Published:Updated:

திருச்சி: கிடப்பில் மலைக்கோட்டை ரோப் கார்; அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு! - நிறைவேற்றுமா திமுக?

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

1977-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 10 லட்ச ரூபாயை இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை. பிறகு வந்த ஆட்சியாளர்கள், 'ரோப் காருக்கு பதிலாக இழுவை ரயில் அமைக்கலாம்’ என்று யோசித்தனர்.

கடந்த தேர்தல் நேரத்தில் மலைக்கோட்டைக்கு ரோப் கார் திட்டத்தை நிறைவேற்றுவதாக அ.தி.மு.க-வினர் வாக்குறுதி அளித்தார்கள். அவர்கள் வெற்றிபெற்ற பிறகு, அந்தத் திட்டத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தற்போது, இந்த விவகாரத்தை தி.மு.க கையில் எடுத்திருக்கிறது. இவர்களாவது நிறைவேற்றுவார்களா என ஏங்குகிறார்கள் திருச்சி மக்கள்.

மலைக்கோட்டையில் ஆய்வு செய்யும் அமைச்சர் சேகர் பாபு
மலைக்கோட்டையில் ஆய்வு செய்யும் அமைச்சர் சேகர் பாபு

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். மாணிக்க விநாயகர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``ஐந்து திருக்கோயில்களுக்கு ரோப் கார் வசதி செய்துதரப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது.

சேகர் பாபு ஆய்வு
சேகர் பாபு ஆய்வு

அதன்படி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், திருநீர்மலை முருகன் கோயில், சோளிங்கர் நரசிம்மர் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் ரோப் கார் வசதி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கோயிலாக ஆய்வு செய்துவருகிறோம். திருச்சி மலைக்கோட்டை கோயிலிலும் ஆய்வு செய்தோம். விரைவில் நவீன தொழில்நுட்ப வசதியுடன், உலகத்தரத்தில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்’ என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துவிட்டுச் சென்றார் அமைச்சர் சேகர் பாபு.

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

இது குறித்து மலைக்கோட்டைப் பகுதி மக்களிடம் பேசினோம். ``273 அடி உயரமுள்ள மலைக்கோயிலுக்குச் செல்ல 418 படிக்கட்டுகள் உள்ளன. இந்தப் படிகள் செங்குத்தாக இருப்பதால், மலை உச்சிக்குச் செல்வதற்குள் ரொம்ப சிரமப்பட்டுத்தான் செல்ல வேண்டும். நடக்க முடியாதவர்களும் படிக்கட்டில் ஏற முடியாமல் மலையடிவாரத்தோடு திரும்பிச் சென்றுவிடுகின்றனர்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

அப்படிப்பட்டவர்களின் வசதிக்காக, ரோப் கார் அமைக்கப்பட்டால், சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இங்கு ரோப் கார் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. கடந்த 1977-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 10 லட்ச ரூபாயை இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை. பிறகு வந்த ஆட்சியாளர்கள், 'ரோப் காருக்கு பதிலாக இழுவை ரயில் அமைக்கலாம்’ என்று யோசித்தனர். அதோடு மலைக்கு லிஃப்ட் வசதி செய்யலாம் என்றனர்.

இப்படியே எழுந்த புதிது புதிதான யோசனையின் விளைவு இன்றுவரை ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படவே இல்லை. கடந்த 1998-ம் ஆண்டு 3 கோடி ரூபாய் மதிப்பில் ரோப் கார் அமைக்கத் திட்டம் போடப்பட்டது. ஆனால் நிதி திரட்ட முடியாமல் மீண்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்தநிலையில், கடந்த 2016 தேர்தல் நேரத்தில்கூட அ.தி.மு.க-வினர் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்கள்.

மலைக்கோட்டை
மலைக்கோட்டை

அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜன் இதைப் பற்றிக் கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை. 1970-களிலிருந்து இந்தத் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் இந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசுவார்கள். நிறைவேற்றியபாடு இருக்காது. இப்போது, தி.மு.க ஆட்சியில் ரோப் கார் விவகாரத்தை நிறைவேற்றுவதாக மீண்டும் பேசுகிறார்கள். இவர்களாவது நிறைவேற்றுவார்களா என்று பார்ப்போம்” என்று ஆதங்கப்படுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு