Published:Updated:

நீட் தேர்வு விவகாரத்தில் 'ஸ்கோர்' செய்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் ( Photo: Vikatan / T. Vijay )

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளில் மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகக் கருதும் பலவற்றைத் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பன்னிரண்டாம் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு மாநிலங்களிலும் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இறுதியாகச் சட்டமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தில் 11 கட்சிகள் பொதுத்தேர்வை நடத்தலாம் என ஆதரவு தெரிவித்தன. மேலும் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கேட்பு விபரங்கள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர் குழுவிடமும் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடைபெற்றது. இதன் முடிவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவித்தது. மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கொண்ட குழு ஒன்று மதிப்பெண்கள் வழங்கும் முறைகள் பற்றி ஆராய அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தரும் பரிந்துரையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அந்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் எனவும் உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

தளர்வுகள் தாராளம்... தடுப்பூசிக்கு என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா என மருத்துவர் சுமந்த் சி ராமனிடம் பேசினோம் “நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு வேண்டும் என்றால் அதை மத்திய அரசோ நீதிமன்றமோ தான் அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க அரசு நீட் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் எதன் அடிப்படையில் நீதிமன்றம் செல்வோம் என தி.மு.க அரசு சொல்கிறது என்பதும் எனக்குப் புரியவில்லை. நீட் நடத்தப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதே தனி விவாதம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவிக்கிறது. ஆனால், மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் மாநில அரசு எப்படி முடிவுகளை எடுக்க முடியும். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் எதன் அடிப்படையில் வழங்கப் போகிறார்கள் என்பது தொடர்பாக இன்னும் தெளிவான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஏனென்றால் தற்போது பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் கடந்த ஆண்டும் தேர்வு இன்றி தேர்வானவர்கள்தான். ஒன்பது அல்லது பத்தாம் வகுப்புகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றால் அதுவும் சாத்தியமாக இருக்குமா என்பதும் குழப்பமாக இருக்கிறது. இப்படி மதிப்பெண் வழங்குவதிலேயே பல சிக்கல்கள் நீடிக்கின்றன.

சுமந்த் சி ராமன்
சுமந்த் சி ராமன்

நீட் தேர்வு வேண்டாம் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு வேண்டாம் என அ.தி.மு.க அரசும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதோடு பேரவையில் சட்டம் இயற்றி அதை மத்திய அரசின் ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைத்தார்கள். பன்னிரண்டாம் வகுப்புக்கான சி.பி.எஸ்.சி மற்றும் மாநிலப் பொதுத் தேர்வுகள் ரத்தான நிலையில் தற்போது மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகள் இருக்குமா இல்லையா என்ற குழப்பத்திலேயே தற்போது மாணவர்கள் இருக்கிறார்கள். மாணவர்களின் குழப்பத்தைப் போக்குவது இது தொடர்பாக விரவில் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டால் அது தமிழகத்திற்கும் நிச்சயம் பொருந்தும்” என்றார்.

நீட் தேர்வு ரத்தில் தமிழக அரசு என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கும் என திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர், பேராசிரியர் சபாபதி மோகனிடம் பேசினோம் “மாணவர்களின் உடல்நலன், மனநலன் கருதி சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதே நோக்கத்தில் தான் தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ததோடு ஒன்றிய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதற்கான காரணமாக “இன்றைக்கு இருக்கும் சூழலில் தேர்வு நடத்துவது உகந்தது இல்லை” என்றே முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தேர்வு ரத்து செய்யப்பட்டதற்காகப் பிரதமர் மோடி சொன்ன காரணம்தான் இதுவும். இந்த ஆண்டின் சூழலைப் பொறுத்து முதல்வர் எழுதிய கடிதத்தின் சாராம்சம். ஒன்றிய அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. சமூக நீதிக்கு எதிரான என்பதால்தான் எதிர்க்கட்சியாக இருந்த போதும் தி.மு.க-வின் நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான். அதையேதான் தற்போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸும் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த ஆண்டுக்காவது நீட் தேர்வு வேண்டாம் என்று அறிவித்தால் மகிழ்ச்சியாக வரவேற்போம். நீட் தேர்வுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கும் வரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுப்பார்.

சபாபதி மோகன்
சபாபதி மோகன்

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கத் தமிழ்நாடு அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது. அந்தக் குழு வழங்கும் ஆலோசனையின்படி தான் மதிப்பெண் வழங்கப்படும். அந்த மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவம் மட்டுமல்லாது பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்து மேற்படிப்புகளிலும் சேர்க்கை நடக்கும். இல்லை நுழைவுத் தேர்வுகள் நடத்தித்தான் ஆவோம் என்று ஒன்றிய அரசு சொல்லுமானால் அதற்கு எதிராக நிச்சயம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர எதிர்வினை ஆற்றுவார்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு