Published:Updated:

மேற்கு வங்கம்: `மிஷன் 200'... 11 பேர்கொண்ட குழு - மம்தாவை வீழ்த்துமா பா.ஜ.க?

மம்தா - அமித் ஷா
மம்தா - அமித் ஷா

2016 தேர்தலுக்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் காங்கிரஸையும் மம்தா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியிருந்த சமயத்தில்தான் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில்...

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க பெற்றிருக்கும் வெற்றியை, அந்தக் கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி முடிப்பதற்குள்ளாக, மேற்கு வங்கத் தேர்தலுக்கான வேலையைத் தொடங்கிவிட்டது பா.ஜ.க தலைமை. இன்னும் ஆறு மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் எப்படியாவது வெற்றிபெற்று, மேற்கு வங்கத்திலும் கால் பதித்துவிட வேண்டுமென்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது.

அமித் ஷாவுடன் ஜே.பி.நட்டா
அமித் ஷாவுடன் ஜே.பி.நட்டா
பீகார்: ஹில்சாவில் 12 வாக்குகள்;  ராம்காரில் 189 வாக்குகள்! - தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்ததா?

பீகாரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, மேற்கு வங்கத் தேர்தலில், வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய 11 பேர்கொண்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறது பா.ஜ.க. இந்த 11 பேர்கொண்ட குழுவில் பா.ஜ.க-வின் தேசியப் பொதுச்செயலாளர்கள் ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 294 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்டது மேற்கு வங்கம். அவற்றை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு பா.ஜ.க-வின் பொதுச்செயலாளர்கள், அந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார்கள். கடந்த திங்கட்கிழமை முதலே அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்தக் குழு, மேற்கு வங்கத்தின் நிலை குறித்து ஆராய்ந்து, அது தொடர்பான தகவல்களை பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் சமர்ப்பிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பா.ஜ.க-வினர் மேற்கு வங்கத்தில் களப் பணியைத் தொடங்கியிருப்பது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பெரிதாக பா.ஜ.க சாதித்ததில்லை. `மேற்கு வங்கத்தில், 2011-லிருந்து தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கிறார் மம்தா பானர்ஜி. அப்படியிருக்கையில், திரிணாமுல் காங்கிரஸ் ஏன் பா.ஜ.க-வைக் கண்டு பதற்றமடைய வேண்டும்?’ என்கிற கேள்விதான் அனைவரின் மனதிலும் தோன்றும்.

மம்தா
மம்தா

அந்தக் கேள்விக்கு பதிலாக மேற்கு வங்க அரசியல் வட்டாரங்கள் சொல்வது என்னவென்றால், ``2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியாவின் பல மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றிருந்தது பா.ஜ.க. அப்போது மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வுக்குக் கிடைத்தது இரண்டு தொகுதிகள்தான். திரிணாமுல் காங்கிரஸ் அந்தத் தேர்தலில் 34 இடங்களைப் பெற்று வலுவாக இருந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில், 211 இடங்களைக் கைப்பற்றியிருந்தது திரிணாமுல் காங்கிரஸ்.

2016 தேர்தலுக்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் காங்கிரஸையும் மம்தா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியிருந்த சமயத்தில்தான் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளைக் கைப்பற்றி மம்தாவுக்கே ஷாக் கொடுத்தது பா.ஜ.க. திரிணாமுல் காங்கிரஸைவிட வெறும் நான்கு சீட்கள் மட்டுமே குறைவாகப் பெற்று, மேற்கு வங்கத்தில் தனது பலத்தை நிரூபித்தது பா.ஜ.க. அதையடுத்துதான், வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் நமக்குப் போட்டி பா.ஜ.க-தான் என்பதை உணர்ந்தார் மம்தா. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர்தான், அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரை திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பணிகளுக்காக நியமித்தார் மம்தா'' என்கிறார்கள்.

