Election bannerElection banner
Published:Updated:

`மோடி, அண்ணாமலைக்கு தேர்தல் ஆணையம் ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை?' - ஜோதிமணி கேள்வி

ஜோதிமணி
ஜோதிமணி

'' 'தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை தூக்கிப்போட்டு மிதிப்பேன், பல்லை உடைப்பேன்' என்றெல்லாம் வன்முறையைத் தூண்டுகிறவிதமாகப் பேசிய அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பக்கூட தேர்தல் ஆணையம் பயப்படுவது ஏன்?'' என ஆவேசமாகக் கேட்கிறார் ஜோதிமணி.

தமிழ்நாடு முழுக்க ஒரேகட்டமாகத் தேர்தலை நடத்தி முடித்த திருப்தியில் இருக்கிறது தேர்தல் ஆணையம்! ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகக் கேள்விகளை எழுப்பி, கொந்தளித்துவருகிறார் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான ஜோதிமணி!

தேர்தல் ஆணையத்தின் மீதான அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு நேரில் சந்தித்தேன்...

``காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் தேர்தல், கமிஷனின் செயல்பாடுகளில் பல்வேறு அதிருப்திகள் நிலவின அப்படித்தானே?''

``உண்மைதான்... பேட்டரி தீர்ந்துபோவது, ஒரு சின்னத்தை அழுத்தினால் வேறு சின்னத்துக்கு வாக்கு விழுவது போன்றவை எங்காவது நடைபெறும் இயல்பான இயந்திரக் கோளாறு. இது போன்ற பிரச்னைகள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் எழுந்தன. ஆனால், அண்மைக்காலமாக வாக்கு இயந்திரத்தில் ஏற்படுகிற பிரச்னை என்று ஒரேவிதமான புகார்கள் வருகின்றன. அதாவது 2014-க்குப் பிறகு, 'தாமரை சின்னத்துக்கு மட்டுமே வாக்கு விழுகிறது' என்பதுதான் இயந்திரக் கோளாறு புகார்களாக வருகின்றன. இது ஏன்?

வாக்கு இயந்திரங்கள்
வாக்கு இயந்திரங்கள்

அடுத்து வாக்கு இயந்திரத்தோடு வி.வி பேட் இயந்திரத்தையும் வைத்திருக்கிறார்கள். ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது வி.வி.பேட் இயந்திரத்தில் பதிவாகியுள்ளவற்றையும் எண்ணினால்தானே வாக்குப்பதிவு நேர்மையாக நடந்திருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். ஆனால், வி.வி பேட் இயந்திரத்தை வாக்கு எண்ணிக்கையின்போது பயன்படுத்துவதே இல்லை என்றால், எதற்காக அந்த இயந்திரத்தை வாக்குப்பதிவின்போது மட்டும் வைத்திருக்க வேண்டும்? எனவே, வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் வி.வி பேட் இயந்திரத்தில் பதிவாகியுள்ளவற்றையும் வாக்கு எண்ணிக்கையின்போது பயன்படுத்தி உறுதிசெய்துகொள்வதை நடைமுறையாக்க வேண்டும்.''

``வாக்கு இயந்திரக் கோளாறுகளைக் காரணமாகவைத்து, 'தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வின் கைப்பாவையாகிவிட்டது' என்று எப்படிச் சொல்கிறீர்கள்?''

''வாக்கு இயந்திரப் பிரச்னைகள் மட்டுமல்ல... பொதுவாக கட்சிகளின் பூத் ஏஜென்ட்டுகளுக்கு (வாக்குச்சாவடி முகவர்) அந்தக் குறிப்பிட்ட பூத்திலேயே வாக்குரிமை இருக்க வேண்டும் என்பதுதான் சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுக்கால தேர்தல் வரலாறு. ஆனால், மேற்குவங்கத் தேர்தலில், முதன்முறையாக 'மாநிலத்திலுள்ள யாரொருவரும் எந்த பூத்திலும் ஏஜென்ட்டாக இருக்கலாம்' என்று விதி திருத்தப்படுகிறது. காரணம், அங்கே மாநிலம் முழுமையிலும் பா.ஜ.க-வினருக்கு பல பகுதிகளில் பூத் ஏஜென்ட்டே கிடையாது என்பதால்தான் இந்தத் திருத்தம். இதற்கான ஆடியோ ஆதாரத்தைக்கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.

அண்ணாமலை - நரேந்திர மோடி
அண்ணாமலை - நரேந்திர மோடி

அதேபோல், தமிழ்நாட்டில் ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்புகிறது. ஆனால், `தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியைத் தூக்கிப்போட்டு மிதிப்பேன், பல்லை உடைப்பேன்' என்றெல்லாம் வன்முறையைத் தூண்டுகிறவிதமாகப் பேசிய அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பக்கூட தேர்தல் ஆணையம் பயப்படுவது ஏன்? மேற்கு வங்கத்தில் மதரீதியாகப் பேசியதாகக் கூறி மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய தடைவிதிக்கும் தேர்தல் ஆணையம், உ.பி தேர்தலின்போது சுடுகாட்டைக்கூட மதரீதியாக அரசியல் செய்து பேசிய பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்தையெல்லாம் ஏன் நிறுத்திவைக்கவில்லை?''

`கொரோனாவை மோடி கட்டுப்படுத்தத் தவறினார்!’ - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு எந்தளவுக்கு சரி?

``அண்ணாமலையின் பேச்சிலுள்ள வன்முறையைக் கண்டிக்கிற ஜோதிமணி, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது சர்ச்சைக்குரிய பேச்சுகளைக் கண்டிப்பதில்லையே ஏன்?''

``ஆ.ராசா, தவறான அர்த்தத்தில் தான் பேசவில்லை என்று விளக்கம் கொடுத்துவிட்டார். ஆனால், அவரது விளக்கம் வெளிவருவதற்கு முன்பே, நான், கனிமொழி உள்ளிட்டோர் `கண்ணியம் தவறி யார் பேசினாலும் தவறு' என்று கண்டனம் தெரிவித்துவிட்டோம். அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் குறித்து உதயநிதி ஸ்டாலின் தவறாகப் பேசிவிட்டதாக இப்போது நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். உதயநிதி என்ன பேசினார் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை.

எங்கள் கட்சியிலேயேகூட பெண்கள் குறித்து யாரேனும் தவறாகப் பேசியிருந்தால், ஒரு பெண் அரசியல்வாதியாக நான் கண்டித்திருக்கிறேன். அதேசமயம், சமூக அநீதியான இது போன்ற சொல்லாடல்களைப் பெண் அரசியல்வாதிகள்தான் கண்டித்துப் பேச வேண்டும் என்றில்லை. சமூக அநீதிக்கு எதிரான அனைவருமே கட்சிப்பாகுபாடு இன்றி கண்டிக்க வேண்டும்!''

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

``காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற 2009 மக்களவைத் தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும், பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதுதானே?''

``அப்படிச் சொல்ல முடியாது. ப.சிதம்பரம் வெற்றி குறித்தான வழக்கில் எழுப்பப்பட்ட கேள்விகள் யூகத்தின் அடிப்படையிலானவை. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் தொகுதியிலேயேகூட ஒரு மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைத்துவிட்டனர். பின்னர் வாக்கு எண்ணிக்கை முடிவில் இன்றைய அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆக, வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைத்தது ஏன் என்ற யூகத்துக்கும் தகுந்த ஆதாரங்களைக் கொடுத்தாக வேண்டும்! நீங்கள் சொல்வதுபோல், காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயேகூட ஏதேனும் தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்றுதான் நான் சொல்வேன்!''

ஆந்திரா, தெலங்கானாவுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன்! - தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்வதென்ன?

``காங்கிரஸ் கட்சியை மீண்டும் பழையநிலைக்குக் கொண்டுவருவதில் ராகுல் காந்திக்கே நம்பிக்கை இல்லாததால்தான் தலைவர் பொறுப்பேற்கத் தயங்குகிறாரா?''

``காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு ராகுல் காந்தி விரைவில் வருவார். ஏனெனில், இதுதான் கட்சித் தொண்டர்களின் 100 % விருப்பம். தொண்டர்களின் விருப்பத்துக்கு விரோதமாக காந்தி குடும்பத்தினரால் நடந்துகொள்ள முடியாது. குறிப்பாக ராகுல் காந்தி, தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக ஒருபோதும் நடந்துகொள்ள மாட்டார். எனவே அதுதான் நடக்கும்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

இப்போது அவர் தலைவர் பொறுப்பில் இல்லையென்றாலும்கூட இந்தத் தேர்தல்களிலெல்லாம் காங்கிரஸ் கட்சித் தலைவராக பிரசாரங்களில் சுற்றிச் சுழன்று பணியாற்றுகிறவர் ராகுல்தானே! இந்தியாவிலேயே காந்தி குடும்பம் மட்டும்தான் காங்கிரஸ் கட்சிக் கொள்கைக்காக உறுதிப்பாட்டோடு செயல்பட முடியும்; ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக உரத்த குரல் எழுப்ப முடியும். அதனால்தான் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல், களத்தில் சித்தாந்தரீதியாக எதிர்த்துப் போராடும் தலைவராக வலம்வருகிறார் ராகுல்.

காங்கிரஸ் கட்சியிலுள்ள சில வருத்தங்களை நான் வெளிப்படையாக வெளியில் சொல்லிவிடுகிறேன். ஆனால், ராகுல் காந்தி அப்படிச் சொல்வதில்லை. எல்லாக் கட்சிகளிலுமே அதன் தலைவர்களுக்குச் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் தாண்டித்தான் ஒரு தலைவர் உருவெடுக்கிறார். விரைவில் தலைவராக ராகுல் வருவார்!''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு