Published:Updated:

பா.ஜ.க-வைத் தூக்கிச்சுமக்குமா அ.தி.மு.க? பரபர உள்ளாட்சித் தேர்தல்!

மோடி மற்றும் எடப்பாடி
மோடி மற்றும் எடப்பாடி

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத சூழலில், கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் எதிரும் புதிருமாகப் பேசிவருவது அரசியல் அரங்கில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பரில் நடைபெறும் என்று நம்பப்படுகிறது. அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க உட்பட அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்க ஆரம்பித்துவிட்டன. அதனால், உள்ளாட்சித் தேர்தல் குறித்த பரபரப்பு அதிகரித்துவருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே கட்டப்பட்ட தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இன்றுவரையில் பெரிய குழப்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. நாங்குநேரியில் தி.மு.க-வே போட்டியிட வேண்டும் என்று உதயநிதி சொன்னது மற்றும் கூட்டணிக் கட்சி பற்றி கே.என்.நேரு சொன்ன கருத்து போன்ற சில பேச்சுகள் அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தின. அதன்பிறகு அந்தப் பிரச்னைகள் பெரிதாக எழவில்லை.

ஸ்டாலினுடன் திருமாவளவன்
ஸ்டாலினுடன் திருமாவளவன்

சமீபத்தில் அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்டுப்பாட்டுடனும் நல்லிணக்கத்துடனும் இருக்கிறது. வரக்கூடிய சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்வரை எங்கள் கூட்டணி வெற்றிகரமாகப் பயணிக்கும். இடையில் உள்ளாட்சித் தேர்தல் வந்தால், அதைக் கூட்டணியாக இணைந்தே சந்திப்போம்” என்று தெரிவித்தார். அதேபோல, ஸ்டாலினை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ``உள்ளாட்சித் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் ஒன்றுபட்டு நாங்கள் செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

அதுபோல ம.தி.மு.க-வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.க கூட்டணியிலேயே உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது என்பதில் உறுதியாக உள்ளன. காங்கிரஸ் கட்சித் தலைவரான கே.எஸ்.அழகிரி மற்றும் ஸ்டாலின் ஆகியோரிடையே உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பான சந்திப்பு இன்னும் நிகழவில்லை. ஆனாலும்,``உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுடனான கூட்டணி தொடரும். காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் முடிந்த பிறகு, தி.மு.க-வுடன் பேசுவோம்” என்று கூறியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. மேலும், ``ஸ்டாலின் கோப்பெருஞ்சோழன், நான் பிசிராந்தையார். பார்க்காமலே எங்களுக்குள் பேசிக்கொள்வோம்” என்றும் குறிப்பிட்டிருக்கார்.

அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது? 

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தளவில், ``நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெற்ற அதே கூட்டணி, உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளின் தலைவர்கள் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்கள். அந்தக் கூட்டணிக்குள் தற்போது உள்ளே வெளியே விளையாட்டு நடந்துவருவதாகத் தெரிகிறது.

அ.தி.மு.க கூட்டணியில், உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு குறித்து அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அப்படியான சூழலில், ``பா.ஜ.க-வில் இரண்டு மேயர் இடங்களைக் கேட்கிறார்கள்” என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார். இவ்வளவு வெளிப்படையாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து, அந்தக் கூட்டணிக்குள் ஏதோ `உள்அரசியல்’ ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காண்பித்தது. அதற்கு சில நாள்களுக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மூத்த தலைவரான இல.கணேசன், ``உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்கும் சூழல் எழுந்தாலும், அதை எதிர்கொள்வதற்கு தொண்டர்களைத் தயார்ப்படுத்துகிறோம்” என்று சொன்னார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
6 ஆண்டு தேர்தல் தடை அம்போ... சசிகலா முதல்வர் ஆவார் எப்படி? 
பி.ஜே.பி போட்ட பாதை அப்படி!

மேலும், தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை பா.ஜ.க தலைவர்கள் ஆதரிப்பதும் தற்போதைய சூழலில் பல ஐயங்களை எழுப்புகிறது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டதாக அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே சொல்லிவிட்டன. குறிப்பாக, ``தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் இல்லை” என்று முதல்வர் எடப்பாடி சொல்லியிருக்கிறார். அதன் பிறகும், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்றும், ஆளுமைமிக்க அரசியல் தலைமை தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை என்றும் சொல்லிவருகிறார்கள். இவர்கள் இப்படி பேசுவதற்கும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி பேரத்துக்கும் தொடர்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிக வாக்குவித்தியாசத்துடன் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றதற்கு பா.ம.க-தான் காரணம் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கும் நிலையில், ``தகுதியான இடங்களைக் கேட்டுப்பெறுவோம்” என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கூறியிருக்கிறார். மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய இடங்களை முடிந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாங்கிவிடுவது என்பதில் கூட்டணிக் கட்சிகள் காட்டிவரும் முனைப்பின் வெளிப்பாடுதான் இவை அனைத்தும்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு
``உள்ளாட்சித் தேர்தல்... திட்டம் என்ன?'' கமல், சீமான் கட்சியினரின் பதில்!

இதையெல்லாம் புரிந்துகொண்டுதான், ``கூட்டணி பலம் இல்லாமல், எங்கள் பலத்தால்தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வென்றோம்” என்று செல்லூர் ராஜுவும், ``தே.மு.தி.க தலைவர் அரசியலில் தோல்வியடைந்துள்ளார்” என்று அமைச்சர் பாஸ்கரனும் பேசுகிறார்கள். நாங்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள் என்ற செய்தியை கூட்டணிக் கட்சிகளுக்கு இவர்கள் மறைமுகமாகச் சொல்வதுபோலத் தெரிகிறது. இவர்களே இப்படிப் பேசியிருக்கலாம், அல்லது மேலிருந்தும் இவர்களைப் பேசச்சொல்லியிருக்கலாம்.

அ.தி.மு.க-வை பா.ஜ.க-தான் இயக்கிக்கொண்டிருக்கிறது என்று தீவிரமாகப் பேசப்பட்ட சூழலில், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெறும் ஐந்து இடங்களை மட்டும் கொடுத்து கதையை முடித்துவிட்டது. அதற்கு முன்பாக,. ``பா.ஜ.க-வை நாங்கள் ஏன் தூக்கிச்சுமக்க வேண்டும்?” என்பது உட்பட பல கடுமையான விமர்சனங்களை பா.ஜ.க-வுக்கு எதிராக தம்பிதுரை, அன்வர்ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் பலரும் முன்வைத்துவந்தனர். தொகுதிகளைக் குறைப்பதற்கு அ.தி.மு.க தரப்பு கையாண்ட ஒரு தந்திரமாகப் பின்னாளில் அது பார்க்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் அப்படியொரு தந்திரத்தைத்தான் அ.தி.மு.க கையாண்டு வருவதாகத் தெரிகிறது. அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பிறகு எல்லாம் தெளிவாகிவிடும்.

அடுத்த கட்டுரைக்கு