
இந்தச் சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் இமாலய வெற்றிக்குப் பிறகு, சட்டப்புத்தகத்தைத் தொட்டு வணங்கி, பிரதமராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார் மோடி. ஆனால் இப்போது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது மோடி அரசு.
இந்தச் சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?
‘இந்திய எல்லைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்குள் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சி இனத்தவர் ஆகியோர் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். இவர்கள் குடியேறி ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தால், இந்தியக் குடியுரிமை வழங்க இந்தச் சட்டத்திருத்த மசோதா வழிவகை செய்கிறது. அதேசமயம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியுள்ள இஸ்லாமியர் களுக்கு இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தாது’ என்பதுதான் இம்மசோதாவின் முக்கிய அம்சம்!

இம்மசோதா, இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதும் ஈழத்தமிழர்களைக் கண்டுகொள்ளாததும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இதற்கிடையில், வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் குடியேறியுள்ளவர்களுக்கு இம்மசோதா குடியுரிமை அளிப்பதால், ‘வங்கதேசத்தினரின் ஆதிக்கம் அதிகரித்துவிடும்’ என்ற அச்சவுணர்வில் இம்மாநிலங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
முதலில் அஸ்ஸாமில் ஆரம்பித்த போராட்டம் படிப்படியாக அதிகரித்து, அஸ்ஸாமையே முடக்கிப்போட்டது. மேற்கு வங்கத்திலும் போராட்டம் வெடித்து ரயில்களை எரிக்கும் அளவுக்குத் தீவிரமடைந்தது. டெல்லியில் இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய டெல்லி ஜமியா பல்கலைக்கழக மாணவர்களைக் காவல்துறை கடுமையாகத் தாக்கியதுடன், ‘சோதனை’ என்ற பெயரில் கல்லூரி விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தது. தமிழகத்தில் வசிக்கும் அஸ்ஸாம் இளைஞர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அருகே போராட்டம் நடத்தும் அளவுக்கு இந்தியாவெங்கும் கிளர்ச்சி வெடித்துள்ளது. ஆனால் பிரதமர் மோடியோ, ‘‘போராடுபவர்களின் உடைகளைப் பார்த்தாலே தெரியவில்லையா, அவர்கள் யார் என்று’’ எனப் பொறுப்பில்லாமல் பேசியிருக்கிறார்.

இந்திய அளவில் எந்தப் பிரச்னை நடந்தாலும் அதற்கான தீவிர எதிர்வினையை முன்வைப்பது தமிழகத்தின் தனிச்சிறப்பு. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போர்க்குரலைத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதிவு செய்திருந்தார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “மத அடிப்படையில், ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்காகத்தான் இந்த மசோதாவே நிறைவேற்றப்படுகிறது. அப்படியென்றால், பாகிஸ்தான் அஹமதியா முஸ்லிம்கள், மியான்மர் ரோஹிங்கியாக்கள், இலங்கையில் சிங்கள பௌத்தப் பேரினவாதத்தால் பாதிக்கப்படுகிற தமிழர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும் வகையில்தானே இந்தச் சட்டத்திருத்தம் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லையே! அண்டை நாடுகளில் வாழ்ந்துவரும் இந்து மக்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கும் இவர்கள் ‘இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் குடியுரிமை கிடையாது’ என்று திட்டமிட்டு ஒதுக்குகிறார்கள். இதன்மூலம் உள்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நேரிடையான அச்சுறுத்தலைக் கொடுக்கிறார்கள்’’ என்கிறார் வேதனையோடு.
நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்தவர்களை அன்பொழுக அழைத்து விருந்துகொடுக்கும் மத்திய ஆட்சியாளர்கள், இங்கே அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவதுபற்றி யோசித்துப் பார்ப்பதற்குக்கூடத் தயாராக இல்லை. மதச்சார்பின்மையை வலியுறுத்துகின்ற, இந்திய ஜனநாயகத்துக்கும் ஒற்றுமைக்கும் உலைவைக்கும் விஷ விதைகளைத் தொடர்ந்து விதைத்துக்கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு’’ என்று எச்சரிக்கிறார்.
‘‘இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களை மட்டுமல்ல... கிறிஸ்தவர்களையும் குடியுரிமைச் சட்டத்திலிருந்து விலக்குவதுதான் பா.ஜ.க-வின் திட்டம். ஆனால்...’’ என்று புதியதொரு கோணத்தில் இப்பிரச்னையை அணுகுகிறார் தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன்.
“பா.ஜ.க-வின் 2019-ம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில், ‘இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைத் தவிர்த்து ஏனைய மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும்’ என்றுதான் அறிவித்திருந்தார்கள். ஆனால், இப்போது கிறிஸ்தவர்களை உள்ளே கொண்டுவந்து, இஸ்லாமியர்களை மட்டும் தனிமைப்படுத்திவிட்டார்கள். காரணம், ‘கிறிஸ்தவர்களுக்கும் குடியுரிமை கிடையாது’ என்று அறிவித்திருந்தால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கடும் எதிர்ப்பை இந்தியா சந்திக்க நேரிட்டிருக்கும்.

இலங்கையில் பௌத்த மதத்தினரின் ஆதிக்கத்தால் இந்தியாவுக்குள் அகதிகளாகத் தஞ்சமடைந்து, 35 வருடங்களுக்கும் மேலாக அகதிகளாகவே வாழ்ந்துவரும் இந்து தமிழ் மக்களின் குடியுரிமையைப் பற்றி இந்தச் சட்டத்திருத்தம் கண்டுகொள்ளவே இல்லையே, ஏன்? இந்தி பேசும் இந்துக்கள் உங்களுக்கு வேண்டும். தமிழ் பேசுகிற இந்துக்கள் வேண்டாமா?’’ என்ற ஆவேசக் கேள்வியை எழுப்புகிறார்.
இந்நிலையில், ஈழத் தமிழர்களுக்கான குடியுரிமை பற்றி எந்தவிதத் தீர்வையும் முன்வைக்காத இம்ம சோதாவை அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்திருப்பது தமிழக எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்துக்கு ள்ளாகி வருகிறது. அரசியல் ரீதியான இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசுகிற அ.தி.மு.க மேலவை உறுப்பினரான நவநீத கிருஷ்ணன், “ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சிறப்புச் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை ராஜ்யசபாவில் வலியுறுத்திய பிறகுதான் நாங்கள் இம்மசோதாவையே ஆதரித்திருக்கிறோம்.
அடுத்ததாக, ‘முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அ.தி.மு.க’ என்பதுபோல், எதிர்க்கட்சிகள் விஷமப் பிரசாரம் செய்கின்றன. 1955-ல் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின்படி இப்போதும் தகுதியுள்ள இஸ்லாமியர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டே வருகிறது. எனவே, இந்திய முஸ்லிம்களுக்கு எப்போதுமே அ.தி.மு.க பாதுகாப்பாக விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை’’ என்கிறார் உறுதியாக.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, “ ‘இந்தியா வல்லரசாகிறது’ என்று சொல்லிக்கொள்ளும் நாம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பொருளாதாரம், பெண்கள் பாதுகாப்பு என அனைத்து வகையிலும் முன்னேறியிருக்கும் மேற்கத்திய நாடுகளோடுதான் போட்டி போடவேண்டும். ஆனால், அதற்கான திறன் இவர்களிடம் இல்லை. எனவே, எல்லாவகையிலும் பின்தங்கிப்போன பாகிஸ்தானோடு இந்தியாவை ஒப்பிட்டுக்கொண்டு மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்தையே பின்னோக்கி இழுக்கிறார்கள்” என்கிறார் அழுத்தமாக.
எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசியபோது, “1955-ல் கொண்டுவரப்பட்ட ‘குடியுரிமைச் சட்ட’த்தில் குறிப்பிட்ட சில ஷரத்துகளில் மட்டும்தான் இப்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டு இஸ்லாமியர்களை இந்த அரசு புறம் தள்ளுவதுபோல் ஒரு மாயையை எதிர்க்கட்சியினர் உருவாக்கிவருகிறார்கள். இப்போதும்கூட வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய கிறிஸ்தவரோ அல்லது பாகிஸ் தானிலிருந்து வரக்கூடிய இஸ்லாமியரோ 1955-ம் ஆண்டுக் குடியுரிமைச் சட்டப்படி இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் உரிமை அப்படியேதான் தொடர்கிறது என்பதை முதலில் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாம் அல்லாத மதங்களைச் சார்ந்த அகதிகளை, இந்தியக் குடிமக்களாக அங்கீகரிப்பதில் 11 ஆண்டுக்காலம் என்றிருந்த இடைவெளியை 5 ஆண்டுகளாகக் குறைத்துச் சட்டத்திருத்தம் செய்திருப்பதுதான் இந்தச் சட்டம்.
பாகிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ள அஹமதியா முஸ்லிம்கள் எனப்படுபவர்கள் முஸ்லிம்களிலேயே ஒரு பகுதியினர். இவர்கள் ஏற்கெனவே இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர்கள். ஆனாலும் அங்கே உரிய அங்கீகாரம் அளிக்கப்படாமல் வசித்துக்கொண்டிருப்பவர்கள். 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத் திலேயே, ‘இங்கிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளவர்களுக்கு அங்கே உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்பட்டால், மறுபடியும் இந்தியாவுக்கு வந்துவிடலாம்’ என்று கூறி இரண்டு ஆண்டுக்காலம் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ‘எங்களுக்கு மதம்தான் முக்கியம், நாங்கள் இந்தியா திரும்பமாட்டோம்’ என்று கூறிப் பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டவர்கள்தான் இந்த அஹமதியா முஸ்லிம்கள். எனவே, இந்தச் சட்டத்திருத்த மசோதா அவர்களுக்குப் பொருந்தாது.
அடுத்ததாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மர் நாட்டிலிருந்து வந்தவர்கள். ஆனால், இப்போதைய சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மியான்மர் இடம்பெறவில்லை. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சட்டவிரோதமாக இங்கே வந்து குடியேறியிருப்பவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதென்பது, அவர்கள் வந்த பிரச்னையின் பின்னணி மற்றும் அந்தந்த நாடுகளோடு இந்தியாவுக்கு உள்ள வெளியுறவு எனப் பல்வேறு விஷயங்களையும் பொறுத்ததாக இருக்கிறது.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், ஏற்கெனவே சிறிமாவோ பண்டாரநாயகா ஆட்சிக்காலத்திலேயே, ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. அதன்படி இலங்கையிலிருந்து இந்தியா திரும்பியவர்களுக்கு உரிய குடியுரிமை அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதன்பிறகு கடந்தகாலங்களில் அங்கே நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் மறுபடியும் அவர்களது தாய்நாட்டுக்கே சென்று வாழவேண்டும் என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது. ஏனெனில், பாகிஸ்தானிலோ அல்லது வங்க தேசத்திலோ உள்ள சிறுபான்மை மக்கள் என்பவர்கள் தங்களுடைய தனி அடையாளத்துக்காகவோ அல்லது தனி நாடு கோரியோ அங்கே போராடவில்லை.

தாங்கள் சார்ந்திருந்த மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையையும் அடையாளத்தையும் மட்டுமே அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இலங்கைப் பிரச்னை என்பது அப்படிப்பட்டதல்ல. அங்கு தனி நாடு கோரிக்கை இருந்தது. அதற்கென்று அரசியல் வாய்ப்பும் அங்கிருந்தது. எனவே, அந்த மக்களை மீண்டும் இலங்கையிலேயே குடியமர்த்தி சம உரிமையோடு அவர்களை அங்கே வாழவைக்க வேண்டும்’ என்றே மத்திய அரசு நினைக்கிறது. அதற்கான முயற்சியாகத்தான் இலங்கையிலே ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை இந்தியா சார்பில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அவர்கள் தொழில் செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இங்கிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிவிட்டால், மீண்டும் அவர்கள் இலங்கைக்குச் செல்லமுடியாது. இலங்கையில் தமிழர்களுக்குண்டான உரிமைகள் அனைத்தும் கைவிட்டுப்போய், முழு இலங்கையும் சிங்களவரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே போய்விடும். எனவே இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தாது’’ என்கிறார்.
‘பிரித்தாளும் சூழ்ச்சி’ என்பது பிரிட்டிஷ்காரர்கள் கடைப்பிடித்தது. இப்போது பி.ஜே.பி அரசு கடைப்பிடிக்கிறது. ‘முஸ்லிம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும்தானே பிரச்னை’ என்று அமைதியாக இருந்துவிட்டால், அடையாளங்களைப் பயன்படுத்திப் புறக்கணிக்கும், வேட்டையாடும் அபாயம் நாளை நம்மையும் நெருங்கக்கூடும். இதற்கெதிரான குரல்களை ஓங்கி ஒலிப்பது ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களின் கடமை.