Published:Updated:

என்னதான் ஆச்சு எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் புகைப்படங்களுக்கு?! குபீர் சிக்கலில் செய்தித்துறை

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பல தேறவில்லை. எடப்பாடி ஆல்பம் தயாரிப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்த்தபோது அதிகாரிகளுக்குப் பெரிய அதிர்ச்சி!

Edappadi palaniswamy in ForeignTrip
Edappadi palaniswamy in ForeignTrip

வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆகஸ்ட் இறுதியில் ஆரம்பித்து செப்டம்பர் 10-ம் தேதி வரை 14 நாள்கள் சுற்றுப்பயணம் செய்தார். சுற்றுப்பயணத்தின் போது அங்கே உள்ள தொழில் அதிபர்களைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க வர வேண்டும் என அழைப்பு விடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

Edappadi Palaniswamy
Edappadi Palaniswamy

வெளிநாட்டுப் பயணம் முடிந்து திரும்பிய எடப்பாடி பழனிசாமி, "41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, சுமார் 8,835 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். இதனால் 35,520 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்" எனப் பெருமைப்பட்டார். "ஏற்கெனவே உலக முதலீட்டாளர் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சொன்னபடி தமிழகத்துக்குப் போதிய முதலீடு வரவில்லை. ரூ.14 ஆயிரம் கோடிதான் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது'' எனச் சொன்னார் ஸ்டாலின்.

இப்படி அ.தி.மு.க., தி.மு.க. இடையே அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், எடப்பாடியின் வெளிநாட்டுப் பயணத்தை மேலும் மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது தமிழக அரசின் செய்தித் துறை. எடப்பாடியின் 14 நாள்கள் பயணத்தில் எடுக்கப்பட்ட படங்களை வைத்து `முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டுப் பயணம்' என்ற தலைப்பில் போட்டோ ஆல்பம் ஒன்றைத் தயாரிக்க முடிவு செய்தது செய்தித் துறை.

Shankar with Jayalalithaa
Shankar with Jayalalithaa

எடப்பாடி ஆல்பம் தயாரிப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த போது அதிகாரிகளுக்குப் பெரிய அதிர்ச்சி. பல படங்கள் தெளிவில்லாமல் இருந்தன. தலைமைச் செயலகத்தின் அரசு போட்டோகிராபர் செக்‌ஷனுக்கு நேரில் வந்து புகைப்படங்களை செலக்ட் செய்தார் செய்தித் துறை இயக்குநர் பொ.சங்கர். அப்போதுதான் ஆல்பத்துக்குப் படங்கள் தேறாமல் திணறிப் போயிருக்கிறார்கள்.

இந்த விஷயம் பற்றி நமது கவனத்துக்குக் கொண்டு வந்த செய்தித் துறை வட்டாரத்தினர் அதற்கான காரணத்தையும் சொன்னார்கள். "முதல்வர் உள்நாட்டில் இருந்தாலோ அல்லது வெளிநாடு சென்றாலோ அவரின் எந்த ஒரு பயணத்திலும் நிகழ்ச்சியிலும் இருக்க வேண்டிய அதிகாரிகள் என்கிற ஒரு பட்டியல் உண்டு. அதில் அரசு செய்தித் துறையின் வீடியோகிராபரும் போட்டோகிராபரும் அடக்கம். எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தில் அவருடன் அரசு செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். ஆனால், அரசு போட்டோகிராபர் அழைத்துச் செல்லப்படவில்லை.

Ezhil with Jayalalithaa
Ezhil with Jayalalithaa

`அரசு போட்டோகிராபர் வேண்டாம். நானே படங்களை எடுத்து அனுப்புகிறேன்' எனச் சொன்னார் முதல்வர் அலுவலகத்தின் சிறப்புப் பணி அதிகாரியான எழில் என்கிற எழிலழகன். முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு விசிட்டின் போது தொழிலதிபர்களையும் அதிகாரிகளையும் சந்தித்த போதும் நிறுவனங்களைப் பார்வையிட்ட போதும் அத்தனை விஷயங்களையும் எழில்தான் போட்டோ எடுத்திருக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும்போதுதான் அவை தெளிவில்லாமல் இருந்தது தெரியவந்திருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி ஆல்பம் போட முடியாது" என்கின்றனர்.

செய்தித் துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தவர் எழில். அவரின் பதவிக் காலம் முடிந்த பிறகும் ஜெயலலிதாவால் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டர். எடப்பாடி ஆட்சிக்கு வந்த பிறகு அவரின் தீவிர ஆதரவாளராக மாறினார். தேர்தலில் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்பட முடியாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதால் செய்தித் துறையின் கூடுதல் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பிரசாரத்தில் பங்கேற்றார். அது தொடர்பான செய்திகளை ஊடகங்களுக்கு எழில் அனுப்பிக் கொண்டிருந்தார்.

Edappadi Palaniswamy
Edappadi Palaniswamy

எழில் பெரிய புரொஜக்‌ஷன் கொடுத்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஆனாலும் முதல்வர் அலுவலகத்தில் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி முதல்வரின் சிறப்புப் பணி அதிகாரி என்கிற அரசு பதவியைப் பெற்றார். அந்தப் பதவியில்தான் எடப்பாடியுடன் அவர் வெளிநாடு சென்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி தேர்தல் பிரசாரப் படங்களை எல்லாம் வாட்ஸ் அப் உள்ளிட சமூக வலைதளங்களில் எழில்தான் பரப்பினார். அதனால், `வெளிநாட்டுப் பயணத்தை தானே புகைப்படங்களை எடுத்து அனுப்புகிறேன். செய்தித் துறையின் போட்டோகிராபர் வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டார். இதனால் அரசு போட்டோகிராபர் வெளிநாடு பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. அரசு போட்டோகிராபர்கள் எடுக்கும் முதல்வரின் படங்கள்தான் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தப் படங்களைப் பிரசுரம் செய்யும் அளவுக்கு அதன் ரெஸ்யூல்சன் அதிகமாக இருக்கும். எழில் எடுத்த படங்கள் ரெஸ்யூல்சன் இருந்தும் படங்கள் தெளிவில்லாமல் இருந்தன. அதற்குக் காரணம் புரபோஷனல் போட்டோகிராபர் இல்லாததுதான்.

முதல்வரிடம் தனக்கு நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக போட்டோகிராபருக்குத் தடை போட்டார் எழில். செய்தித் துறையிலிருந்து அவர் விலகி முதல்வர் அலுவலகத்தில் இருந்தாலும் செய்தித் துறைக்குள் அவர் ஆளுமை செலுத்திக் கொண்டிருந்தார். இதனால் அந்தத் துறையின் இயக்குநரான ஐ.ஏ.எஸ் அதிகாரி சங்கரால்கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.'' என்றார்கள்.

எடப்பாடி வெளிநாட்டுப் பயணத்தில் வீடியோகிராபர் பாபு மட்டும் சென்றிருக்கிறார். அதை வைத்து குறும்படம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. படங்களைத் தேற்றி ஆல்பம் போடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது செய்தித் துறை.