Published:Updated:

அம்மா உணவகம் முதல் ஓமந்தூரார் மருத்துவமனை வரை... ஈகோ பார்க்காத தி.மு.க அரசின் போக்கு தொடருமா?

ஸ்டாலின் - ஓ.பி.எஸ்
ஸ்டாலின் - ஓ.பி.எஸ்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது பதவியேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் செயல்படுத்திய திட்டத்துக்கும் மதிப்பளித்து வருகிறது... தி.மு.க-வின் இந்தப் போக்கு தொடருமா?

புதிதாகப் பொறுப்பேற்கும் எந்த ஓர் அரசும் தனக்கு முன் ஆட்சியிலிருந்தவர்கள் கொண்டுவந்த திட்டங்களை முடக்கிவைப்பது அல்லது திட்டங்களின் பெயர்களை மாற்றுவது என்பதிலிருந்துதான் தங்களின் ஆட்சியையே தொடங்குகிறார்கள். இதற்குக் கடந்த காலங்களில் மத்தியிலும், தமிழகத்திலும் அமைந்த தி.மு.க., அ.தி.மு.க ஆட்சியிலும் பல நூறு விஷயங்கள் சாட்சியாக இருக்கின்றன. ஆனால், தற்போது பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம், கல்வித் தொலைக்காட்சி உட்பட எந்தத் திட்டத்தையும் முடக்கவும் இல்லை; பெயர் மாற்றுவதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை. கருணாநிதியின் கனவுத் திட்டமான ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்ட புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தை அதன் பின் வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு, அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியது. அப்போது அதற்கு தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது ஆட்சி அமைத்துள்ள தி.மு.க அரசு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறது.

ஸ்டாலின் பதவியேற்பு
ஸ்டாலின் பதவியேற்பு

“முதல்வராகப் பொறுப்பேற்ற விழாவில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கியது, எதிர்க்கட்சியினருடன் இணக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதுவது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய அரசியல் வரலாற்றுக்குத் தொடக்கப்புள்ளியை வைத்திருக்கிறார்” என்று அரசியல் விமர்சகர்கள் பாராட்டிவருகின்றனர்.

ஓ.பி.எஸ்., பி.கே., இன்னும் பல வி.ஐ.பி.க்கள்..! - மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா புகைப்படத் தொகுப்பு

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என ஈகோ பார்க்காமல் தொடங்கியிருக்கும் தி.மு.க-வின் இந்த நடைமுறைகள் தொடருமா? தி.மு.க செய்தித் தொடர்பாளர், கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் பேசினோம்:

“வெறுப்பு அரசியலின் அடிப்படையில் தி.மு.க கொண்டுவந்த பல்வேறு சிறந்த திட்டங்களைச் செயல்படுத்தாமல் முடக்கிய ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிபோல் கழக ஆட்சி இருக்காது. அவர்கள்தான் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரவாயல் பறக்கும் சாலைத்திட்டம் உள்ளிட்ட தி.மு.க அரசின் பல நல்ல திட்டங்களை முடக்கினார்கள். மாறாக தி.மு.க கட்சியாக இல்லாமல் அனைவருக்குமான அரசாகச் செயல்படும். கடந்தகால ஆட்சியில் தொடர வேண்டிய திட்டங்கள் இருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாகத் தொடருவோம். தவிர்க்க வேண்டியவை இருந்தால் எந்தத் தயக்கமும் இல்லாமல் நீக்குவோம். எதையும் அரசியல்ரீதியாக இல்லாமல், தமிழக மக்களின் நலன் சார்ந்துதான் தி.மு.க அரசு செயல்பட்டுவருகிறது. கடந்த பத்து நாள்களில் தி.மு.க செயலாற்றியவிதம் அதன் வெளிப்பாடுதான். இது இனியும் தொடரும். முக்கியமான ஒரு விஷயம், தி.மு.க மக்களுடன் நட்புணர்வுடன் இருக்கும், கொரோனா காலத்தில்கூட மக்களுடன் காவல்துறை எந்த அளவுக்கு இணக்கமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். கொரோனா பொதுமுடக்கத்தில் மக்கள் பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்கும் வகையில் ரூ.4,000 நிவாரண நிதி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தினோம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கான கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது. தற்போது இருக்கும் நிதிச்சுமையையும் தாண்டி மக்கள்நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

