கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென் மாநிலங்களிலேயே கர்நாடகாவில் மட்டும்தான் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. அதனால் அங்கு ஆட்சியைத் தக்கவைப்பது பா.ஜ.க-வின் தென் மாநில வியூகத்துக்கு மிகவும் முக்கியமானது. அதேவேளையில் கருத்துக்கணிப்புகள் சில இப்போதைய சூழலில், காங்கிரஸுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூற, பா.ஜ.க முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அதனால் பலமுறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர்களுக்குக்கூட இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. வெற்றி வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்று பா.ஜ.க கவனத்தில் கொண்டதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை சீட் கொடுக்கப்படாத சிட்டிங் எம்.எல்.ஏ-க்களில் சிலர் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பா, ஹல்லாடி ஸ்ரீநிவாச ஷெட்டி ஆகியோர் தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த நிலையில், அவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை.

இந்தச் சூழலில் பா.ஜ.க முதல்கட்ட வேட்பாளர் பட்டியலின்படி பார்த்தால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்டிருக்கும் லிங்காயத் தலைவர் வி.சோமண்ணா, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா என இரு முன்னாள் முதல்வர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சோமண்ணா சாம்ராஜ்நகர் தொகுதியிலும், சித்தராமையா வருணா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க-வின் ஒக்கலிகா சமூகத் தலைவரும் அமைச்சருமான ஆர்.அசோக், கர்நாடக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.சிவகுமாரை எதிர்த்து கனகபுரா தொகுதியில் களம் இறக்கப்படுகிறார்.
அசோக் தனது வழக்கமான தொகுதியான பெங்களூரு பத்மநாபநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் சி.பி.யோகேஸ்வர், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமியை எதிர்த்து சன்னபட்டனா தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிக்காவோன் தொகுதி, கட்சி தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி சிக்கமங்களூரு மற்றும் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் விஜயேந்திரா ஷிகாரிபூர் தொகுதியிலிருந்து போட்டியிடுகின்றனர்.

இந்த முறை தேர்தலில் சில முக்கியப் பிரமுகர்களுக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆறு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அமைச்சர் அங்காராவுக்கு சீட் வழங்கப்படவில்லை. அதேபோல் மற்றோர் அமைச்சர் பி.எஸ்.ஆனந்துக்கும் சீட் வழங்கப்படவில்லை.
இந்த முறை பா.ஜ.க சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, பெங்களூரு மாநகர முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவுக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் சாம்ராஜ்பேட் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அனில் குமார் கோரட்டகரே தொகுதியில் போட்டியிடுவார். மாண்டியா எம்.பி சுமலதாவின் நெருங்கிய வட்டத்திலுள்ள சச்சிதானந்த் இந்தத் தேர்தலில் ஸ்ரீரங்கப்பட்டனாவில் போட்டியிடுவார்.

அதேபோல் சாதிவாரி பங்களிப்பாக, பா.ஜ.க முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 32 ஓ.பி.சி வேட்பாளர்கள், 30 எஸ்.சி வேட்பாளர்கள், 16 எஸ்.டி வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். வேட்பாளர்களில் ஒன்பது பேர் மருத்துவர்கள். ஐந்து பேர் வழக்கறிஞர்கள். மூன்று பேர் கல்வியாளர்கள். 31 பேர் முதுநிலை பட்டம் பெற்றவர்கள்.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுப் பேசிய மத்திய அமைச்சரும், கர்நாடகத் தேர்தல் பா.ஜ.க பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான், ``வேட்பாளர்கள் தேர்வு ஜனநாயக முறையில் நடைபெற்றது. இதற்காக 25,000 பேர் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டெல்லியில் கட்சி மேலிடத் தலைவர்கள் நான்கைந்து நாள்கள் இதற்காக ஆலோசனை நடத்தினர்’’ என்று தெரிவித்தார். பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டா, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான இணை பொறுப்பாளரக நியமிக்கப்பட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த ஆலோசனையில் இடம்பெற்றார்.
கர்நாடகாவைப் பொறுத்தவரை 1989-க்குப் பிறகு ஆட்சியில் இருந்த எந்தக் கட்சியும் தொடர்ச்சியாக வெற்றிபெற்றதில்லை. 2023 தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று தேர்ந்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஆட்சியை தக்கவைக்கும் நிலையில் அதிரடியாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது பா.ஜ.க. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 52 புதுமுகங்கள், பட்டதாரிகள், மருத்துவர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் களம் இறங்கும் பா.ஜ.க-வுக்கு இது பயன் தருமா...

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். ``கர்நாடக சட்டமன்றத் தேர்தல் குறித்து இதுவரை வந்த பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸுக்குச் சாதகமா வந்திருக்கின்றன. சமீப காலங்களில் பா.ஜ.க-விலிருந்து விலகி நிறைய எம்.எல்.சி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்கள். காங்கிரஸில் சித்தராமையா, சிவக்குமார் ஆகியோரில் யார் முதல்வர் வேட்பாளர் என்கிற குழப்பம் நீடித்தாலும்கூட மக்கள் ஏதோ ஒரு வகையில் அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஊழல், விலைவாசி, வளர்ச்சி இல்லாதது, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பொம்மை அரசுமீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
இதோடு, இஸ்லாமியர் உள் ஒதுக்கீட்டை எடுத்து, ஒக்கலிக்கா, லிங்காயத்துக்குக் கொடுத்திருப்பதால், சிறுபான்மையினர் முழு எதிர்ப்பில் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிர்ப்பைக் கிளப்பி இந்துத்துவா அரசியலை உள்ளே கொண்டுவந்து வாக்கு வாங்க நினைக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் பா.ஜ.க உட்கட்சி மோதலும் அதிகமாக இருக்கிறது. நிறைய தொகுதிகளில் யார் யாருக்கு சீட் கிடைக்கவில்லையோ அவர்களெல்லாம் அதிருப்தியில் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். புதிதாகக் கொடுக்கப்பட்ட 52 இடங்களில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதேவேளையில் மக்கள் ஆதரவு காங்கிரஸுக்கு இருக்கிறது என்றாலும்கூட வாக்காக மாற்றக்கூடிய திறமை காங்கிரஸுக்கு இருக்கிறதா என்பது தெரியாது. அதேநேரத்தில் பா.ஜ.க-வில் உட்கட்சி குழப்பம், ஊழல், ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தாலும் மோடியின் பிரசாரம், அவர்கள் கிளப்பும் வெறுப்புவாத அரசியல், அடிமட்ட கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் பணிகள் வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அப்படியில்லாமல் நெருங்கிவந்து இழந்தாலும், ஆறேழு மாதங்களில் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைத்துவிடலாம் என்கிற தைரியத்திலும் இருக்கலாம். ஏனென்றால் கடந்த முறையும் இதுதான் நடந்தது” என்றார்.