போது விரும்பவில்லையா?

ஊழலில் ஈடுபடுபவர்களைவிட, குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் மீது மக்களின் கோபம் திரும்பக் காரணம் என்ன?

இது போன்ற கேள்விகளை வெவ்வேறு கொள்கைகளைப் பின்பற்றிவரும், தமிழக அரசியல் ஆளுமைகள் சிலரின் முன்வைத்தோம். அதற்கு அவர்கள் அளித்த, சுவாரஸ்யமான பதில்கள் பின்வருமாறு,

``ஊழல்வாதிகள் தண்டிக்கப்படாமல் போனதே காரணம்'' - கோபண்ணா!

``ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மக்களிடையே வரவேற்பும் ஈர்ப்பும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் அது நீர்த்துப் போய்விட்டது. ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் யாரும் பெரியளவில் தண்டிக்கப்படாமல் போனதே அதற்குக் காரணம். ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில், பெரும்பாலும் நிரூபிக்கப்படுவதில்லை. தவிர, முன்பு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலே, அது நிரூபிக்கப்படாவிட்டாலும், மக்கள் தண்டித்தார்கள். 2 ஜி விஷயத்தில் அதுதான் நடந்தது. அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஊழலாக சித்திரித்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட்டது. மக்களும் தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக வாக்களித்தார்கள். ஆனால், அதுபோன்ற தண்டிக்கும் உணர்வு இப்போது மக்களிடத்தில் இல்லை. காரணம், மக்களும் அந்தத் தகுதியை இழந்துவிட்டார்கள், மக்களே தங்களுக்கு ஒரு வேலை நடக்க வேண்டும் என்றால் காசு கொடுத்து முடிக்கப் பார்க்கிறார்கள். மக்களிடம் இருந்து மாற்றம் வராமல் ஊழலை ஒழிக்க முழியாது. அது சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகவும் இருக்காது.”

கோபண்ணா
கோபண்ணா

``உண்மையான மாற்று இல்லாததே காரணம்'' - அருணன்!

``1972-ம் ஆண்டில் தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர் விலகும்போது, கலைஞருக்கு எதிராக, அவர் கையிலெடுத்த முக்கியமான ஆயுதம் ஊழல் குற்றச்சாட்டுதான். 1967-ல் இருந்து 1972 வரையில், ஆட்சியில் இருந்த தி.மு.க, தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை (போக்குவரத்தை பொதுவுடமையாக்கியது, சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம்) அறிமுகப்படுத்தியிருந்தாலும், எம்.ஜி.ஆரின் ஊழல் புகாரால் அவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன. எம்.ஜி.ஆரின் ஊழல் புகார், மக்கள் மனதில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. திண்டுக்கல்லில் நடந்த இடைத் தேர்தலில் அது பிரதிபலித்தது. அ.தி.மு.க வெற்றிபெற, 1971 பொதுத் தேர்தலில் மிகப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருந்த தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 1972 பொதுத்தேர்தலில் தி.மு.க-வின் ஆட்சியும் பறிபோனது. எவ்வளவு நல்லது செய்திருந்தாலும், ஊழலை மக்கள் அறவே வெறுத்தார்கள். ஆனால், இப்போது மக்களின் மனநிலை, ஆளும்கட்சி எவ்வளவு ஊழல் செய்தாலும், நமக்கு என்ன செய்கிறது என்பதைப் பார்த்து ஆதரிப்பது, தேர்தலில் ஓட்டு போடுவது என மாறிவிட்டது.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இந்த நிலைதான். அதற்குக் காரணம், `இந்தியாவை காங்கிரஸ், பா.ஜ.க அல்லது அவர்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி செய்யப்போகிறது. இரண்டு கட்சிகளுமே ஊழல் செய்யத் தயங்காத கட்சிகள்தான். இரண்டு கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல்தான் செய்யப் போகிறார்கள். அதில் தங்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள்' என்பதைப் பார்த்து வாக்களிப்போம்' என்கிற மக்களின் மனநிலையே. இதே சூழல்தான் தமிழகத்திலும். தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளும் ஊழல் கட்சிகள்தான் என்று மக்களின் மனதில் முடிவாகிவிட்டது. இரண்டு கட்சிகளுக்கும் உண்மையான மாற்றாக யாரும் இல்லாததால், ஊழல் பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மற்ற விஷயங்களை விவாதிக்கத் தயாராகிவிட்டார்கள்.  இந்தநிலை மாற, உண்மையான மாற்று உருவாக வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அந்த வேலையை இடது சாரி இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்

அருணன்
அருணன்

அதேபோல, அரசியலுக்கும் ஊழலுக்கும் உள்ள தொடர்பு என்பது தேர்தலோடு சம்பந்தப்பட்டது. இந்தியத் தேர்தல் முறையிலும் பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். தேர்தல் செலவுகளுக்காகத்தான் ஊழல் செய்கிறோம் என்கிற போக்கு அரசியல்வாதிகளிடம் இருக்கிறது. தேர்தல் செலவுகளை அரசே ஏற்கும்போது இது போன்ற பிரச்னைகள் எழாது. மத்தியில் ஆள்பவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்''

``மக்கள் கண்டுகொள்வதில்லை என்று சொல்ல முடியாது'' - சுப.வீரபாண்டியன்!

``எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளை மக்கள் பொருட்படுத்துவதில்லை எனச் சொல்லமுடியாது. ஆனால், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் பெரியளவில் எடுபடாமல் இருப்பதற்கு, தற்போது, மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சிக்கு, மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கி வருவதுதான் காரணம். மத்திய அரசு, மாநில அரசை நோக்கி கேள்வி எழுப்பும்போதுதான், அது ஒரு பிரச்னையாகி மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறும். அதேபோல, ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் கண்டுகொள்வதில்லை அல்லது ஊழலை மக்கள் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டார்கள் என நாம் சொல்ல முடியாது. மக்களிடம் அது நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது. தமிழக மக்களிடையே எப்போதும், பெரிய புரட்சிக்கான சூழல் இருந்தது இல்லை. ஊழல் அரசியல்வாதிகளுக்கு எப்போது  தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். தேர்தல் நேரத்தில் அது சரியாக வெளிப்படும்.''

சுப.வீரபாண்டியன்
சுப.வீரபாண்டியன்

``ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லாததே காரணம்'' - கே.டி.ராகவன்!

``இடைத்தேர்தல்களில் ஓட்டுக்கு இரண்டாயிரம், மூவாயிரம் என கொடுக்க ஆரம்பித்து, அது பொதுத்தேர்தலிலும் தொடர்ந்ததே மக்கள் ஊழலை ஒரு பொருட்டாகக் கருதாதற்குக் காரணம். தவிர, மக்களே இப்போது ஓட்டுக்குக் காசு கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்ததாக, ஒரு லட்சம் கோடி, ஒன்றைரை லட்சம் கோடி என பெரிய தொகைகளை, ஊழல் தொகையாகக் கேட்டபிறகு, இரண்டாயிரம் கோடி, ஆயிரம் கோடி எல்லாம் மிகச் சாதாரணமாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதுபோல, ஊழலே செய்யாத ஒரு கட்சி, ஊழல் குறித்து ஒரு கட்சியை விமர்சித்தால் மட்டுமே, அது மக்கள் மத்தியில் எடுபடும். இல்லாவிட்டால், `நீ என்ன யோக்கியமா' என்கிற மனநிலையில்தான் மக்கள் குற்றம் சாட்டுபவர்களை அணுகுவார்கள். அப்படி, எந்தக் கறையும் இல்லாத கட்சிகள் விமர்சித்தாலும், திராவிடக் கட்சிகளுக்கு தமிழகத்தில் இருக்கும் பலமான கட்டமைப்பு அவர்களைக் காப்பாற்றிவிடும்.

கொரோனா நேரத்தில் 2 ஆயிரம் கோடி டெண்டர் முறைகேடு... மத்திய அரசின் தடா!

அதேபோல, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் இப்போது இல்லை என்பதும் ஒரு காரணம். அவர்கள் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதற்கு ஒரு வலிமை இருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியைத் திறம்பட வழிநடத்தி வருகிறார். ஆனாலும், மாஸ் லீடராக வருவதற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஸ்டாலினைப் பொறுத்தவரை, அவருக்கான தேர்வு, 2021 சட்டமன்றத் தேர்தலில்தான். அதை அவர் திறமையாக எதிர்கொள்ளும் பட்சத்தில் அவருக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறது.''

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

சட்டமன்றத்திலோ, இல்லை வெளியிலோ ஆளும்கட்சிக்கு எதிராக ஒரு ஊழல் புகாரையோ, நிவாகச் சீர்கேட்டையோ பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வினர் முன்வைத்தால், ``உங்கள் ஆட்சியில்'' என முதல்வர் பேச ஆரம்பித்த உடனேயே, `பாரு எப்படித் திறமையா சமாளிக்கிறார்' என புகழாரம் சூட்ட ஆரம்பித்துவிடுகிறோம். ஆனால், அதனால், பாதிக்கப்படப்போவது நாம்தான், பறிபோவது நம் வரிப்பணம்தான், என்கிற சிந்தனை மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விட்டது. இந்த சிந்தனை மாற வேண்டும். இன்று எதிர்க்கட்சியாக இருப்பவர்களின் மீதும் ஊழல் புகார்கள் இருக்கின்றன என்பதற்காகவே, அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளைப் புறம் தள்ளுவது, கேலி பேசுவது என்பது ஆளும் கட்சியின் ஊழல்களை ஊக்குவிப்பது மட்டுமன்றி மக்கள் தங்களுக்குத் தாங்களே குழி தோண்டிக் கொள்வது போலானதுதான். ஓட்டுக்குப் பணம் வாங்குவது போன்ற விஷயங்களில் மக்களும் மாற வேண்டும். யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்களின் ஆக்கபூர்வமான செயல்களைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் தவறுகளை துணிச்சலோடு எதிர்க்கவும் முன்வந்தால் மட்டுமே இந்தநிலை மாறும்.

அடுத்த கட்டுரைக்கு