எல்லாவற்றுக்கும் பின் கடந்தகாலத்தின் எந்த தீமையும், மக்கள் விரோத நடவடிக்கையும் நீடிக்கக் கூடாது. ஜனநாயகத்தின்பாற்பட்ட, மக்கள்நலனைச் செயல்படுத்தும் அரசாக இருக்க வேண்டும் என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. மக்கள் அச்சமற்ற வாழ்க்கை வாழ இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். தி.மு.க அரசு மாநில உரிமைகளை மட்டுமல்ல, மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும்” என்றார்.

தி.மு.க-வின் நடவடிக்கைகள் குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசினோம்:

“புதிதாகப் பதவியேற்ற ஜோரில்தான் இப்படிச் செய்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வினர் செய்த கட்டப்பஞ்சாயத்துகளாலும், அராஜகத்தாலும்தான் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் இவர்கள் தவித்தார்கள். அதைப் புரிந்துகொள்ளாமல் தேர்தலில் வெற்றிபெற்ற இரண்டாவது நாளே அம்மா உணவகத்திலிருந்த போர்டுகளை உடைத்து அராஜகம் செய்கிறார்கள். சரியாகத் தேர்வு நடத்தவில்லை. புதிதாகத் தேர்வு நடத்தப்போகிறோம் என்று சொல்கிறார்கள். எம்.ஜி.ஆரின் சிலையை உடைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் தி.மு.க எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாது என்பதற்கான உதாரணங்கள். ஸ்டாலின் சில முடிவுகளை எடுத்தாலும், அவருடன் இருப்பவர்களெல்லாம் அவருடைய அப்பாவுடன் இருந்தவர்கள்தானே... அவர்களை ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியுமா? இயற்கைப் பேரழிவுகள், கொரோனா காலகட்டம் என 10 ஆண்டுகளாக உயிரைக் கொடுத்து மக்களுக்காக உழைத்த அ.தி.மு.க-வையே மக்கள் சரியாக மதிப்பிடவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அப்படியிருக்கும்போது பத்தே நாளான தி.மு.க அரசை எப்படி எடைபோட முடியும்? அப்படி மதிப்பிட்டாலும் அது தவறான மதிப்பீடாகத்தானே இருக்கும்... அ.தி.மு.க அரசு ஆட்சியில் இருக்கும்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஒருவர்கூட இறக்கவில்லை. இன்றைக்கு செங்கல்பட்டு, மதுரை என எத்தனை இடங்களில் எவ்வளவு பேர் ஆக்ஸிஜன் முறையாக வழங்கப்படாததால் இறந்திருக்கிறார்கள்... இதெல்லாம் தி.மு.க-வின் நிர்வாகக் கேட்டைத்தான் காட்டுகின்றன.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி
அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி

ஆரம்பத்திலேயே இத்தனை பிரச்னைகள். இவையெல்லாத்தையும் யோசித்துத்தான் இத்தனை காலமாக தி.மு.க-வை மக்கள் புறக்கணித்தார்கள். அம்மாவின் படத்தைப் பேரவையில் வைப்பதைவிட அவர் கொண்டுவந்த திட்டங்களுக்கு முறையான அங்கீகாரம் கொடுத்து அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்து முறையான ஆட்சி நடைபெற அ.தி.மு.க தொடர்ந்து பாடுபடும். அந்த அளவுக்கு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படும்” என்றார் அவர்.

இந்தக் கருத்துகள் கட்சிரீதியாக இருந்தாலும், அரசு நல்லவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி, வெறுப்பரசியலை புறந்தள்ளி மக்களுக்கான அரசாகத் தொடர வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு