Published:Updated:

உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால்தான் தமிழகத்துக்கு `நிதி’ ! கறார் காட்டும் மத்திய அரசு!

விஷ்ணுராஜ் சௌ

தமிழகத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறாமல் உள்ளது.

தமிழக மாநில தேர்தல் ஆணையம்
தமிழக மாநில தேர்தல் ஆணையம் ( விகடன் )

``உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் தமிழகத்துக்கான நிதியை வழங்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளன.

உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாத பட்சத்தில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கக்கூடிய நிதியை ஒதுக்க முடியாது.
நரேந்திர சிங் தோமர்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலானது 2016 அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார் அப்போதைய தமிழக மாநிலத் தேர்தல் ஆணையர் சீதாராமன். ஆனால், அந்தத் தேர்தல் அறிவிப்பில் இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றும், குறிப்பாகப் பழங்குடியினருக்கான வார்டுகள் உரிய எண்ணிக்கையில் ஒதுக்கப்படாமல் உள்ளது எனவும் தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், இந்த அறிவிப்பை எதிர்த்து தி.மு.க சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் , தேர்தலில் இடஒதுக்கீட்டை முறையாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும். தற்காலிகமாகத் தேர்தலை ரத்து செய்து அடுத்த ஆறு மாதத்துக்குள் தேர்தலை நடத்தச் சொல்லியும் உத்தரவிட்டார். இப்போது மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்னும் தேர்தல் குறித்தான முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தமிழக மாநில தேர்தல் ஆணையம்
தமிழக மாநில தேர்தல் ஆணையம்
விகடன்

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, நேற்று (15.7.2019) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அக்டோபர் 31 வரை கால அவகாசத்தைக் கோரியுள்ளது தமிழக மாநிலத் தேர்தல் ஆணையம் என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில், இன்று மக்களவையில் தி.மு.க உறுப்பினர் ஆ.ராசா பேசியபோது, ``தமிழகத்தில் நீண்டநாள்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் பல பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. நிதிகள் ஒதுக்குவதிலும் பிரச்னைகள் இருக்கின்றன” என்றார்.

ராசா
ராசா
விகடன்

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ``நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் தேர்தலை நடத்த முடியவில்லை எனத் தமிழக அரசு காரணம் சொல்கிறது. அதேவேளையில், உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதபட்சத்தில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கக்கூடிய நிதியை ஒதுக்க முடியாது“ என்றார்.