Published:Updated:

அமித் ஷா வியூகம்; கோடிகளில் புதிய திட்டங்கள்... பா.ஜ.க-வின் பீகார் `டெக்னிக்' தமிழகத்தில் எடுபடுமா?

அமித் ஷா
அமித் ஷா

அமித் ஷாவின் அரசியல் சதுரங்க விளையாட்டுகள் இதுவரை இந்திய அரசியல் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன, அவரின் தற்போதைய தமிழக வருகை எதற்கானது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

``மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவின் தமிழக வருகை, எதிர்க்கட்சியினருக்கு பயத்தை ஏற்படுத்தும்'' என இரண்டு நாள்களுக்கு முன்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறிய கருத்துதான் தற்போது தமிழக அரசியல் களத்தின் ஹாட் டாபிக்காக இருக்கிறது. தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் ஏன் அப்படியொரு கருத்தைத் தெரிவித்தார் என்பதைக் கடைசியாகப் பார்ப்போம். அதற்கு முன்பாக, அரசியல் ராஜதந்திரியாக வர்ணிக்கப்படும் அமித் ஷாவின் அரசியல் சதுரங்க விளையாட்டுகள் இதுவரை இந்திய அரசியல் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன, அவரின் தற்போதைய தமிழக வருகை எதற்கானது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

எல்.முருகன்
எல்.முருகன்

அமித் ஷாவின் அரசியல் வியூகம்?

தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, 2014-ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது பா.ஜ.க. சொல்லிவைத்தாற்போல, நாடு முழுவதும் மோடி அலை ஏற்படுத்திய மாயாஜாலம் அது. அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் பா.ஜ.க-வுக்கு ஏறுமுகம்தான். 2014-ம் ஆண்டில் வெறும் ஏழு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி புரிந்துவந்த பா.ஜ.க., 2015-ல் 13 மாநிலங்களிலும், 2016-ல் 15 மாநிலங்களிலும், 2017-ல் 19 மாநிலங்களிலும், உச்சக்கட்டமாக 2018-ம் ஆண்டு 21 மாநிலங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியது.

அப்போதைய பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் அரசியல் வியூகங்களே இதற்கான முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டன. ஆனால், பா.ஜ.க-வின் வெற்றிப் பயணத்துக்கு முதல் தடையாக அமைந்தது தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்தான். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்ற, மிசோரம், தெலங்கானா ஆகிய இடங்கள் மாநிலக் கட்சிகளிடம் சென்றன. அதற்கடுத்து சில மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக, அமித் ஷாவின் அரசியல் வியூகங்கள் மண்ணைக் கவ்விய இடமாக குறிப்பிடப்படுவது மகாராஷ்டிராவில் நடந்த விஷயங்கள்தாம்.

அதிக இடங்களில் வெற்றிபெற்றபோதும், தங்களின் கூட்டணிக் கட்சியினாலேயே ஆட்சிக் கட்டிலிலிருந்து கீழிறக்கப்பட்டது பா.ஜ.க-வுக்கு பேரிடியாக அமைந்தது. மகாராஷ்டிரா தோல்வியைத் தொடர்ந்து, ஜார்கண்டிலும் ஆட்சியைப் பறிகொடுத்தது பா.ஜ.க. அதைத் தொடர்ந்து டெல்லியிலும் கெஜ்ரிவாலின் வெற்றியைத் தட்டிப் பறிக்க முடியவில்லை. தற்போது, பீகாரில் ஐக்கிய தனதா தளத்தைவிட அதிக இடங்களில் வென்றிருந்தாலும், தாராள மனதுடன் நிதிஷ் குமாருக்கு முதல்வர் இருக்கையை வழங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. ஒருவேளை, முரண்டு பிடித்து எதுவும் செய்ய நினைத்தால், அது மகாராஷ்டிராபோல மீண்டும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிற பயமே பா.ஜ.க-வின் இந்த தாராள மனதுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தடாலடியான விஷயங்களைச் செய்துவந்த அமித் ஷா, கடந்த ஓராண்டாக மிகவும் பொறுமையாக அடியெடுத்து வைப்பதைப் பார்க்க முடிகிறது. `அமித் ஷாவின் தற்போதைய தமிழக வருகைகூட, பீகாரில் சாமர்த்தியமாகச் செய்த சில விஷயங்களை இங்கேயும் செய்து பார்க்கத்தான்’ என்கிறார்கள் வவரமறிந்தவர்கள்.

பீகார் தேர்தல்
பீகார் தேர்தல்

பீகாரில் அப்படி என்ன செய்தது பா.ஜ.க?

2005, 2010-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் நிதீஷ் குமாரின் ஐக்கிய தனதா தளத்துடன் கூட்டணியில் போட்டியிட்டு, அந்தக் கட்சியைவிடக் குறைவான இடங்களையே பா.ஜ.க-வால் பிடிக்க முடிந்தது. கடந்த முறை, தனியாகப் போட்டியிட்டபோதும் ஐக்கிய ஜனதா தளத்தைவிட குறைவான இடங்களையே பிடித்தது பா.ஜ.க. ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய தனதா தளத்தைவிட, 31 இடங்கள் அதிகமாகப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது பா.ஜ.க. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைத் தனித்துப் போட்டியிடவைத்து, அதிலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய தனதா தளம் போட்டியிடும் இடங்களில் மட்டும் போட்டியிடவைத்து, பா.ஜ.க அதிக இடங்களில் வென்றிருக்கிறது.

அடுத்ததாக,தேர்தலுக்குச் சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு, பீகார் மாநிலத்துக்கென்று பிரத்யேகமாக பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள். இதுதான் பீகாரில், மிகப்பெரிய அளவில் பா.ஜ.க-வுக்கு கைகொடுத்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதிலும், மோடியுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ளவே ஒரு காலத்தில் மறுத்துவந்த நிதிஷ் குமார், ''தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், நாட்டின் முதன்மை மாநிலமாக பீகாரை மோடி மாற்றுவார்'' என மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்ததே, பா.ஜ.க-வின் மீதான நம்பிக்கையை அந்த மக்களிடம் அதிகரித்தது. இதேபாணியில், தற்போது தமிழகத்திலும் பல திட்டங்களைத் தொடங்கிவைக்க வருகிறார் அமித் ஷா.

நிதீஷ் குமார் - மோடி
நிதீஷ் குமார் - மோடி

பீகார் வியூகம் தமிழகத்தில் எடுபடுமா?

பீகாரில் மத்திய அரசால், குடிநீர் விநியோகத் திட்டங்கள், கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டங்கள், ஆற்றுப்படுகை மேம்பாட்டுத் திட்டங்கள், பாட்னா மெட்ரோ, ஸ்மார்ட் சிட்டி திட்டம், உஜ்வாலா திட்டம், சாலை மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அடிப்படையில் மிகவும் பின்தங்கிய மாநிலமான பீகாரில், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி போன்றவற்றை ஏற்படுத்த அங்கு பா.ஜ.க மீது அந்த மக்களுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் உண்டாகியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக, நிதிஷ் குமார் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம், வேலையின்மை ஆகியவை பா.ஜ.க-வை நோக்கி அந்த மக்களை திசை திருப்பியிருக்கிறது. ஆனால், அடிப்படைக் கட்டமைப்புகளில் இந்தியாவுக்கே பல விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் தமிழகத்தில் இது போன்ற திட்டங்கள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

Vikatan

தவிர, இங்கு இதுவரை ஆட்சி செய்த இருபெரும் திராவிடக் கட்சிகளின் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இருந்தாலும், அவை அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கின்றன. தவிர, நிதிஷ் குமாரைப்போல, ``மோடி நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவார்'' என்று சட்டமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க-வினர் நிச்சயம் சொல்ல மாட்டார்கள். மத்திய அரசா, மாநில அரசா என்று வரும்போது கண்டிப்பாகத் தங்களின் ஆட்சியையோ, தங்கள் கட்சியையோ விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், ஏற்கெனவே மத்திய அரசு கொண்டு வந்த பல திட்டங்களைக்கூட, தமிழக மக்கள் இங்கு ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் கொண்டு வந்ததாகவே கருதுகின்றனர். உதாரணமாக, பிரதமரின் கிசான் திட்டத்தில், நடைபெற்ற முறைகேடு வெளிச்சத்துக்கு வரும்வரை, அது மாநில அரசின் திட்டம் என்பதுபோல்தான் அ.தி.மு.க கட்டமைத்துவைத்திருந்தது. அந்த அளவுக்கு மக்கள்நலத் திட்டங்களில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்துவருகிறது தமிழகம். அதனால், அமித் ஷாவின் இது போன்ற திட்ட வியூகம் நிச்சயமாகத் தமிழகத்தில் எடுபடாது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

எல்.முருகன் வேல் யாத்திரை
எல்.முருகன் வேல் யாத்திரை

எல்.முருகனின் கருத்து எதற்காக?

வேறொன்றும் இல்லை. தமிழக பா.ஜ.க-வின் தலைவராக எல்.முருகன் பதவியேற்ற நாளிலிருந்து, மாற்றுக் கட்சியினரை, திரைப் பிரபலங்களை, முன்னாள் ரௌடிகளை பா.ஜ.க-வில் இணைத்து எப்போதும் தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.க பேசுபொருளாக இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்துவருகிறார். தற்போது அவர் கையில் எடுத்திருக்கும் வேல் யாத்திரை விவகாரம்கூட அப்படியானதுதான். இந்தநிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அமித் ஷாவும், பிரதமர் மோடியும் தமிழகத்துக்குப் பலமுறை வந்தும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.

இந்தமுறையும் அமித் ஷாவின் தமிழக வருகை எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் புஸ்வாணமாகிப்போனால் என்னாவது.... அதற்காகத்தான் தானாகவே, ``அமித் ஷாவின் தமிழக வருகை, எதிர்க்கட்சியினருக்கு பயத்தை ஏற்படுத்தும்'' என்கிற அணுகுண்டைத் தூக்கிப் போடுகிறார் முருகன். அதுவே ஒரு பேசுபொருளாக மாறும், விவாதமாக உருவெடுக்கும். அதன் மூலம் தமிழக அரசியலில் தங்களுக்கான பலனை அறுவடை செய்யலாம் என்றும் கணக்கு போடுகிறார் அவர். ஆனால், யார் என்ன திட்டங்களை வகுத்தாலும் மக்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறார்கள் என்பது சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்போதுதான் தெரியவரும்!

அடுத்த கட்டுரைக்கு