Published:Updated:

மோடியை சமூகவலைதளத்தில் பின்தொடர்வதை நிறுத்திய வெள்ளை மாளிகை! - காரணம் என்ன?

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகையின் ட்விட்டர் பக்கம், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உட்பட இந்தியத் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் சமீபத்திய செயல் இந்தியாவில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவும் அரசியல்ரீதியாக பல விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்களையும், உயிரிழந்தவர்களையும் கொண்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. இதனால், அமெரிக்க அரசாங்கம், கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்து உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயினை இந்தியா ஏற்றுமதி செய்யுமாறு, இந்தியப் பிரதமர் மோடியைக் கேட்டுக் கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.

Corona
Corona

அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கையை ஏற்று மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்சிகுளோரோகுயினை ஏற்றுமதி செய்வதாகக் கூறி, அமெரிக்கா, இலங்கை, பிரேசில் உட்பட முப்பது நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது.

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகை பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைப் பின்தொடர ஆரம்பித்துள்ளதோடு, இருவரும் தொலைபேசியில் உரையாடியது இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்பட்டது.

இதனிடையே, இந்த வார தொடக்கத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உட்பட இந்தியத் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளைப் பின்தொடர்வதை வெள்ளை மாளிகை நிறுத்தியுள்ளது. தற்போது, அதிபர் ட்ரம்ப்புக்கு தொடர்புடைய 13 ட்விட்டர் கணக்குகளை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறது.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் ட்விட்டர் பக்கம் பின்தொடரும் ஒரே உலகத் தலைவர் பிரதமர் மோடி எனப் பேசப்பட்டது. இந்த நிலையில், ட்விட்டர் கணக்கைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையின் இந்த செயலுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``இந்தியாவின் அரசியல் தலைவர்களை வெள்ளை மாளிகை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளதைக் கண்டு திகைத்துப் போகிறேன். வெள்ளை மாளிகையின் இந்தச் செயலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Facebook
Facebook
Image Credit: Freepik

அதிபர் ட்ரம்ப் பயணம் மேற்கொள்ளும் உலக நாடுகளின் தலைவர்களை ட்விட்டரில் பின்தொடர்வது, வெள்ளை மாளிகையின் வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு பின்தொடரும்போது, அதிபர் பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் தலைவர்கள் அவரின் வருகை குறித்தான பதிவுகளையும் பேசப்படும் முக்கிய விவகாரங்கள் மற்றும் ஒப்பந்தமாகும் திட்டங்கள் குறித்தும் பதிவிடும்போது, அவற்றை மறுபதிவு செய்ய எளிமையாக இருக்கும் என்பதற்காகவே இவ்வாறு பின்தொடரப்படுகிறது.

கேரளாவிலேயே மிகப்பெரிய பங்களாவைக் கட்டிய தொழிலதிபர்! - துபாயில் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

இந்த நிலையில், ``அமெரிக்க அதிபரின் இந்தியப் பயணம் நிறைவடைந்து பல நாள்கள் ஆகிவிட்டதாலேயே, இந்தியத் தலைவர்களின் கணக்குகளைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளோம்'' என, தனது செயலுக்கு வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளதாக, மத்திய அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு