Published:Updated:

ஓ.பி.எஸ்-க்கு கைகொடுக்குமா பாஜக... டெல்லி மேலிடத்தின் திட்டம் என்ன?

மோடி - ஓ.பி.எஸ்

முதன்மை நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி, ஓ.பி.எஸ் இருவருக்கும்தான் சின்னம் என்று சொல்வதற்கான வாய்ப்புகளும் டெல்லியில் பிரகாசமாக இருக்கின்றன.

ஓ.பி.எஸ்-க்கு கைகொடுக்குமா பாஜக... டெல்லி மேலிடத்தின் திட்டம் என்ன?

முதன்மை நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி, ஓ.பி.எஸ் இருவருக்கும்தான் சின்னம் என்று சொல்வதற்கான வாய்ப்புகளும் டெல்லியில் பிரகாசமாக இருக்கின்றன.

Published:Updated:
மோடி - ஓ.பி.எஸ்

கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு அரசியல் களத்தில் விவாதப் பொருளாகிவரும் அ.தி.மு.க உட்கட்சிப்பூசலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நிகழ்ந்துவருகிறது. அந்த வகையில் கடந்த 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்குப் பிறகு அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் 27.06.2022 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முன்பு, “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி கட்சிக் கூட்டம் 27-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவிருப்பதாக, கட்சி விதிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி சட்டப்படி கூட்டம் நடத்த முடியாது. கூட்டத்தில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால் அது அ.தி.மு.க. தொண்டர்களைக் கட்டுப்படுத்தாது” என்று ஓ.பி.எஸ் தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இந்த நிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்ட நிலையில், அவைத்தலைவர் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது. ஜூலை 11-ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். பல முக்கிய முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 11-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் அனுப்புவது பற்றி ஆலோசித்தோம். கூட்டத்தை நடத்தத் தலைமை நிலையச் செயலாளருக்கு அதிகாரமுண்டு.

ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அடிப்படை தெரியவில்லை. அதிமுக-வுக்குப் பல துரோகங்களைச் செய்தவர். ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம். கூட்டத்தில் எடுத்த முடிவுகள் அனைத்தையும் இப்போது கூற இயலாது. எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லிவிடுகிறேன். எதைச் சொல்லக் கூடாதோ அதைச் சொல்ல மாட்டேன். பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்பதைப் பொதுக்குழுதான் முடிவு செய்யும்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடி - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
மோடி - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

இவ்வாறாக நாளுக்கு நாள் இரு தரப்பினருக்கிடையே மோதல் வலுத்துவரும் வேளையில், பல சந்தர்ப்பங்களில் அ.தி.மு.க-வின் உள்விவகாரங்களில், பா.ஜ.க திரைமறைவில் தலையிட்டு தீர்த்துவைத்திருக்கிறது என்கிற பேச்சும் ஒரு பக்கம் இருக்கிறது. அதன் அடிப்படையில் தமது டெல்லி பயணத்தின்போது அ.தி.மு.க- வில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக பா.ஜ.க மேலிடத் தலைவர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஓ.பி.எஸ் பேசக்கூடும் என்றும், அ.தி.மு.க பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாகத் தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு நடவடிக்கை எடுத்தால் அதைச் சட்டரீதியாக எவ்வாறு அணுகுவது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்துவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், பிரதமர் மோடி ஜெர்மன் பயணம், குடியரசுத் தலைவர் வேட்புமனு தாக்கல், மகாராஷ்டிர அரசியல் சூழல் போன்ற காரணங்களால் பா.ஜ.க மேல்மட்டத்தினரை சந்தித்து, தன் நிலையை எடுத்து வைக்கும் வாய்ப்பு ஓ.பி.எஸ்-ஸுக்குக் குறைவாகவே இருந்ததாகச் சொல்கின்றனர் டெல்லி வட்டாரத்தில்.

இ.பி.எஸ். - அமித் ஷா - மோடி - ஓ.பி.எஸ்.
இ.பி.எஸ். - அமித் ஷா - மோடி - ஓ.பி.எஸ்.

நிலைமை இவ்வாறு இருக்க, ``இன்றைய சூழலில் அ.தி.மு.க உள்விவகாரங்களில் பா.ஜ.க தலையிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. யாருக்கும் ஆதரவாகச் செயல்படாமல் நடுநிலையில் இருக்கவே முயல்வார்கள். அ.தி.மு.க அழிந்துவிடக் கூடாது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் பா.ஜ.க-வுக்கு இருக்கவேண்டியது இல்லை என்றாலும், சுயநலம் கலந்த பார்வையில்தான் அ.தி.முக-வை அணுகுவார்கள். அப்படிப் பார்க்கும்போது ஓ.பி.எஸ்-ஸை பா.ஜ.க கைவிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், எடப்பாடி தங்களைக் கழற்றிவிடாமல் இருப்பதற்கு ஓ.பி.எஸ்-ஸை பா.ஜ.க பயன்படுத்தும். இன்றைய சூழலில் எடப்பாடி தனக்குச் சாதகமான நிலையிலிருந்து போர் புரிகிறார். அந்த வகையில் அதிகாரத்தில் தனக்கு இருக்கும் பலத்தை 100 சதவிகிதமாக மாற்ற முயல்கிறார். ஓ.பி.எஸ் தனக்கிருக்கும் பலத்தை விட்டுவிடக் கூடாது என்று போராடுகிறார்” என்பதை முன்வைக்கும் அரசியல் பார்வையாளர்கள், “முதன்மை நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி, ஓ.பி.எஸ் இருவருக்கும்தான் சின்னம் என்று சொல்வதற்கான வாய்ப்புகளும் டெல்லியில் பிரகாசமாக இருக்கின்றன” என்கிறார்கள்.