Published:Updated:

ரஜினி அறிவிப்பு; ஸ்டாலினுடன் போட்டி - அ.தி.மு.க-வை விடுத்து சீமான் தி.மு.க-வை டார்கெட் செய்வது ஏன்?

ஸ்டாலின் - சீமான் - ரஜினி

திருவொற்றியூரில் போட்டியிட முடிவு செய்திருந்த சீமான், திடீரென ஸ்டாலினுக்கு எதிராகப் போட்டியிடப்போவதாக அறிவித்தது ஏன்?

ரஜினி அறிவிப்பு; ஸ்டாலினுடன் போட்டி - அ.தி.மு.க-வை விடுத்து சீமான் தி.மு.க-வை டார்கெட் செய்வது ஏன்?

திருவொற்றியூரில் போட்டியிட முடிவு செய்திருந்த சீமான், திடீரென ஸ்டாலினுக்கு எதிராகப் போட்டியிடப்போவதாக அறிவித்தது ஏன்?

Published:Updated:
ஸ்டாலின் - சீமான் - ரஜினி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆரம்பித்து, பிறகு சென்னையிலேயே போட்டியிடலாம் என முடிவெடுக்கப்பட்டு, குறைவான வாக்காளர்களைக்கொண்ட ஆலந்தூர் தேர்வாகி, பிறகு தொழிலாளர்கள், மத்தியதர மக்கள் அதிகமாக வாழும் திருவொற்றியூர் தொகுதி முடிவாகி தேர்தல் வேலைகளும் தொடங்கப்பட்ட நிலையில், ``ஸ்டாலின் நிற்கும் தொகுதியில்தான் போட்டியிடுவேன்’’ எனத் தற்போது தடாலடியாக அறிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கடந்த மாதம், விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ``நீங்கள் சென்னையில் போட்டியிடுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதிலும் ஸ்டாலின் வெற்றிபெற்ற கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாகச் சொல்கிறார்களே... அது உண்மைதானா, போட்டியிடுவீர்களா?'' எனப் பத்திரிகையாளர்கள் கேட்க, சீமான் திரும்பி, தன் தம்பிமார்களைப் பார்த்துவிட்டு ``நிக்கணும்னு எல்லாரும் நினைக்கிறாங்க... நானும் நிக்கலாம்னு நினைக்கிறேன்... அதை அப்புறம் யோசிப்போம்’’ என பதில் தந்தார். ஆனால், அவரின் கட்சி நிர்வாகிகளோ, ``பத்திரிகையாளர்கள் கேட்டதால்தான் அண்ணன் அப்படியொரு பதில் தந்தார். அப்படி எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை’’ என்றனர்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து, கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நடிகர் மன்சூர் அலிகானைக் களமிறக்கவும், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட்டால், அங்கு நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவருமான இடும்பாவனம் கார்த்தியை நிறுத்த முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது, நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறீர்கள் எனப் பொதுவாக சீமானிடம் கேட்க, அவராகவே ``ஸ்டாலின்தான் நான் போட்டியிடும் தொகுதியை முடிவு செய்ய வேண்டும். அவர் போட்டியிடும் தொகுதியில்தான் போட்டியிடுவேன். தமிழரா, திராவிடரா என மோதிப் பார்த்துவிட வேண்டும். இந்தமுறை, தி.மு.க-வுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும்தான் சண்டை'' என உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

ட்விட்டர் டிரெண்டிங்
ட்விட்டர் டிரெண்டிங்

அதைத் தொடர்ந்து அவரின் தம்பி, தங்கைகளும் திராவிடரா, தமிழரா என்கிற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்விட்டரில் நேற்று டிரெண்ட் செய்தனர்.

திருவொற்றியூரில் போட்டியிட முடிவு செய்திருந்த சீமான் திடீரென ஸ்டாலினிக்கு எதிராகப் போட்டியிடக் களமிறங்கியது ஏன்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரஜினியின் அறிவிப்பு 

நடிகர் ரஜினிகாந்த், `கண்டிப்பாக கட்சி தொடங்குவேன்’ என அறிவித்திருந்த நிலையில், அதைத் தனக்குச் சாதகமாகவே நினைத்தார் சீமான். காரணம், மற்றவர்களைக் காட்டிலும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆரம்பம் முதலே மிகக் கடுமையாக எதிர்த்துவந்தார் சீமான். கடந்த டிசம்பர் 3-ம் தேதி, ரஜினியின் அறிவிப்பு வந்த பிறகு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், `ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் வரக் கூடாது’ எனக் காட்டமாகப் பேசினார். ரஜினியைத் தீவிரமாக எதிர்ப்பதன் மூலம் தேர்தல் நேரத்தில் லைம்லைட்டில் இருக்கலாம் என நினைத்தார் சீமான். ஆனால், ரஜினி தற்போது ஜகா வாங்கிவிட, தன் அடுத்த அஸ்திரத்தைக் கையிலெடுத்திருக்கிறார் சீமான்.

ரஜினி
ரஜினி

ஸ்டாலினை எதிர்ப்பது ஏன்?

அதாவது, ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டால் மிகப்பெரிய பப்ளிசிட்டி கிடைக்கும். அதன் மூலம் திராவிடமா, தமிழ்த் தேசியமா என்கிற விவாதத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கலாம் என நினைக்கிறார். ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் ஒரு தொகுதியில் மட்டுமல்லாமல், மற்ற 233 தொகுதிகளிலும் தி.மு.க Vs நாம் தமிழர் என விரிவுபடுத்தலாம் எனவும் யோசிக்கிறார். இப்படிச் செய்வதன் மூலம், இந்தத் தேர்தலில் இல்லாவிட்டாலும், எதிர்காலத்திலாவது அது, தனக்கு நிச்சயம் பலனளிக்கும் என்பதே சீமானின் திட்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.தி.மு.க-வின் மீதான கரிசனம் ஏன்?

அ.தி.மு.க திராவிடக் கட்சிதான் என்றாலும், கொள்கைரீதியாக தி.மு.க-தான் திராவிடம் என்கிற கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால், அ.தி.மு.க அப்படியல்ல. அதனால் அ.தி.மு.க-வை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை என்கிறார் சீமான். ஆனால், அ.தி.மு.க-வினருடன் சீமான் நெருக்கமாக இருப்பதாலேயே, அவர்களைக் கடுமையாக விமர்சிப்பதில்லை என்கிற விமர்சனமும் அந்தக் கட்சியின் மீது முன்வைக்கப்படுகிறது.

 சீமான் - பழனிசாமி
சீமான் - பழனிசாமி

அரசியல் விமர்சகர்கள் கருத்து

``ரஜினி களத்திலிருந்து வெளியேறிவிட்டார் சரி. ஆனால், பா.ஜ.க இந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக மிகத் தீவிரமாக வேலை செய்துவருகிறது. ஆன்டி பி.ஜே.பி என்கிற அடிப்படையில், தி.மு.க-வும் நாம் தமிழரும் ஒரே கொள்கையைத்தான் கடைபிடித்து வருகின்றன. அப்படியிருக்கும்போது, ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால், பா.ஜ.க-வின் 'பி' டீம் என்கிற பெயர்தான் அவருக்கு ஏற்படும். தேர்தல் அரசியல், கருத்தியல்ரீதியான விவாதத்துக்கான களம் அல்ல. அதனால் இந்தத் தேர்தலில் யாரை வீழ்த்த வேண்டும் என்கிற இலக்குதான் அவருக்கு இருக்க வேண்டுமே தவிர, கருத்தியல்ரீதியான சண்டைக்கான களமாக தேர்தலை எடுத்துக்கொள்ளக் கூடாது. அதனால், ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதைவிட, அவருக்கு எங்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் எனச் சிந்தித்து, அதற்காகக் கடுமையாக உழைத்து சீமானாவது சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும். அதுதான் அந்தக் கட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்'' என்கிறார்கள்.

நாம் தமிழர் நிர்வாகிகள் தரப்பு

``இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. கண்டிப்பாக அண்ணன் சீமான் இந்தமுறை வெற்றிபெறுவார். ஆனால், அண்ணனே, `நான் ஒருவர் மட்டும் சட்டமன்றம் போய் என்னாவாகப்போகிறது. கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான வழி. எதிர்கால வளர்ச்சிக்கு இது நிச்சயமாக உதவும்’’ என நினைக்கிறார். தவிர, பா.ஜ.க-வுக்கு எதிரான ஒரு கட்சியாக நாங்கள் தி.மு.க-வைப் பார்க்கவில்லை. `பா.ஜ.க-வில் 100 சதவிகித இந்துக்கள் இருக்கிறார்களென்றால், தி.மு.க-வில் 90 சதவிகித இந்துக்கள் இருக்கிறார்கள்’ என ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள்தான் உண்மையாக பா.ஜ.க-வை எதிர்த்துவருகிறோம். காஙிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லையென்றால், `பா.ஜ.க-வின் பி டீம்’ என முத்திரை குத்துவதைப்போல்தான் தமிழ்நாட்டில் தி.மு.க-வுடன் கூட்டணி சேரவில்லையென்றால், அ.தி.மு.க-வினருடன் நெருக்கமாக இருக்கிறோம் எனக் குற்றம் சுமத்துவதைப் பார்க்கிறோம். தவிர அதில் துளியளவும் உண்மை இல்லை. மற்ற கட்சி ஆட்சிக்கு வருவது பற்றி நாங்கள் ஏன் யோசிக்க வேண்டும்... எங்களின் வளர்ச்சி பற்றித்தான் சிந்திப்போம்'' என்கின்றனர் உறுதியாக.

நாம் தமிழர் அமைப்பினர்
நாம் தமிழர் அமைப்பினர்

நாம் தமிழர் கட்சியினரின் எண்ணம் இப்படியிருக்க, அது யதார்த்ததில் எந்த அளவுக்குப் பயன் தரப்போகிறது என்பதைத் தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும். அதுவரைப் பொறுத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism