Published:Updated:

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்களில் பாஜக சாதிக்குமா, சறுக்குமா?! - ஒரு பார்வை

பாஜக - அமித் ஷா, மோடி

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறுமா?

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்களில் பாஜக சாதிக்குமா, சறுக்குமா?! - ஒரு பார்வை

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறுமா?

Published:Updated:
பாஜக - அமித் ஷா, மோடி

சமீபத்தில் நடந்து முடிந்த பா.ஜ.க-வின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ‘அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பணியாற்றுங்கள்’ என்பது உட்பட பல வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் தமது கட்சியினருக்கு வழங்கியிருக்கிறார். மேலும், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களையும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலையும் கருத்தில்கொண்டு பா.ஜ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில் விரிவான அளவில் விவாதங்கள் நடைபெற்றதாக பா.ஜ.க நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த நிலையில்தான், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இவை மூன்றுமே வட கிழக்கு மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, திரிபுராவுக்கு பிப்ரவரி 16-ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பிப்ரவரி 27-ம் தேதியும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திரிபுராவில் ஜனவரி 21-ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் ஜனவரி 31-ம் தேதியும் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 

திரிபுரா:

திரிபுராவில் சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி 25 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. அங்கு, 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த நான்கரை ஆண்டுகளாக பிப்லப் குமார் தேப் முதல்வராக இருந்தார். அவர், சர்ச்சைக்குரிய, அபத்தமான கருத்துகளை அடிக்கடிப் பேசுவதன் மூலமாக தேசியச் செய்திகளில் அடிபட்டுவந்தார்.

 பிப்லப் குமார் தேப்
பிப்லப் குமார் தேப்

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக, கடந்த மார்ச் மாதம் அவர் மாற்றப்பட்டார். புதிய முதல்வராக வந்தார் மாணிக் சகா. அரசின் மீதான எதிர்ப்பு உணர்வை முதல்வரை மாற்றுவதன் மூலமாக திசை திருப்புவதை ஓர் உத்தியாக பா.ஜ.க கையாண்டுவருகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்த நிலையில், 60 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட திரிபுராவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் கைகோத்து களமிறங்குகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் களத்தில் இருக்கிறது.

நாகாலாந்து:

நாகாலாந்து மாநிலத்தில் 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நாகா மக்கள் முன்னணி 27 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றது. பா.ஜ.க 12 இடங்களிலும், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 16 இடங்களிலும் வெற்றிபெற்றன. நாகா மக்கள் கட்சி அதிக இடங்களில் வென்றதால், தங்களை ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என அந்தக் கட்சி போர்க்கொடி தூக்கியது. ஆனால், பா.ஜ.க உதவியுடன் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. அங்கு, தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி தலைவர் நெய்பியூ ரியோ முதல்வராக இருக்கிறார்.

நெய்பியூ ரியோ
நெய்பியூ ரியோ

நாகாலாந்தில் நீண்டகாலமாக தனிமாநிலக் கோரிக்கை இருந்துவருகிறது. அதையொட்டி, அந்த மாநில அரசியலில் பல அதிரடிகள் அவ்வப்போது நடப்பதுண்டு. தமிழ்நாட்டின் ஆளுநராக வருவதற்கு முன்பாக, நாகாலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தார். அப்போது, அவரின் செயல்பாடுகளால் நாகாலாந்து அரசியலில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டது. 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த 27 எம்.எல்.ஏ-க்களில் 21 பேர் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்குத் தாவினர். அது, நாகாலாந்து அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

மேகாலயா:

மேகாலயாவில் 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற 59 தொகுதிகளில் 21 தொகுதிகளைப் பிடித்து காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், நாகாலாந்தில் நடந்ததைப்போலவே, இங்கேயும் தேசிய மக்கள் கட்சியுடன் இணைந்து பா.ஜ.க ஆட்சியமைத்தது. தற்போது அங்கு பா.ஜ.க தலைமையிலான ஆறு கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.

கான்ராட் சங்மா
கான்ராட் சங்மா

முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அதனால், திரிணாமுல் காங்கிரஸ் அங்கு முக்கிய எதிர்க்கட்சியாக மாறியது. மேகாலாயாவுக்குச் சென்றிருக்கும் மம்தா பானர்ஜி, ‘மேகாலயாவில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்று மேகாலயா மக்கள் விரும்புகிறார்கள்’ என்று பேசியிருக்கிறார்.

வட கிழக்கு மாநிலங்களில் தற்போதைய நிலை என்ன?

வட கிழக்கு மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் செல்வாக்குதான் அதிகம். நீண்டகாலமாக அங்கு பா.ஜ.க-வே கிடையாது. 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான், வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க கவனம் செலுத்த ஆரம்பித்தது. திரிபுரா, மேகாலாயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் 2018-ல் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றபோது, ‘வட கிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்தில் பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்துவார் என்று பா.ஜ.க பிரசாரம் செய்தது.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் கைகோக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் தனியாகவும், பா.ஜ.க தனியாகவும் களத்தில் இருக்கின்றன. அங்கு பழங்குடி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருக்கும் டி.ஐ.பி.ஆர்.ஏ அமைப்பு யாருக்கு ஆதரவு அளிக்கப்போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. `பழங்குடி மக்களின் நலன் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற யார் உறுதியளிக்கிறார்களோ, அவர்களையே ஆதரிப்போம்’ என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மேகாலயாவில் பா.ஜ.க-வுக்கு பெரும் வெற்றி கிடைப்பது சவாலாக இருக்கும் என்றும், நாகாலாந்து மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் என்.டி.டி.பி - பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.