Published:Updated:

அதிமுக விஐபி-க்களின் சொத்துப் பட்டியலும் வெளியாகுமா... அண்ணாமலை கணக்குதான் என்ன?!

அண்ணாமலை

``தி.மு.க மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவார். இதுவரை 14 அ.தி.மு.க நிர்வாகிகளின் பட்டியல் தயார் செய்துவைத்திருக்கிறார்” -பா.ஜ.க நிர்வாகிகள்

Published:Updated:

அதிமுக விஐபி-க்களின் சொத்துப் பட்டியலும் வெளியாகுமா... அண்ணாமலை கணக்குதான் என்ன?!

``தி.மு.க மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவார். இதுவரை 14 அ.தி.மு.க நிர்வாகிகளின் பட்டியல் தயார் செய்துவைத்திருக்கிறார்” -பா.ஜ.க நிர்வாகிகள்

அண்ணாமலை

கடந்த மார்ச் ஏழாம் தேதி சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பிரச்னை தீர்ப்பதற்காக மட்டும்தான் பா.ஜ.க இருக்கிறது, உருவாக்குவதற்கு இல்லை. பா.ஜ.க 420 கட்சி எனக் கூறுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது. ஏப்ரல் 14-ம் தேதி நான் சொன்னபடி தமிழக ஊழல் பட்டியல் ரிலீஸ் செய்யப்படும். இரண்டு லட்சம் கோடிக்கு மேல் தி.மு.க அமைச்சர் ஊழல் பட்டியல் வெப்சைட்டில் போடுவோம். அதைப் பார்த்த பிறகு 420 யார் என்பது பேசுவோம்” என்று கூறியிருந்தார். அதன்படி நேற்று ஏப்ரல் 14-ம் தேதி சென்னையிலுள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தி.மு.க அமைச்சர்கள் சொத்துப் பட்டியல் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அந்த வீடியோவில் தி.மு.க எம்.பி-க்கள் ஜெகத்ரட்சகன், கனிமொழி கருணாநிதி, கலாநிதி வீராசாமி, டி.ஆர்.பாலு, கௌதம் சிகாமணி கதிர் ஆனந்த், தி.மு.க அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, பொன்முடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் மருமகன் சபரீசன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோரின் சொத்துப் பட்டியல், அவர்களின் குடும்பத்தினரின் சொத்துப் பட்டியல் தொடர்பான விவரங்கள் எனச் சில தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன்படி தி.மு.க-வின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோ வெளியிட்ட பிறகு பேசிய அண்ணாமலை, “எதற்கும் துணிந்துதான் அரசியலுக்கு வந்தேன். மாலை போட்டு, கும்பிடு போட்டு தேர்தல் நேரத்தில் ஒன்றுசேர்ந்துகொள்ளும் அரசியலில் எனக்கு விருப்பமில்லை. ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையிலிருந்து எதிர்க்க வேண்டும் எனும் முடிவுக்கு வந்துவிட்டேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சியின் ஊழலையும் வெளியிடுவேன். அனைவரையும் நான் மொத்தமாக எதிர்ப்பேன், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அண்ணாமலை
அண்ணாமலை

பாதியாக ஊழலை எதிர்த்து போராடினால் மக்களுக்கு நம்பிக்கை இருக்காது. நான் ஊழலை எதிர்க்க கூடாதென்றால், டெல்லிக்குச் சென்று என்னை பா.ஐ.க தலைவர் பதவியிலிருந்து மாற்றுங்கள். மோடி விரும்பும் அரசியலைத்தான் நான் செய்வேன். யார் தயவிலும் நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்று அவசியம் இல்லை. நான் 10 தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. ஊழலுக்கு எதிராகப் போராடுவேன். மின்சாரத்தை தொட்டச்சு, இனி விட முடியாது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஊழல் பட்டியலை Part-4 வரை வெளியிடுவேன். அதில் வேறு வேறு கட்சிகளும் இடம்பெறும்” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “ஊழலில் திளைத்த ஒரு கட்சி தி.மு.க. அதிலிருந்து ஊழலை எதிர்த்து, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்தான் அ.தி.மு.க. அண்ணாமலை வெளியிட்டது நல்ல விஷயமாக எடுத்துக்கொள்ளலாம். ஆசியாவிலேயே மிகப்பெரிய குடும்பம் தி.மு.க குடும்பம் என்று ஆதிகாலத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அண்ணாமலை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் ஒரு லட்சத்து 34 ஆயிரம் கோடி பறிமுதல் செய்து அரசு கஜானாவுக்குக் கொண்டுவந்தால் மக்களின் பாதி கஷ்டம் தீர்ந்துவிடும். காலம் தாழ்த்தாமல், அண்ணாமலை அறிவிப்போடு நிறுத்தாமல் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய புலனாய்வுத்துறை மூலமாக சட்டத்தின் முன் நிற்கவைத்து, சொத்துகள் எல்லாம் பறிமுதல் செய்து, நாட்டுடமையாக்கி அரசாங்க கரூவூலத்தில் வரவைத்தால் அண்ணாமலை ‘தி க்ரேட்’ எனலாம். ஆனால், அதை அண்ணாமலை செய்வாரா அதுதான் கேள்வி.

அண்ணாமலை, ஜெயக்குமார்
அண்ணாமலை, ஜெயக்குமார்

`அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் பட்டியல் வெளியிடுவேன்’ என்று அவர் சொல்லட்டும் அதன் பிறகு எங்கள் பதில் எப்படி இருக்கும் என்று பாருங்கள். எங்களுக்கு மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் இருக்க வேண்டும். மத்திய புலனாய்வுத்துறைகள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனென்றால் எல்லாம் சட்டப்படி நாங்கள் இருப்பதால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

அண்ணாமலை பேசியதன் பின்னணி குறித்து பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களிடம் பேசினோம். “அண்ணாமலை சொன்னதுபோல் தி.மு.க மட்டுமல்ல தமிழகத்தின் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவார். இதுவரை 14 அ.தி.மு.க நிர்வாகிகளின் பட்டியல் தயார் செய்துவைத்திருக்கிறார். அண்ணாமலையைப் பொறுத்தவரை பா.ஜ.க-வின் தலைமையில் தமிழ்நாட்டில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதில் திடமாக இருக்கிறார். இதையே தேசிய தலைமையிடமும் சொல்லிவருகிறார்” என்கிறார்கள்.

கமலாலயம்
கமலாலயம்

ஆனால், அ.தி.மு.க-வின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவேன் என்று அண்ணாமலை சொன்ன கருத்தை பா.ஜ.க-வின் சில மூத்த நிர்வாகிகள் விரும்பவில்லை. இது தொடர்பாக பேசிய பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், “அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்ன பிறகும் அண்ணாமலை, அ.தி.மு.க-விடம் ஒரு கசப்பான போக்கையே கையாண்டுவருகிறார். இப்போதும்கூட அ.தி.மு.க-வின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவேன் என்று கூறியிருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்தால்தான் பா.ஜ.க-வால் சொற்ப இடங்களில் வெற்றிபெற முடியும். அதற்கும் வழியில்லாமல் செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை” என்கிறார்கள்.