Published:Updated:

ஆந்திர அரசியல்: பவன் கல்யாண் - சந்திரபாபு காம்பினேஷன்... ஜெகனுக்கு எதிராகத் தாக்கத்தை ஏற்படுத்துமா?!

பவன் கல்யாண் - சந்திரபாபு நாயுடு

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் 2024-ம் ஆண்டிலேயே சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கவிருக்கிறது ஆந்திர மாநிலம். பவன் கல்யாண் - சந்திரபாபு நாயுடு இருவரும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார்களா?

ஆந்திர அரசியல்: பவன் கல்யாண் - சந்திரபாபு காம்பினேஷன்... ஜெகனுக்கு எதிராகத் தாக்கத்தை ஏற்படுத்துமா?!

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் 2024-ம் ஆண்டிலேயே சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கவிருக்கிறது ஆந்திர மாநிலம். பவன் கல்யாண் - சந்திரபாபு நாயுடு இருவரும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார்களா?

Published:Updated:
பவன் கல்யாண் - சந்திரபாபு நாயுடு

ஜனவரி 8-ம் தேதி அன்று, ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசினார். இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பு ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் 2024-ம் ஆண்டிலேயே சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கவிருக்கிறது ஆந்திர மாநிலம். அந்தத் தேர்தல்களுக்கு முன்பாக ஜன சேனாவும், தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஹைதராபாத்திலுள்ள சந்திரபாபு நாயுடுவின் வீட்டில், அவரைச் சந்தித்தார் பவன் கல்யாண். இந்தச் சந்திப்புக்குப் பிறகு இருவரும் இணைந்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராகக் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், ``ஆந்திராவின் தற்போதைய சூழல், எமெர்ஜென்சி காலத்தைவிட மோசமானது. இந்த மோசமான சூழலை எதிர்த்து ஆந்திராவில் ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் போராடுவோம். பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்துவதற்கு ஜெகன் அரசு தடை விதித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்கு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலுள்ள கொடூரமான சட்ட விதிமுறைகளைக் கொண்டுவருகிறது இந்த அரசு.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

லோகேஷ் நாயுடு (சந்திரபாபு நாயுடுவின் மகன்) மாநிலம் முழுவதும் பாதயாத்திரை நடத்துவதைத் தடுப்பதற்காகவே பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும் தடை விதித்திருக்கிறது இந்த அரசு. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற ஜெகனின் அணுகுமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த அரசின் இத்தகைய போக்குகளுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்து இரு தரப்பிலிருந்தும், `ஆந்திராவின் ஜனநாயகத்தைக் காப்பதற்கான சந்திப்புதான் இது!' என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. கூட்டணி குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையே இரண்டு கட்சியினரும் கூறிவருகின்றனர். மொத்தம் 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில், 2019 சட்டமன்றத் தேர்தலில், 151 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வி அடைந்தது. பவன் கல்யாணின் ஜன சேனாவுக்கு ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி கிட்டியது.

இந்த நிலையில், ஜன சேனாவும், தெலுங்கு தேசம் கட்சியும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்குமா என்பது குறித்து ஆந்திர அரசியலை உற்று நோக்கும் சிலர், ``பவன் கல்யாண் ஜன சேனா கட்சியைத் தொடங்கியபோது கம்யூனிஸ்ட் புரட்சியாளர் சேகுவேராதான் என்னுடைய வழிகாட்டி என்று கூறினார். பின்னர், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் - பா.ஜ.க கூட்டணியில் தனது கட்சியை இணைத்துக்கொண்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தார். ஆகையால், இம்முறை மீண்டும் சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கைகோக்க வாய்ப்பிருக்கிறது.

சந்திரபாபு நாயுடு - மோடி
சந்திரபாபு நாயுடு - மோடி

அதே நேரம், சந்திரபாபு நாயுடுவும் எப்படியாவது 2024-ல் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டுமென்ற முடிவில் இருக்கிறார். அதற்காகக் கட்சியில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டுவருகிறார். சமீபத்தில், பெரும் பொதுக்கூட்டங்களை நடத்தியிருந்தார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் சந்தித்திருப்பதால், மீண்டும் தெலுங்கு தேசம் - ஜன சேனா கூட்டணி அமையும் என்றே தெரிகிறது. பா.ஜ.க-வும் இந்தக் கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பிருக்கிறது'' என்கின்றனர்.

ஜெகனின் ஆதரவாளர்களோ, ``ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் வாக்குவங்கியை மாநிலம் முழுவதும் பலப்படுத்தி வைத்திருக்கிறார் ஜெகன். அதனால், எவ்வளவு பெரிய கூட்டணி அமைந்தாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்கிறார்கள்.

பவன் கல்யாண் - சந்திரபாபு நாயுடு
பவன் கல்யாண் - சந்திரபாபு நாயுடு

ஜன சேனாவும், தெலுங்கு தேசமும் ஏற்கெனவே கூட்டணியிலிருந்த கட்சிகள்தாம் என்பதால், மீண்டும் கூட்டணி அமைத்தால் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால், இந்தக் கூட்டணி ஆந்திர அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!