Published:Updated:

`இனி ஓ.பி.எஸ் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பேன்!'- ஆண்டிபட்டி எம்.எல்.ஏ கொந்தளிக்க என்ன காரணம்?

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், ஓ.பி.எஸ் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ மகாராஜன்
எம்.எல்.ஏ மகாராஜன்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க எம்.எல்.ஏ மகாராஜன், இனி ஓ.பி.எஸ் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

OPS
OPS

ஆண்டிபட்டியில் நடந்த தி.மு.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ மகாராஜன், “ஆண்டிபட்டி தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து சட்டமன்றத்தில் 23 நிமிடங்கள் பேசினேன். நான் பேசியதை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆண்டிபட்டி பகுதியின் வறட்சியைப் போக்கும் விதமாக முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனப் பேசினேன். மதுரை, திண்டுக்கல் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் ஓ.பி.எஸ்., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிபட்டி தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள 152 கிராம மக்களின் கனவுத்திட்டமாக உள்ளது முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டம். மூலவைகையை மட்டுமே நம்பி வறட்சியின் பிடியில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் தாகம் தீர்க்கும் திட்டம் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் தவறாமல் இடம்பெறும். ஆனால், தண்ணீர்தான் வந்தபாடில்லை.

MLA Maharajan
MLA Maharajan

ஆண்டிபட்டி மக்களுக்காக முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டம் நிறைவேற்றப்படும் என எந்த மேடையில் ஓ.பி.எஸ் அறிவிக்கிறாரோ, அந்த மேடையில், அவருக்கு நான் தான் முதல் மாலை அணிவிப்பேன். அதுவரை ஓ.பி.எஸ் கலந்துகொள்ளும் எந்த அரசு நிகழ்ச்சிகளுக்கும் செல்ல மாட்டேன். தேனி கலெக்டர், வருவாய் துறையினர் என யார் அழைத்தாலும் சரி, அந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லப் போவதில்லை. ஏனென்றால் என்னை நம்பி மக்கள் வாக்களித்தனர். அவர்களுக்கான திட்டம் நிறைவேறும் வரை ஓ.பி.எஸ் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பேன்!” என்றார் ஆவேசமாக.