Published:Updated:

சீமான் : தனித்துப் போட்டி என பிடிவாதம் ஏன்?

நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்கள், அவர்கள் கைக்காசைப் போட்டுத்தான் தேர்தல் செலவுகளைச் செய்கின்றனர். தோல்வியடைந்துகொண்டே இருந்தால், அது அவர்களுக்கு சோர்வையே தரும். எனினும், சீமான் தனித்துப் போட்டியிட விரும்புவது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``நாம் தமிழர் கட்சி, ஒவைசி கட்சியுடன் மட்டுமல்ல, எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கமாட்டோம். ஒவைசி மீது எனக்கு மதிப்பு உண்டு. அவ்வளவுதான். நாங்கள் வேட்பாளரையே இறுதி செய்துவிட்டோம்.''
சீமான்

தஞ்சையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தடாலடியாக அறிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதற்கு முன்பாக ஈரோட்டில் பேசிய சீமான், ``யார், யாருடன் கூட்டணி வைக்கிறார்கள், இல்லை என்பது எங்களுக்குப் பிரச்னை இல்லை. எங்கள் கொள்கை, பாதை, பயணம் தனித்தது. ஆகையால், தனித்தே போட்டியிடுவோம். பெருந்தலைவர் வழியில், ஜீவானந்தம், சிங்காரவேலர், கக்கன் வழியில் நாங்கள் நேர்மையான தூய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறோம்'' எனவும் தெரிவித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

இயக்கமாகச் செயல்பட்டுவந்த நாம் தமிழர் அமைப்பு, தேர்தலில் போட்டியிடும் கட்சியாகப் பரிணமித்தது 2010-ம் ஆண்டு. தொடர்ந்து நடைபெற்ற 2011 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாமல், காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப் பிரசாரம், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப் பிரசாரம் எனத் தேர்தல் களத்தில் சில பங்களிப்புகளைச் செய்தது. முதன்முறையாக, 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கி, தனித்துத் தேர்தலைச் சந்தித்தது அந்தக் கட்சி. ஒட்டுமொத்தமாக, 4,58,104 வாக்குகள் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிம் பெற்று, தமிழக அரசியல் கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.

தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. 20 தொகுதிகளில் ஆண், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சீமான். ஒட்டுமொத்தமாக, 16,45,185 வாக்குகள் பெற்றது அந்தக்கட்சி. வாக்கு சதவிகிதம் 1.07- லிருந்து 3.87-ஆக அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், 16 தொகுதிகளில் 50,000-த்துக்கு மேல் வாக்குகளையும், ஏழு இடங்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது அந்தக்கட்சி. தொடர்ந்து, கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஒரு ஒன்றியக் கவுன்சிலர் இடத்தையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றினர் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள்.

மழையில் பேசிய கமல்
மழையில் பேசிய கமல்

கடந்த தேர்தல்களைப்போல இந்தமுறையும் தனித்துப் போட்டியிடவே முடிவு செய்திருக்கிறார் சீமான். கடந்த தேர்தலிலேயே, எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற வேண்டும் என்பதே அக்கட்சி நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், திடீரென நடிகர் கமல் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்டு அவர் பங்குக்கு ஒரு நான்கு சதவிகிதத்தை தட்டிச் சென்றுவிட்டார். இந்தமுறை போட்டி இன்னும் கடுமையாகியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தும் ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அவரும் தனித்துக் களமிறங்கினால், வாக்குகள் இன்னும் பிரிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குவங்கி அதிகரிக்கும்போது கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் பிறக்கும். ஆனால், ஏற்கெனவே வாங்கிய வாக்குகளைவிட குறைவாக வாங்கினால் அது தொண்டர்களை உற்சாகமிழக்கச் செய்துவிடும்.

47 வேட்பாளர்கள்... சென்னையில் சீமான்? - களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி! #TNElection2021

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே, 2009 ஈழ இனப்படுகொலைக்குப் பிறகு, தமிழ்த் தேசிய உணர்வோடு வந்த இளைஞர்களை சீமான் இப்படித்தான் சோர்வடையச் செய்து அரசியல் அரங்கிலிருந்து வெளியேறச் செய்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தவிர, ``நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்கள் பொருளாதாரரீதியாக மிகவும் எளிய பின்னணியிலிருந்து வருபவர்கள், அவர்கள் கைக்காசைப் போட்டுத்தான் தேர்தல் செலவுகளைச் செய்கின்றனர். தொடர்ச்சியாக தோல்வியடைந்துகொண்டே இருந்தால், அது அவர்களுக்கு சோர்வையே தரும். இது ஒருபுறம் என்றால், ஏறக்குறைய பா.ஜ.க எதிர்ப்பு என்கிற நிலையில் தி.மு.க-வின் கொள்கைகளும், நாம் தமிழரின் கொள்கைகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, பா.ஜ.க எதிர்ப்பைக் கையாளும் அணியுடன் இணைந்து போட்டியிடாமல் தனியாகக் களமிறங்குவது, அந்த அணியின் வாக்குகளைத்தான் பிரிக்கும். இதனால், `பா.ஜ.க-வின் பி.டீம்’ என்கிற முத்திரையும் அவரின் மீது விழும்'' என அரசியல் விமர்சகர்கள் சிலர் எச்சரிக்கும்போதும் மீண்டும் மீண்டும் சீமான் தனித்துப் போட்டியிட விரும்புவது ஏன்?

பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியினர்
பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியினர்

``தேசிய திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். யாருக்கும் பி டீமாக இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மற்ற கட்சிகள் எங்கள் தலைமையை விரும்பி வந்தால் நிச்சயமாகக் கூட்டணியில் சேர்த்துகொள்வோம். ஆனால், யாரும் அப்படி வரத் தயாராக இல்லை. தவிர, எங்கள் கட்சியில் தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்து வேட்பாளர் தேர்வையும் இறுதி செய்துவிட்டோம். 150 வேட்பாளர்களின் அது குறித்த தகவல்களும் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் களத்தில் இறங்கி பிரசாரத்தையும் ஆரம்பித்துவிட்டனர். கடந்தமுறை கமல் திடீரென தேர்தல் களத்துக்கு வந்தார். அதனால் சில குழப்பங்கள் ஏற்பட்டு, மீடியா வெளிச்சம் மூலம் அவர் வாக்குகளைக் கைப்பற்றினார். ஆனால், இந்தமுறை அப்படியல்ல. மக்களுக்கு யோசிப்பதற்கு நன்றாக நேரம் இருக்கிறது. ரஜினி தனித்துப் போட்டியிட்டாலும் நிச்சயமாக எங்கள் வாக்குகளைப் பிரிக்க மாட்டார். காரணம், ரஜினிக்கு ஓட்டுப் போடக்கூடிய மனநிலையில் இருந்த யாரும் எங்களுக்கு நிச்சயம் ஓட்டுப் போட்டிருக்க மாட்டார்கள்.

``நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை வெற்றி, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இனவிடுதலை ஒன்றே இலக்கு என்று போராடுகிறார்கள். அவர்கள், 1.1-3. 8 சதவிகித வாக்குகள் எடுத்ததே அதிசயமான ஒரு விஷயம்தான். ராஜ்தாக்கரே முதல் தேர்தலில் ஐந்து சதவிகிதம் வாங்கியவர். அடுத்த தேர்தலில் 1 சதவிகிதமாகக் குறைந்துவிட்டார். இப்போது பலமுனைப் போட்டி நிகழ்வதால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இடைத்தேர்தலைக் கண்டு அச்சப்படாமல் அனைத்து இடைத் தேர்தல்களிலும் பங்குகொண்டனர். நாம் தமிழரின் வாக்கு உறுதியான, தீர்க்கமான வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாத வாக்கு.
ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்)

எங்கள் கட்சி உறுப்பினர்களே கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இருக்கின்றனர். மற்ற கட்சிகளைப்போல தேர்தல் வெற்றி, தோல்விக் கணக்குகளோடு பயணிப்பவர்கள் அல்ல நாங்கள். தவிர, கடந்த ஓராண்டில் எங்கள் கட்சியின் கட்டமைப்பு இன்னும் வலுவாகியிருக்கிறது. ரஜினி எதிர்ப்பு வாக்குகளும் எங்களுக்குக் கிடைக்கும். அதேபோல, கமல் தனித்துப் போட்டியிட்டால் எங்களுக்கு 8 சதவிகிதம் கிடைக்கும். ஒருவேளை அவர் தி.மு.க கூட்டணிக்குச் சென்றால் நாங்கள் 12 சதவிகித வாக்குகளைப் பெறுவோம். 2026 தேர்தலில் முதன்மையான போட்டியாளர்களில் நாங்கள் இருப்போம்'' என்பது நாம் தமிழர் தரப்பு வாதமாக இருக்கிறது.

பிரியன்
பிரியன்

பிரியன் (மூத்த பத்திரிகையாளர்)

``வருகின்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது. காரணம், சீமானுக்கென்று இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. தனித்துவமாக இயங்குகிறார்கள். எந்தவொரு விஷயத்தையும் தெளிவான சிந்தனையோடு அணுகுகிறார்கள். அவர்களின் பிரசாரமும் தீவிரமாக இருக்கும். ஆனால், ஆறு சதவிகிதம் வரை அதிகரிக்கலாம். ஆனால், அந்தக் கட்சி எதிர்பார்க்கிற அளவுக்கு எட்டு சதவிகிதம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதேபோல, எதிர்காலத்தில் அவர்களுக்குப் பரந்துபட்ட ஆதரவு கிடைக்குமா என்று தெரியவில்லை. காலப்போக்கில் அவர்களால் பத்து சதவிகித வாக்குகள் வரை மட்டுமே வாங்க முடியும். சில பகுதிகளில் வலிமையாகவும் 4, 5 இடங்களைப் பிடிக்க வேண்டுமானால் வாய்ப்பிருக்கிறது. கூட்டணிவைத்தால் அவர்களின் தனித்துவம் போய்விடும். அதேபோல, ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆதரவு கிடைப்பது கடினம். தீவிரமான கொள்கையுடைய கட்சிகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட எல்லையோடு நின்றுவிடும்'' என்கிறார்.

ஆனால் சீமானோ, ``தமிழக மக்களை முழுமையாக நம்புகிறோம்'' என்கிறார். தமிழக மக்கள் அவரை எந்த அளவுக்கு நம்புகிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளின்போது தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு