Published:Updated:

புதிய தேசிய கல்விக் கொள்கை - நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்குமா திமுக அரசு?

ஸ்டாலின் - அன்பில் மகேஷ்!
ஸ்டாலின் - அன்பில் மகேஷ்!

தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனையில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது தி.மு.க அரசு. தொடர்ந்து அதை எதிர்த்துவரும் நிலையில் எதிர்வரும் காலங்களிலும் தி.மு.க அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்குமா?

புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகவும், இணையவழி கல்வி குறித்தும் அனைத்து மாநிலங்களின் கல்விச் செயலாளர்களுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்க மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் கருத்துகள், பரிசீலனைகளைத் தெரிவிக்க மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் எழுதியிருந்தார்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு, மத்திய கல்வித்துறை அமைச்சகத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால், தமிழக அரசு கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. மேலும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ``குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ திணிக்கப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் தேசிய கல்விக் கொள்கையைப் பார்க்கும்போது தோன்றுகிறது. மேலும், தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டுவைக்கும்விதமாக மும்மொழிக் கொள்கை இருக்கிறது. இட ஒதுக்கீடு பற்றியும் இந்தக் கல்விக்கொள்கையில் எதையும் குறிப்பிடவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் இவற்றைத் தொடர்ந்து தி.மு.க கூறிவருகிறது.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக அரசின் சார்பாக இவற்றையெல்லாம் சுட்டிக்காட்ட முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அமைச்சர்கள் பங்கேற்க அனுமதி கோரி நாங்கள் எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவேதான், மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்காமல் புறக்கணித்தோம். தி.மு.க எந்த விஷயத்தைக் கையில் எடுத்தாலும் கொள்கை மாறாமல், கருத்து மாறாமல் இறுதிவரை போராடும். தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் நாங்கள் சண்டை போடவில்லை. எங்களது கருத்துகளை எடுத்துவைக்க வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்டு வருகிறோம்.

தமிழக அரசின் கடிதத்தைத் தாமதமாகப் பார்த்து மத்திய அரசு அழைத்தாலும், எங்களுடைய கருத்துகளை தெரிவிக்கத் தயாராக இருக்கிறோம். அதற்கு முன்பாக, முதலமைச்சருடன் கலந்து பேசி எங்களுடைய கருத்துகளை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பவும் முயல்வோம். நாம் சொல்லும் திருத்தங்களைச் செய்தால் மட்டும்தான், தேசிய கல்விக்கொள்கையைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்” என்றார். அதற்கு முன்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் ``எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை நுழைய விட மாட்டோம்” எனத் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

கல்வி - காத்திருக்கும் சவால்கள்! - தமிழகத்துக்குத் தேவை பிரத்யேக கல்விக் கொள்கை!

தேசிய கல்விக் கொள்கை என்ற பேச்சை மத்திய அரசு தொடங்கியது முதல் தி.மு.க தனது எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறது. தி.மு.க-வின் இந்த எதிர்ப்பு நிலை தொடருமா என்பது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``கொரோனாவின் இரண்டாம் அலையில் இந்தியா சிக்கித் தவிப்பதை எண்ணி, உலகமே வருந்திக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவின் பிரதமர் மோடி அரசு ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளை உள்ளடக்கிய திட்டத்தை இங்கே எப்படிச் செயல்படுத்துவது எனக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது. எல்லா தேர்வுகளையும் ரத்து செய்த பின்னரும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது?

மாநிலத்துக்கு ஏற்ப நாங்கள் சொல்லும் திருத்தங்களை தேசியக் கல்விக் கொள்கையில் மத்திய அரசு கொண்டுவரவில்லை என்றால் அதைத் தமிழகத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனத் தேர்தல் அறிக்கையிலேயே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மாநிலக் கொள்கைக்கு எனத் தனியாக ஆணையம் அமைத்து தமிழகத்துக்கு ஏற்ற வகையில் கல்விக் கொள்கையை தி.மு.க அரசு உருவாக்கும். அதைத்தான் இங்கு செயல்படுத்துவோம் என்று சொல்லியிருக்கிறோம். இந்தியாவில் எந்த மாநிலமும் கல்விக்காகத் தனிக் கொள்கையை உருவாக்கவில்லை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஒன்றிய அரசுக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்ற அறத்தின் அடிப்படையில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷைப் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்பேரில் பங்கேற்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கடிதம் எழுதினார். அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கிறோம் என்றோ, இல்லை என்றோ எந்த பதிலும் அளிக்கவில்லை.

பள்ளிக்கல்வியில் மத்திய அரசு மாற்றத்தைக் கொண்டுவந்தால் மாநில அரசின் ஒப்புதலும், மாற்றம் கொண்டு வந்த மத்திய அரசின் ஒப்புதலும் இருக்க வேண்டும். அதுதான் நமது அரசியலமைப்புச் சட்டமும் சொல்வது. மாநில அரசு சொல்லும் மாற்றங்களில், மாற்றுக்கருத்து இருந்தால் விவாதிப்போம். மக்களுக்கு எது சரியோ அதைச் செயல்படுத்துவோம் என்றுதான் கழக அரசு சொல்லிவருகிறது. தேசியக் கல்விக் கொள்கையை தி.மு.க அரசு கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் மதவாத, சனாதனக் கொள்கைகளைக் கல்வியில் மாற்றம் என்ற பெயரில் மக்களிடையே பா.ஜ.க திணிக்க முயல்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

தமிழகக் குழந்தைகளின் நலனுக்கு ஏற்ற கொள்கை, தேசிய கல்விக் கொள்கையிலிருந்தால் அதைத் தாராளமாக வரவேற்போம். ஆனால், அதற்கு எதிராக இருக்குமானால் தி.மு.க அரசு முழு மூச்சாகத் தொடர்ந்து எதிர்ப்போம்’’ என்றார்.

தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க தொடர்ந்து எதிர்த்துவருவது குறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.``மத்திய அரசு நடத்திய கூட்டம் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டமே தவிர ஆலோசனைக் கூட்டம் அல்ல. இதில் தமிழக அரசின் கல்விச் செயலாளர்கள் நிச்சயம் கலந்துகொண்டிருக்க வேண்டும். இது தெரிந்தும் தமிழக அரசு புறக்கணித்திருந்தால் அது தவறு. இல்லை இதுவே தெரியாது என்று தி.மு.க அரசு சொல்லுமானால் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். 1999-லிருந்து 15 வருடங்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தி.மு.க அமைச்சர்கள், அவர்கள் துறை சார்ந்த செயலாளர்கள் கூட்டத்துக்கு மாநிலங்களின் அமைச்சர்களை அழைத்திருக்கிறார்களா என்ற விவரங்களை வெளியிட வேண்டும். கல்விக் கொள்கையை பொறுத்தவரஒ மும்மொழிக் கொள்கை உட்பட அனைத்துத் திருத்தங்களும் மாநில அரசின் முடிவுக்கு உட்பட்டுத்தான் இருக்கும் என்பதை மத்திய அரசு தெளிவாகச் சொல்லிவருகிறது. ஆனாலும் இந்தி, குலக்கல்வி ஆகியவற்றைத் திணிக்கிறார்கள் எனத் தொடர்ந்து பேசிவருகிறார்கள்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தேசியக் கல்விக் கொள்கையில் மூன்று மொழி வேண்டுமா இல்லையா, ஹிந்தி வேண்டுமா இல்லையா என்பதை மாநிலங்களே முடிவு செய்யும். அதில் மத்திய அரசு எந்த வகையிலும் தலையிடாது. சிறந்த கல்வியை, கல்வியாளர்களைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அரசியல்வாதிகளின் கைகளில் இருக்கின்றன. அதன் மூலம்தான் அவர்கள் வருமானம் பார்த்துவருகிறார்கள். எனவேதான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்துவருகிறார்கள்” என பதிலளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு