Published:Updated:

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: திமுக எதிர்ப்பது ஏன்?

10% இட ஒதுக்கீடு

`பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் நியாயமானதாகவும் இல்லை, ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இல்லை. அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமற்றது!' - திமுக

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: திமுக எதிர்ப்பது ஏன்?

`பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் நியாயமானதாகவும் இல்லை, ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இல்லை. அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமற்றது!' - திமுக

Published:Updated:
10% இட ஒதுக்கீடு

கடந்த 2019-ம் ஆண்டு, மத்திய பா.ஜ.க அரசானது பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது. அப்போதே, இந்த இட ஒதுக்கீட்டு முறை, ``அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்முறை அரசியலமைப்பிலும்கூட இல்லை; இதனால் பிற சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்; மேலும், இட ஒதுக்கீடு வரம்பு 50 சதவிகிதத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுகிறது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணுவதில் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை கேள்விக்குள்ளாக்குகிறது" என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக மனுத்தாக்கல் செய்தனர்.

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு

இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள், சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது. பல்வேறு தரப்பில் வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

திமுக-வின் வாதம் என்ன?

திமுக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தார். அதில், ``சமத்துவத்தைப் பின்பற்றச்சொல்லும் ஒரு அம்சமாக விளங்குகிறது இந்திய அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவு. ஆனால், பொருளாதார அளவுகோலின்கீழ் இட ஒதுக்கீடுகளை கொண்டு வருவது என்பது பிரிவு 14-ஐ அப்பட்டமாக மீறும் வகையிலும், அதன் அடிப்படைத் தன்மையையே கேள்விக்குள்ளாக்குவதாகவும் இருக்கிறது. மேலும், இந்திரா சாஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் இருக்கிறது. ஏற்கெனவே, சமூக பின்தங்கிய நிலையை வரையறுக்க பொருளாதார அம்சத்தை கருத்தில் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தொடர்ந்து, ``பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது சட்ட திருத்தம் அரசியலமைப்பு சாசனத்தை மீறக்கூடியது. முன்னேறியப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை சமத்துவத்துக்கான கொள்கைகளுக்குள் கொண்டு வர இயலாது. பட்டியல், பழங்குடியினர் கல்வியிலும், சமூகத்திலும் மிகவும் நலிவுற்ற நிலையில், எளிதில் சுரண்டலுக்குள்ளாகும் நிலையில் இருக்கின்றனர். ஏன், நாட்டின் குடியரசுத் தலைவரே கோயிலுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது. தீண்டாமையை ஒழிக்கும் சட்டம் இருந்தாலும் சமூகத்தில் தீண்டாமை நிலவுகிறது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

இந்தக் காரணங்களால் அரசியலமைப்பு சாசனத்தின் 46-வது பிரிவு மிகவும் நலிவுற்ற நிலையில் இருக்கும் பட்டியல், பழங்குடி மக்களின் கல்வி, பொருளாதார நலன்களில் சிறப்பு கவனம் மேற்கொண்டு அவர்களை மேம்படுத்த வேண்டும். அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் அவர்களை பாதுகாக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு சட்டம் சமூக நீதி, சமத்துவத்தைப் பாதிக்கிறது; எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் நியாயமானதாகவும் இல்லை, ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இல்லை. அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமற்றதுதான்!" என திமுக தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடரும் போராட்டங்கள்:

இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு, அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் வழங்கப்பட்ட 27% இடஒதுக்கீட்டில் இன்றுவரை 12%-க்கும் மேல் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படவில்லை எனவும், பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. மேலும், 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருக்கிறது.