Election bannerElection banner
Published:Updated:

ப்ளஸ் டூ தேர்வு நடத்துவதில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம்... என்ன காரணம்?

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு
ப்ளஸ் டூ பொதுத்தேர்வு

பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்வு நடத்துவது குறித்து விமர்சனங்களும், தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கையும் எழுந்துவரும் சூழலில் ப்ளஸ் டூ தேர்வு நடத்துவதில் அரசு ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறது?

தீவிர கொரோனா தொற்றுப் பரவல்களுக்கு இடையேயும் தமிழக அரசு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், தற்போது ஏப்ரல் 16-ம் தேதி செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. கல்லூரிகள், 10, 11-ம் வகுப்புகளுக்குத் தேர்வுகள் நடத்துவதிலிருந்து விலக்கு அளித்த தமிழக அரசு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை நடத்துவதில் மட்டும் இவ்வளவு ஆர்வம் காட்டுவது தனியார் பள்ளிகளின் வருமானத்துக்குத்தான் வழிவகுக்கும் என்று கல்வியாளர்கள் விமர்சித்துவருகிறார்கள்.

பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்பு

பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பிலிருந்தும் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்; குறைந்தபட்சம் தேர்வையாவது தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Vikatan

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, `பரீக்‌ஷா பே சார்ச்சா' என்ற நிகழ்ச்சி மூலம் 2018-ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடையே கலந்துரையாடிவருகிறார். கடந்த வாரம் நடந்த கலந்துரையாடலில் ``தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அதைக் கண்டு பதற்றப்படவோ, பயப்படவோ தேவையில்லை. அதேபோல, பெற்றோர்களும் ஆசிரியர்களும் தேர்வு சமயத்தில் மாணவர்களுக்கு பயம் காட்டாமல் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். தேர்வுகள் முக்கியமானவைதான். ஆனால், அது உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப்போகும் விஷயம் அல்ல. ஒரு தேர்வுடன் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடப்போவதில்லை. ஆகவே, மனதை லேசாக வைத்துக்கொண்டு தேர்வுக்குத் தயாராகுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

மோடி
மோடி

`பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்வு நடத்துவது குறித்து விமர்சனங்களும், தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கையும் எழுந்துவரும் சூழலில் தேர்வு நடத்துவதில் அரசு ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறது?’ என்ற கேள்வியை முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடன் முன்வைத்தோம்.

``பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு என அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி என்பதை அரசு முன்னரே செயல்படுத்திவிட்டது. இதனால், கொரோனா தொற்றிலிருந்து மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டனர். இது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால், இதேநிலை தொடர்ந்தால், எதிர்காலக் கல்வியின் தரம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது. ஆகவே, தேர்தல் நடைமுறைகள் அமலிலிருக்கும் தற்போதைய காலகட்டதில் பொதுமக்கள், கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்கள், அதிகாரிகள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டு, கவனமுடன் ஆராய்ந்து ஒரு தெளிவான முடிவை எடுப்போம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்தால் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் எதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது... தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்துவருகிறோம். ஏற்கெனவே இந்தத் துறையின் அமைச்சராக இருந்ததால் முதல்வர் பழனிசாமியும் என்னை அழைத்து ``ப்ளஸ் டூ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஊரில் எல்லோரும் கேக்குறாங்களே... அது தொடர்பாக இயக்குநரிடம் பேசியிருக்கேன்” எனக் கூறினார்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

நானும் துறை இயக்குநரிடம் பேசினேன். ``அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்காகக் காத்திருக்கிறோம். ஏற்கெனவே அரசு அறிவித்திருப்பதால் அதை முன்னிட்டு சில வேலைகளைச் செய்துவருகிறோம்” என்றார். விரைவில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி ப்ளஸ் டூ தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பை வெளியிடுவார்” என பதிலளித்தார்.

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் சூழலில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தேவையா... தேவையெனில் அதை எப்படி நடத்தலாம் என்பவை உள்ளிட்ட பல கேள்விகளுடன் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். ``மேல்நிலைப் பள்ளிக்கல்வி என்பது கல்லூரிக்குச் செல்வதற்கான ஒரு வாய்ப்பு. இந்த மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரியில் மாணவர்களுக்குத் தாங்கள் விரும்பும் படிப்பை எடுத்துப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இது நோய்த் தொற்றுக் காலம். ஓராண்டு முழுக்க வகுப்பு நடக்கவில்லை. ஜனவரி 19-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று அரசு அறிவித்தது. தமிழ்நாடு அரசிடம் திட்டவட்டமான, தெளிவான பார்வையோ, நடைமுறையோ இல்லாததால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. தேர்வு வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஏனென்றால் இந்த மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரியில் சேர முடியும். நாங்கள் சொல்வதெல்லாம் குறைந்தது ஓர் ஐந்து மாதங்களாவது வகுப்புகளை நடத்திவிட்டு, நடத்திய பாடங்கள் வரை தேர்வுகளை நடத்துங்கள் என்றுதான் சொல்கிறோம். ஜூனில் தேர்வு நடத்தி ஜூலையில் முடிவுகளை அறிவிக்கலாம்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

வீட்டில் வசதி இல்லாதவர்கள், வசதி இருந்து ஆன்லைனில், பிரைவேட் டியூஷன் போன மாணவர்கள் எனப் பல வழிகளில் படித்த குழந்தைகளுக்கு ஒரே கேள்வித்தாள்தான் தரப் போகிறீர்கள் என்றால், அது எப்படி சம வாய்ப்பளிக்கும் தேர்வாக இருக்கும்? மருத்துவ மாணவர்களுக்கு ப்ளஸ் டூ தகுதி என்பதே இல்லை என்றாகிவிட்டதால், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகள் ரத்து! - முதல்வர் உத்தரவு  #NowAtVikatan

நோய்த் தொற்று… அதனால் உயிரிழப்பு… அதனால் ஊரடங்கு, அதனால் ஒராண்டு முழுவதும் கல்வி கற்க முடியவில்லை என்ற அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கும்போது அதற்கு ஏற்றாற்போலத்தான் முடிவுகள் எடுக்க வேண்டும். இதை அத்தனையையும் கருத்தில்கொண்டு, துறைசார் வல்லுநர்கள், முதுகலை ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என அனைவரின் கருத்துகளையும் கேட்டுத்தானே முடிவுகளை எடுக்க வேண்டும்... தேர்வு நடத்த வேண்டும் என்ற பிடிவாதம் எங்கிருந்து வந்தது... தேர்வு மட்டுமே ஒரு மாணவரின் அறிவை மதிப்பிடச் சரியான கருவியா?

அரசுப் பள்ளிகள்
அரசுப் பள்ளிகள்

தேர்வை நடத்த வேண்டும் என்று அரசு முடிவு செய்துவிட்டால், எல்லோருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு செயல்படுத்த வேண்டும். கொரோனாவுக்கு பயந்து குழந்தைகள் தேர்வுக்கு வரவில்லையென்றால் அரசு என்ன செய்யும்... இது குழந்தைகள் தொடர்பானது. இன்னும் கொஞ்சம் நிதானமாகவே தேர்வு நடத்துவதில் முடிவெடுக்கலாம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு