Published:Updated:

பஞ்சாப் அரசியல் அதகளம்... பலனை அறுவடை செய்யப்போகிறதா ஆம் ஆத்மி?

பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது அங்கு ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்குள் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. இந்த அதகளத்தின் பலனை ஆம் ஆத்மி அறுவடை செய்யுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப்பூசலின் உச்சகட்ட நிலையை பஞ்சாப் மாநிலம் தற்போது கண்டுவருகிறது. 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று முதல்வர் பதவியில் அம்ரீந்தர் சிங் அமர்ந்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆதரவுடன் பஞ்சாப் காங்கிரஸில் செல்வாக்குமிக்க தலைவராக அமரீந்தர் சிங் விளங்கினார். இந்தநிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத்சிங் சித்து மூலமாக அவருக்குப் பிரச்னை ஆரம்பித்தது.

அமரீந்தர், சித்து
அமரீந்தர், சித்து

காங்கிரஸுக்கு வருவதற்கு முன்பாக, சித்து பாஜக-வில் இருந்தார். பாஜக-வின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், கட்சி மேலிடத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக, 2016-ம் ஆண்டு பாஜக-விலிருந்து வெளியேறினார். சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுரும் பாஜக சார்பில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக இருந்தார். அவரும் பாஜக-விலிருந்து விலகி, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சித்து செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரோ, புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கி, பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடப்போவதாக அறிவித்தார்.

பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்த சித்து, 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அமரீந்தர் சிங் தலைமையிலான ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் ஆனார். திடீரென 2019-ம் ஆண்டு அமைச்சர் பதவியை சித்து ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு, 2022-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தனக்கு ஆதரவான எம்.பி-க்கள், எல்.எல்.ஏ-க்களை ஒன்றுதிரட்டும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார் சித்து. காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் பேராதரவு சித்துவுக்கு உண்டு. அந்த செல்வாக்கில் காங்கிரஸின் பஞ்சாப் மாநிலத் தலைவராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட தலைவர்களின் எதிர்ப்புகளை மீறி அவருக்குத் தலைவர் பதவி தரப்பட்டது. இதன் காரணமாக, அமரீந்தர் சிங் - சித்து இடையே கடுமையான மோதல் நடைபெற்றுவந்தது.

சரண்ஜித்சிங் சன்னி, ராகுல் காந்தி
சரண்ஜித்சிங் சன்னி, ராகுல் காந்தி

இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், முதல்வர் பதவியை அமரீந்தர் ராஜினாமா செய்தார். அதையடுத்து, பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித்சிங் சன்னி புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். பஞ்சாப்பில் மொத்த மக்கள்தொகையில் 32 சதவிகிதம் பேர் பட்டியலினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவது இதுவே முதன்முறை. இது, தங்களின் வாக்குவங்கியை அதிகரிக்க உதவும் என்று காங்கிரஸ் கட்சி கணக்கு போட்டது. ஆனால், சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டதை, மாநிலத் தலைவரான சித்து ரசிக்கவில்லை. திடீரென மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் மேலிடத்துக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தார் சித்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விரிசலில் காங்கிரஸ்... வலுப்பெறும் ஆம் ஆத்மி... எப்படி இருக்கிறது பஞ்சாப் தேர்தல் களம்?

மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய சித்து, ராஜினாமாவுக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தவில்லை. `பஞ்சாப் மாநிலத்தின் எதிர்கால நலனில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்’ என்று கடிதத்தில் குறிப்பிட்ட சித்து, `தொடர்ந்து காங்கிரஸில் இருப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளார். சித்துவுக்கு ஆதரவாக அமைச்சர் பதவியை ரஸியா சுல்தானாவும் ராஜினாமா செய்தார்.

சித்து
சித்து

ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம், பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் தாக்கதை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உட்கட்சி மோதல், அந்தக் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், அது ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதாயத்தைக் கொடுக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

விரிசலில் காங்கிரஸ்... வலுப்பெறும் ஆம் ஆத்மி... எப்படி இருக்கிறது பஞ்சாப் தேர்தல் களம்?

2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி 20 தொகுதிகளை வென்றது. அதுதான் அந்தக் கட்சி அங்கு சந்தித்த முதல் தேர்தலும்கூட. அதில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் ஆம் ஆத்மி பெற்றது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் முக்கியப் பிரச்னையாக இருக்கும் மின்வெட்டுப் பிரச்னைஉசொ ஆம் ஆத்மி கையிலெடுத்துள்ளது. அதற்காக, பல போராட்டங்களையும் அது நடத்திவருகிறது. அத்துடன், பஞ்சாப்பில் ஆட்சியமைத்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

இந்தநிலையில், சித்துவின் ட்விட்டர் பதிவு ஒன்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ``நாம் சரியான பாதையில் சென்றால் `பவர் கட்' என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அலுவலக நேரங்களை மாற்றியமைப்பது, ஏசி பயன்பாடு போன்றவை பற்றி முதல்வர் யோசிக்கவேண்டிய அவசியமும் இருக்காது” என ட்வீட் செய்தார் சித்து. மேலும், ``டெல்லி மாடலைப் பயன்படுத்தினால் பஞ்சாப் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கலாம்” என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். சித்துவின் அந்தப் பதிவு ஆம் ஆத்மிக்கு சாதகமாகப் பார்க்கப்பட்டது. அத்துடன், தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் வீசிக்கொண்டிருக்கும் புயல், இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஆம் ஆத்மி கட்சி அங்கு உத்வேகமடைந்திருக்கிறது என்றே கூற வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்று யாரையும் முன்னிறுத்தாத ஆம் ஆத்மி, தற்போது தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர் `பஞ்சாப் மாநிலத்தின் பெருமைக்குரியவராக இருப்பார்’ என்று கூறியிருக்கிறது. தற்போதைய சூழலின் பலனை அறுவடை செய்ய ஆம் ஆத்மி தயாராகிவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு