Published:Updated:

ஜின்பிங் தங்குவதற்கு ஐ.டி.சி ஹோட்டலைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

மாமல்லபுரத்தில் இன்று இரவு பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சென்னையில் ஜின்பிங்
சென்னையில் ஜின்பிங்

சீன அதிபர் ஜின்பிங் தமிழகம் வந்துள்ளார். இரு நாள்கள் சென்னையில் அவர் தங்கியிருக்கிறார். பிரதமர் மோடி கோவளத்தில் தாஜ் ஹோட்டலில் தங்கியிருக்க, ஜின்பிங், கிண்டி ஐ.டி.சி சோழா கிராண்ட் ஹோட்டலில் உள்ளார். சென்னையில் உள்ள 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல்களில் சோழாவும் ஒன்று. இங்கிருந்து, மாமல்லபுரம் 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மாமல்லபுரத்துக்குச் சாலை மார்க்கமாகவே சீன அதிபர் அழைத்துச் செல்லப்படுகிறார். உலகில் அதிக பாதுகாப்பு கொண்ட தலைவர்களுள் ஜின்பிங்கும் ஒருவர். அப்படியிருக்கையில், சாலை மார்க்கமாக அழைத்துச் செல்லப்படுவது ஏன்... என்கிற கேள்வியும் எழுகிறது அல்லவா? சீன அதிபருக்குப் பெரும்பாலும் கார் பயணம் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜின்பிங் சாலைப் பயணம்
ஜின்பிங் சாலைப் பயணம்

பிற நாடுகளுக்குச் செல்கையில், அந்த நாட்டின் உண்மையான வளர்ச்சியை காரில் பயணிக்கும் போதுதான் அறிந்துகொள்ள முடியும் என்று நினைப்பாராம். அதனால், முடிந்தவரை காரில் செல்ல முயல்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சோழா ஹோட்டலில் ஜின்பிங் தங்கவைக்கப்பட இன்னொரு காரணம் இருக்கிறதாம். சீன அதிபர் சென்னை வருகிறார் என்கிற தகவல் உறுதியானதும், சீன அதிகாரிகள் சென்னையில் அவர் தங்குவதற்கான நட்சத்திர ஹோட்டல்களைப் பார்வையிட்டுத் தேர்வு செய்ய வந்துள்ளனர். சென்னையில், உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களையும் பார்வையிட்டுள்ளனர். அப்போது, சோழா ஹோட்டல் மட்டுமே அவர்களுக்குத் திருப்தியாகத் தெரிந்துள்ளது. இதையடுத்தே, ஜின்பிங் தங்குவதற்கு இந்த ஹோட்டலை சீன அதிகாரிகள் குழு தேர்ந்தெடுத்துள்ளது என்கிறார்கள்.

மாமல்லபுரத்தில் இன்று இரவு பிரதமர் மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், இரவில் மாமல்லபுரம் கடற்கரையிலேயே ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி, இரவு விருந்தளிக்கிறார். விருந்தில் தென்னிந்திய உணவுகளும் ஜின்பிங்குக்குப் பரிமாறப்படுகிறது. சாதம், சாம்பார், செட்டிநாடு கவினியரிசி அல்வா, தக்காளி ரசம் விருந்தில் இடம்பிடிக்கிறது. செட்டிநாடு பிரத்யேக சமையற்கலைஞர்களைக் கொண்டு தமிழக உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

கவினியரிசி அல்வா
கவினியரிசி அல்வா

நாளை காலையில் சீன அதிபர் கிராண்ட் சோழா ஹோட்டலில் காலை உணவு அருந்துகிறார். காலை உணவாக சைனீஷ் உணவுகளுடன் இட்லி, தோசை, வடை போன்ற தென்னிந்திய உணவுகளும் பரிமாறப்படுகின்றன. அப்போது, தென்னிந்திய உணவுகள் குறித்து சீன அதிபருக்கு விளக்கிச் சொல்லவும் சமையற்கலைஞர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். நாளை மதிய விருந்து கோவளம் தாஜ் ஃபிஷர்மென்கோ ஹோட்டலில் நடைபெறுகிறது.