சரி, இப்போது பா.ஜ.க-வின் கதைக்கு வருவோம்... கடந்த நவம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் மேற்கு வங்கத்துக்கு விசிட் அடித்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதையொட்டி பேசிய மேற்கு வங்க பா.ஜ.க-வின் தலைவர் திலீப் கோஷ்,

இனி மாதம் ஒரு முறையாவது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் மேற்கு வங்கத்துக்கு வந்து செல்வார்கள்.
திலீப் கோஷ், பா.ஜ.க
பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ்
பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ்
அமித் ஷா வியூகம்; கோடிகளில் புதிய திட்டங்கள்... பா.ஜ.க-வின் பீகார் `டெக்னிக்' தமிழகத்தில் எடுபடுமா?
இதற்கு பதிலளிக்கும்விதமாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சோகட்டா ராய் (Saugata Roy), ``பா.ஜ.க-வின் மத்திய தலைவர்கள் மேற்கு வங்கத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், இங்கிருக்கும் மாநில பா.ஜ.க தலைவர் மீதான நம்பிக்கை போய்விட்டது. பா.ஜ.க மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கனவு காண்கிறது. கனவு காண்பதில் ஒன்றும் தவறில்லை'' என்று பேசினார்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர், ``மேற்கு வங்கத்தில் கட்சிக்கு இருக்கும் பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யத்தான் மத்தியிலுள்ள தலைவர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக, ஒரு மாநிலத்தில் தேர்தல் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைக் கண்காணிக்கத்தான் மத்தியில் உள்ளவர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால், மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தேர்தல் பணிகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்ள, மத்தியிலுள்ள பா.ஜ.க தலைவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்'' என்கிறார்கள் நம்பிக்கையோடு.

பா.ஜ.க கொடி
பா.ஜ.க கொடி

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர், ``மேற்கு வங்கத்தில், `மிஷன் 200' என்பதைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்படுகிறது பா.ஜ.க. அதாவது 294 தொகுதிகளில், 200 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டுமென்பது பா.ஜ.க தலைமையின் எண்ணமாக இருக்கிறது. அதற்காகக் குழு அமைத்துக் களமிறங்கிவிட்டது அந்தக் கட்சி. இந்தியாவில், பல தேர்தல் வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவர் என்று சொல்லப்படும் பிரசாந்த் கிஷோர் திரிணாமுல் காங்கிரஸ் பக்கமிருந்தாலும், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து சிலரை தங்கள் பக்கம் இழுக்கும் முடிவைக் கொண்டு செயல்பட்டுவருகிறது பா.ஜ.க. மேற்கு வங்க போக்குவரத்துத்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸின் வலுவான தலைவருமான சுவேந்து அதிகாரியை (Suvendu Adhikari) தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளை எப்போதோ பா.ஜ.க தொடங்கிவிட்டது. அவரைப்போலவே திரிணாமுல் காங்கிரஸில், தலைமைமீது அதிருப்தியிலிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் சிலரையும் அடையாளம்கண்டு பா.ஜ.க-வுக்குக் கொண்டு வரும் வேலைகள் நடந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.

மம்தா பானர்ஜி மற்றும் அமித் ஷா
மம்தா பானர்ஜி மற்றும் அமித் ஷா
பீகார்: நிதிஷை வாழ்த்திய பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி... கடுப்பான ஜே.டி.யு ஆதரவாளர்கள் - காரணம் என்ன?

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலரை தனது பக்கம் இழுத்துக்கொண்டுதான் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இறங்கியது பா.ஜ.க. மதத்தை முன்னிறுத்தி மம்தாவுக்கு எதிராக பா.ஜ.க-வினர் செய்த பிரசாரமும் அவர்களுக்கு பலமாக அமைந்தது. அந்தத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 43.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அதே தேர்தலில், பா.ஜ.க-வின் வாக்கு வங்கி 40.6 சதவிகிதம். எனவே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றே சொல்லலாம். மேற்கு வங்கத்தின் அரசியல் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. இப்போது இருக்கும் சூழலில் பா.ஜ.க-வுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்குமான வெற்றி வாய்ப்பு விகிதம் சமமாகவே இருக்கின்றன. இன்னும் 2, 3 மாதங்களில் காட்சிகள் தெளிவாகிவிடும். அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அடுத்த கட்டுரைக்கு